கொரோனா வைரஸ்: எகிப்து கப்பலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

  • மு. ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
கொரோனா வைரஸ்: எகிப்து கப்பலில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள்

பட மூலாதாரம், Getty Images

தமிழகத்திலிருந்து எகிப்து நாட்டைச் சுற்றிப் பார்க்கச் சென்ற 17 தமிழர்கள் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாகப் அவர்கள் பயணித்த கப்பலிலிருந்து வெளிவரமுடியாமல் தவித்து வருகின்றனர்.

உலகப் புகழ்பெற்ற நைல் நதியில் மிதந்தவாறு எகிப்து நாட்டைச் சுற்றி பார்க்க 'ஏ சாரா' எனும் சொகுசு கப்பல் நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் பணியாட்களோடு கடந்த வாரம் அஸ்வான் நகரிலிருந்து கிளம்பியுள்ளது.

கடந்த வியாழக்கிழமையன்று, லக்சர் நகரத்தை அடைந்தபோது கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கப்பல் நிறுத்திவைக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை தொடங்கியதாக பிபிசி தமிழிடம் தெரிவிக்கிறார் கப்பலில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த வனிதா ரங்கராஜன்.

"நான் ஒரு வரலாற்றுத்துறை பேராசிரியர். எகிப்தில் உள்ள பிரமிடுகளை பார்க்கவேண்டும் என்ற ஆசை நீண்ட நாட்களாக இருந்தது. நானும் எனது கணவரும் பிப்ரவரி 27 ஆம் தேதி எகிப்து வந்தடைந்தோம். இங்கு வந்தபோது கொரோனா பற்றிய அச்சுறுத்தல் எதுவுமில்லை. ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகளோடு கெய்ரோ நகரை கண்டு ரசித்தோம்'' என்று கூறினார் வனிதா.

"மேலும், எகிப்தில் உள்ள முக்கிய சுற்றுலாத்தலங்களையும் பார்த்து ரசித்து வந்தோம். நைல் நதியில் கப்பலில் பயணித்துக்கொண்டிருந்த போது கொரோனா பரிசோதனைக்காகக் கப்பல் நிறுத்தப்பட்டது. பரிசோதனைக்கு பின் மீண்டும் கப்பல் கிளம்பிவிடும் என நினைத்திருந்தோம். ஆனால், கப்பலில் இருந்த பலருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டதால், தற்போது கப்பல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பயணத்திட்டத்தின்படி மார்ச் 7-ஆம் தேதி எகிப்திலிருந்து கிளம்பி இந்தியா வந்தடைந்திருக்க வேண்டும். ஆனால், கப்பலிலிருந்து எப்பொழுது கிளம்பும் என தெரியவில்லை" என்று மேலும் தெரிவித்தார் வனிதா.

பட மூலாதாரம், Getty Images

இவர் பொள்ளாச்சியில் ஆதரவற்றோர்களுக்கான தன்னார்வ தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

"கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக கப்பல் நிறுத்திவைக்கப்பட்டதோடு, கப்பலில் பயணிப்பவர்கள் அனைவரும் தங்களது அறைகளைவிட்டு வெளியே வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால், கடந்த 4 நாட்களாக அறைக்குள்ளேயே நானும் எனது கணவரும் முடங்கிக்கிடக்கிறோம். தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. சமையலறைகள் மூடப்பட்டுள்ளதால், வெளியிலிருந்து உணவு கொண்டுவரப்படுகிறது. சகபயணிகளைச் சந்தித்துப் பேசக்கூட அனுமதியில்லாமல் தனிமையில் தவித்து வருகிறோம். சுற்றுலாவிற்காக வந்து சிறையில் அடைபட்டது போல் நாங்கள் உணர்கிறோம்." என்கிறார் இவர்.

படக்குறிப்பு,

வனிதா

'ஏ சாரா' கப்பலில் உள்ள 17 தமிழர்களில் பெரும்பாலானோர் ஐம்பது வயதை தாண்டியவர்கள் என்பதால் மனரீதியான பாதிப்புகளை அதிகம் எதிர்கொள்வதாகத் தெரிவிக்கிறார் வனிதா.

"நாள் முழுவதும் அறைக்குள் முடங்கிக்கிடக்கிறோம். கப்பலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது. செய்தித்தாள்கள்கூட வழங்கப்படுவதில்லை. இதனால், எங்கள் அறைக்கு வெளியே என்ன நடக்கிறது என்று தெரிந்துகொள்ள முடியவில்லை. கப்பலில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறுகின்றனர். கொரோனா பயம் ஒரு பக்கம், தனிமை மற்றொரு பக்கம் என நைல் நதியில் மிதந்தாலும் நரகத்தில் இருப்பது போலத் தோன்றுகிறது" என்கிறார் வனிதா.

கப்பலில் சிக்கித்தவிக்கும் தமிழர்கள் குறித்து சமீபத்தில் வனிதாவின் மகள் சரண்யா, சமூகவலைதளங்களில் பதிவிட்டார். இதனையடுத்து, எகிப்து நாட்டில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் கப்பலில் சிக்கியுள்ளவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர். அவர்களை பாதுகாப்பாக இந்தியாவிற்கு மீட்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

"கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக 15 நாட்கள் அவர்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும். இதனால், கப்பலில் இருந்து வெளியேற்றப்படாமல் எனது பெற்றோர்கள் உட்பட 17 தமிழர்கள் சிக்கியுள்ளனர். வயது மூப்பின் காரணமாக இவர்களுக்கு உடல் மற்றும் மனரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். எனவே, கப்பலில் உள்ள தமிழர்களை இந்தியாவிற்கு அழைத்துவந்து கண்காணிப்புகளை தொடர வேண்டும்" என தெரிவிக்கிறார் சரண்யா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: