நிர்பயா பாலியல் வல்லுறவு: குற்றவாளிகள் தூக்கிலிடப்பட்டதால் பெண்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் கிடைக்குமா?

நிர்பயா படத்தின் காப்புரிமை Getty Images

பலியான இளம்பெண், `அச்சமற்றவர்' என பொருள்படும் வகையில் நிர்பயா என கூறப்படுகிறார். ஆனால் உண்மையில் பெரும்பாலான பெண்கள் அப்படி உணரவில்லை.

இந்திய தலைநகர் டெல்லியில் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு 23 வயதுப் பெண் ஒருவர், ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் என நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்ட நான்கு பேருக்கும் தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிசம்பர் 2012ல் நிகழ்ந்த கொடூரமான அந்த நிகழ்வின் இறுதிக்கட்ட நடவடிக்கையாக தூக்கு தண்டனை அமைந்துள்ளது. அந்தச் சம்பவம் ஒட்டுமொத்த இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி, ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்கு வந்து போராடியதால், உலகின் கவனம் ஈர்க்கப்பட்டது.

அரிதான வழக்குகளில் மரண தண்டனை விதிப்பது உள்ளிட்ட விதிகளை சேர்ப்பது உள்பட, சட்டங்களை கடுமையானதாக ஆக்கும் கட்டாயம் அரசுக்கு ஏற்பட்டது.

மரண தண்டனை விதிப்பதற்கு உகந்த வழக்காக இது இருக்கிறது என்று நீதிபதிகள் கருதினர். குற்றவாளிகளின் பலகட்ட முயற்சிகளுக்குப் பிறகு. மார்ச் 20-ஆம் தேதி குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இந்தக் குற்றச் செயல் பற்றி பலத்த கூக்குரல் எழுந்தாலும், விரைவில் இதில் நீதி வழங்கப்படும் என்று அரசு உறுதி அளித்திருந்தாலும், நீதிமன்றத்தின் வாசலில் இந்த வழக்கு ஏழு ஆண்டுகளுக்கு மேல் இழுத்துக் கொண்டு போய்விட்டது.

குற்றவாளிகள் தூக்கில் போடப்பட்டதை பலியான நிர்பயாவின் குடும்பத்தினர் வரவேற்றுள்ளனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்ற இயக்கத்தின் முகமாக இருந்து வந்த பலியானவரின் தாயார் ஆஷா தேவி ஒரு விஷயம் முடிவுக்கு வந்துவிட்டதைப் போல இப்போது உணர்வார்.

ஆனால், இதனால் இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பு பெற்று விடுவார்களா?

இல்லை - என்பதுதான் இந்தக் கேள்விக்கு சிறிய அளவிலான பதிலாக இருக்கும்.

டிசம்பர் 2012-ல் இருந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பற்றி அதிக தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது என்றாலும், இதேபோன்ற சம்பவங்கள் இந்தியாவில் தலைப்புச் செய்திகளில் இடம் பிடித்துள்ளன.

ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடக்கின்றன என்றும், அந்த எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது என்றும் அரசின் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன.

சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கையின்படி, 2018 ஆம் ஆண்டில் 33,977 பாலியல் பலாத்கார வழக்குகளைக் காவல் துறையினர் பதிவு செய்துள்ளனர் - அதாவது சராசரியாக ஒரு நாளுக்கு 93 சம்பவங்கள் நடந்திருப்பதாக அந்த அறிக்கை கூறுகிறது.

பிரச்சினையின் ஒரு பகுதியை மட்டுமே புள்ளிவிவரங்கள் காட்டும் - ஆயிரக்கணக்கான பாலியல் பலாத்காரங்கள், பாலியல் அத்துமீறல்கள் காவல் துறையினரின் பார்வைக்கே வருவதில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

அவமானம் ஏற்படுமே என்று அஞ்சியோ அல்லது சமூகத்தில் முத்திரை குத்திவிடுவார்கள் என்று அஞ்சியோ அல்லது தங்களை நம்ப மாட்டார்கள் என்று கவலைப்பட்டோ, பெண்கள் இதுபற்றி காவல் துறையிடம் புகார் தெரிவிப்பதில்லை என்று தனிப்பட்ட முறையில் நான் அறிந்திருக்கிறேன்.

படத்தின் காப்புரிமை AFP

அப்போதும்கூட, தினசரி பத்திரிகைகளில் இதுபோன்ற வன்முறைகள் குறித்த செய்திகள் நிறைந்திருப்பதைப் பார்த்தால், யாருக்குமே பாதுகாப்பு இல்லை என்று தெரிகிறது - இதில் பாதிக்கப்படுபவர் எட்டு மாத கைக் குழந்தையாக இருக்கலாம் அல்லது 70 வயது மூதாட்டியாகவும் இருக்கலாம். அந்தப் பெண் பணக்காரராகவோ அல்லது ஏழையாகவோ அல்லது நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவராகவோ இருக்கலாம். பாலியல் தாக்குதல் கிராமத்தில் நடக்கலாம் அல்லது பெரிய நகரில் நடக்கலாம். வீட்டில் நடக்கலாம் அல்லது தெருவில் நடக்கலாம்.

பாலியல் தாக்குதலில் ஈடுபடுபவர்கள் குறிப்பிட்ட மதம் அல்லது சாதியைச் சார்ந்தவர்கள் அல்ல. அவர்கள் பல்வேறு சமூக மற்றும் பணவசதி பின்னணி கொண்டவர்களாக இருக்கின்றனர்.

அவர்கள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். வீடுகளில், விளையாட்டு மைதானங்களில், பள்ளிக்கூடங்களில், தெருக்களில் - ஒரு பெண் தன் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி வரும் அந்தத் தருணத்துக்காகக் காத்திருக்கிறார்கள்.

நவம்பர் மாதம், 27 வயதான கால்நடை பெண் மருத்துவர் ஹைதராபாத் நகரில் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். பின்னர் அவரை உயிரோடு தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

சின தினங்கள் கழித்து, உத்தரப்பிரதேச மாநிலம் உன்னாவ் மாவட்டத்தில் ஏற்கெனவே பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான ஒரு பெண், குற்றவாளிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் சாட்சியம் அளிக்கச் சென்ற வழியில் எரிக்கப்பட்டார். 90 சதவீத தீக்காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் 3 நாட்கள் கழித்து உயிரிழந்தார்.

உன்னாவில் ஜூலை மாதம் நடந்த ஒரு கார் விபத்தில் வேறொரு பெண் பலத்த காயமடைந்தார். ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டார் என்று அந்தப் பெண் குற்றச்சாட்டு கூறிய நிலையில், அந்த விபத்து நடந்தது. அந்த விபத்தில் அந்தப் பெண்ணின் உறவினர்களான 2 பெண்களும் பலியானார்கள். பெண்ணின் வழக்கறிஞருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

கார் விபத்து சம்பவத்திற்கு முந்தைய பல சமயங்களில் தாம் புகார்கள் கொடுத்த போதெல்லாம் காவல் துறையினர் அவற்றை புறக்கணித்துவிட்டனர் என்று அந்தப் பெண் கூறியுள்ளார். உண்மையில், பாலியல் பலாத்காரம் செய்தவருடன் காவல் துறையினர் கூட்டு சேர்ந்து கொண்டு, தன் தந்தையை கைது செய்து சிறையில் அடைத்தார்கள் என்றும், தன் தந்தை சிறையில் இறந்து போனார் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன் என்று அந்தப் பெண் எச்சரிக்கை விடுத்ததை அடுத்தும், அவருடைய புகார்கள் தேசிய அளவில் செய்திகளில் இடம்பெறத் தொடங்கியதும், சட்டமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இந்த வழக்கில் அவரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்த அனைத்து வழக்குகளிலும், அதிகார துஷ்பிரயோகம், அதிகாரத்தில் உள்ளவர்கள் காட்டிய அராஜகத்தன்மை ஆகியவை காரணமாக பெண்களிடம் அதிக நம்பிக்கை ஏற்படாமல் இருக்கிறது.

விரைவான, கடுமையான தண்டனை அளிப்பது சட்டம் பற்றி மக்கள் மனதில் அச்சத்தை உருவாக்கும் என்றும், இதனால் பாலியல் பலாத்காரங்கள் குறையும் என்றும் சிலர் கூறுகின்றனர். ஆனால் ஆணாதிக்க மனப்பான்மையை உடைக்க வேண்டும், ஆண்களுக்கான போகப் பொருளாக பெண்களைக் கருதும் நிலை மாற வேண்டும் என்பதுதான் பிரச்சினைக்கான முழுமையான தீர்வாக இருக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவை பெண்களுக்குப் பாதுகாப்பான நாடாக ஆக்குவதில் குடும்பங்களும், பரவலான சமுதாயமும் தான் முக்கிய பங்காற்ற வேண்டும் என்கின்றனர் அவர்கள்; ஒவ்வொரு அத்துமீறல் நிகழ்வின் போதும் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெரியவர்கள் அதை சரியாகக் கையாள வேண்டும். எவ்வளவு சிறிய விஷயமாக இருந்தாலும், கெட்ட செயல்பாடுகளை ``பசங்க அப்படித்தான் இருப்பாங்க'' என்று கூறி புறந்தள்ளிவிடக் கூடாது.

பெண்களுக்கு மரியாதை அளிக்க ஆண்களுக்குக் கற்றுத் தருவதற்காக பள்ளிக்கூடங்களில் பாலின கல்வி பயிற்சித் திட்டங்களைத் தொடங்கி இருப்பதாக இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு கூறியுள்ளது. வளர் இளம் பருவத்திலேயே அவர்களுக்கு விஷயங்களை சொல்லிக் கொடுத்து நல்லவர்களாக ஆக்க வேண்டும் என்பதுதான் இதன் நோக்கம் என்று அரசு கூறியுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

நிச்சயமாக இது உதவிகரமாக இருக்கும். ஆனால் சீராக இதை செயல்படுத்தத் தவறினால் இதற்குப் பலன்கள் கிடைக்க தாமதமாகும் என்பதுதான் இதில் பெரிய பிரச்சினையாக இருக்கும்.

அப்படி நடக்கும் நிலை உருவாகும் வரையில், இந்தியாவில் பெண்களும், மாணவிகளும் எப்படி பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள முடியும்?

நாம் எப்போதும் செய்வதைப் போல - அதாவது நமது சொந்த சுதந்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொள்வதன் மூலம்.

இந்திய சட்டத்தின்படி, டெல்லியில் பலியானவரின் பெயரை குறிப்பிட முடியவில்லை. ஆனால் அவரை நிர்பயா - அச்சமற்றவர் என பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன. ஆனால் அப்படி (அச்சமற்றவர்) நாங்கள் உணரவில்லை என்று பெரும்பாலான பெண்கள் சொல்வார்கள்.

வெளியில் செல்லும்போது நாங்கள் கண்ணியமாக உடை அணிகிறோம். இரவில் அதிக நேரம் வெளியில் தங்குவது இல்லை. அருகில் யாரும் வராதவாறு அடிக்கடி பார்த்துக் கொள்கிறோம். கதவுகளை மூடி, கண்ணாடிகளை ஏற்றிவிட்டு தான் வாகனங்கள் ஓட்டுகிறோம்.

சில சமயங்களில் பாதுகாப்புக்கும் நாங்கள் விலை கொடுக்க வேண்டியிருக்கிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இரவில் வீடு திரும்பும்போது டயர் பஞ்சராகிவிட்டது. எனக்குத் தெரிந்த மெக்கானிக் உள்ள பெட்ரோல் நிலையம் வரை நான் காரை நிறுத்தாமல் சென்றேன்.

அதற்குள் என் டயர் நைந்து போய்விட்டது. மறுநாள் புதிய டயர் மாற்ற வேண்டியதாயிற்று.ஆனால் குறைந்த இழப்புடன் நான் சமாளிக்க முடிந்தது என்று நினைக்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :