மத்தியப்பிரதேச அரசியல் சர்ச்சை: 'கமல்நாத் ராஜிநாமா செய்யமாட்டார்' - காங்கிரஸ்

கமல்நாத்

பட மூலாதாரம், Getty Images

மத்தியப்பிரதேச அரசியலில் நீடித்துவரும் குழப்பம் தற்போது மேலும் தீவிரமாகி உள்ளது.

மத்தியப்பிரதேச காங்கிரஸ் கட்சியின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பார்க்கப்பட்ட ஜோதிராதித்யா சிந்தியா, கடந்த சில நாள்களாக வீசிய அரசியல் புயலுக்குப் பிறகு கட்சியில் இருந்து விலகி தலைமைக்கு அதிர்ச்சி அளித்த நிலையில், அவருக்கு ஆதரவாக ஆறு அமைச்சர்கள் உள்பட 22 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர்.

இந்நிலையில், இன்று மாலையில் முதல்வர் கமல்நாத் தலைமையில் அவரது இல்லத்தில் நடந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின்பின், கமல்நாத் தனது பதவியை ராஜிநாமா செய்யமாட்டார் என்றும், காங்கிரஸ் கட்சி அதிருப்தியில் உள்ள எம்எல்ஏக்களை சமாதானப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்போவதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மாநில அமைச்சர் பி சி ஷர்மா, ''சட்டப்பேரவையில் எங்களுக்கு பெரும்பான்மை உள்ளது. சிந்தியா ஆதரவு எம்எல்ஏக்கள் அனைவரும் எங்களுடன் தொடர்பில் உள்ளனர். சரியான நேரம் வரும்போது அவர்கள் எங்களை ஆதரிக்க முன்வருவர்'' என்று கூறினார்.

இந்நிலையில், ஒரு முக்கிய நிகழ்வாக, காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஜோதிராதித்ய சிந்தியாவுக்கு ஆதரவாக தங்கள் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்த அதிருப்தி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை சந்தித்து பேச அவர்களின் இருப்பதாக கூறப்படும் பெங்களூருவுக்கு மூன்று மாநில அமைச்சர்கள் செல்லவுள்ளதாக அம்மாநில காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் சுரையா நியாஸி குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், AFP

இதனிடையே, மத்தியபிரதேச மாநில பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அம்மாநில தலைநகரான போபாலில் இரவு 8 மணி அளவில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது குறித்து எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை.

மத்தியப்பிரதேச மாநில காங்கிரஸ் தலைவர்களில் முக்கியமானவராக கருதப்படும் ஜோதிராதித்யா சிந்தியா மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் பதவிவிலகல் அம்மாநில அரசியலில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஜோதிராதித்யா சிந்தியா

முன்னதாக ஜோதிராதித்யா சிந்தியா சோனியா காந்திக்கு எழுதி உள்ள கடிதத்தில், கடந்த 18 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளேன். இங்கிருந்து விலக வேண்டிய நேரம் வந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, உடனடியாக அவர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

மேலும் அவர், "என்னுடைய குறிக்கோள் தொடக்கத்திலிருந்தே ஒன்றுதான். என் மாநிலத்துக்கும், என் நாட்டுக்கும் தொண்டு செய்ய வேண்டும் என்பதுதான் அது. ஆனால், இந்தக் கட்சியில் இருந்துகொண்டு அதை செய்ய முடியும் என நான் நம்பவில்லை," என அந்த கடித்தத்தில் கூறியுள்ளார்.

முன்னதாக திங்கள்கிழமை காலை பிரதமர் மோதியை சந்தித்து உரையாடினார் ஜோதிராதித்யா சிந்தியா. சந்திப்பின் போது அமித் ஷாவும் உடன் இருந்தார்.

இந்த சந்திப்புக்குப் பிறகே சிந்தியா கட்சியிலிருந்து விலகினார்.

தமது விலகலை சிந்தியா செவ்வாய்க்கிழமை டிவிட்டர் மூலம் அறிவித்தாலும், சோனியா காந்திக்கு அனுப்பிய கடிதத்தில் மார்ச் 9 என்று தேதி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆட்சியை கவிழ்க்க சதி

இது, மாநிலத்தில் ஆட்சியை கவிழ்ப்பதற்கான சதி என பாரதிய ஜனதா கட்சியை குற்றஞ்சாடினார் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்.

மாஃபியாகளுக்கு எதிராக கமல்நாத் செயல்பட்டார். அதன் காரணமாகவே மக்கள் தீர்ப்புக்கு எதிராக இந்த சதி திட்டத்தை மேற்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் திக் விஜய் சிங்.

எம்.எல்.ஏ.க்களுடன் மாயமான சிந்தியா

கடந்த சில நாள்களாகவே மத்தியப் பிரதேச அரசியல் களம் கொந்தளித்து வந்தது. கடந்த 2018ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவை தோற்கடித்து காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடித்தது. அந்த வெற்றிக்குப் பின்னால் தெரிந்த முகங்களில் சிந்தியா முக்கியமானவராக கருதப்பட்டார். இந்நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு சிந்தியா மற்றும் 17 எம்.எல்.ஏ.க்கள் தலைமறைவாயினர். அவர்கள் பெங்களூருக்கு சென்றதாகவும் கூறப்பட்டது.

ஆறு அமைச்சர்கள் உட்பட ஜோதிராதித்யா சிந்தியா ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் 19 பேர் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: