கொரோனா வைரஸ்: இந்தியாவில் உயிரிழப்பு 9-ஆக அதிகரிப்பு - தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு Coronavirus India Latest Updates

கொரோனா வைரஸ் படத்தின் காப்புரிமை Getty Images

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர்தொழில்நுட்ப அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என்றும் உணவகங்களில் பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்க அனுமதி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் மேலும் மூன்று பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார்.

படத்தின் காப்புரிமை Getty Images

இதனிடையே, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 467-ஆக அதிகரித்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதே போன்று, கொரோனா நோய்த் தொற்றால் இதுவரை 9 பேர் இந்தியாவில் உயிரிழந்துள்ளதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 89 பேர் கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதை அம்மாநில சுகாதாரத்துறை உறுதிப்படுத்தியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

நாளை (மார்ச் 24) நள்ளிரவு முதல் உள்நாட்டு பயணிகள் விமான சேவை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இந்த தடையுத்தரவு சரக்கு விமானங்களுக்கு பொருந்தாது என்று ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

"மக்கள் பலரும் முடக்க நிலையை தீவிரமாக எடுத்து கொள்ளவில்லை. தயவு செய்து நீங்கள் உங்களை காத்து கொள்ளுங்கள், உங்கள் குடும்பத்தையும் பாதுகாப்பாக வைத்து கொள்ளுங்கள்" என்று இந்திய பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, வாரத்தின் தொடக்க நாளான இன்று, இந்திய பங்குச் சந்தைகள் கடும் வீழ்ச்சியை சந்தித்ததால் 45 நிமிடங்களுக்கு பங்கு வர்த்தகம் நிறுத்தப்பட்டது. பிறகு வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பை பங்கு சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் 3600 புள்ளிகள் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி, சுமார் 7710 ஆக வீழ்ந்தது.

இந்த மாதத்தில் இரண்டாவது முறையாக பங்கு வர்த்தகம் நிறுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பும் சரிந்துள்ளது.

எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவு மூடல்

எய்ம்ஸ் மருத்துவமனையில் புறநோயாளிகள் பிரிவும், எல்லா மையங்களும் மறு உத்தரவு வரும் வரை மூடப்பட்டிருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தே வாதிடும் திட்டம் - உச்சநீதிமன்றம் யோசனை

கொரோனா‌அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் விதமாக இந்திய உச்சநீதிமன்றத்தில் நடக்கும் வழக்குகளில் வழக்குரைஞர்கள் நேரில் வராமல் வீட்டில் இருந்தே வாதிடும் திட்டத்தை அறிமுகம் செய்வதற்கு யோசித்து வருகிறது இந்திய உச்சநீதிமன்றம்.

முடக்கப்பட்ட மாநிலங்கள் என்னென்ன?

கடந்த வியாழக்கிழமை இந்திய பிரதமர் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க, நேற்று இந்தியா முழுவதும் காலை 7 மணிமுதல் இரவு 9 மணிவரை மக்கள் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. எனினும், தமிழகத்தில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு திங்கட்கிழமை காலை ஐந்து மணிவரை சுய ஊரடங்கை நீட்டிப்பதாக தமிழக அறிவித்திருந்தது.

இதனிடையே கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் வகையில், டெல்லியில் மார்ச் 22ஆம் தேதி இரவு 9 மணியிலிருந்து மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு வரை முடக்க நிலையை அமல்படுத்துவதாக நேற்று அம்மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்.

இதன்படி, டெல்லியில் தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயங்காது எனவும் மிகவும் குறைந்த அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே போன்று, ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானா ஆகிய மாநிலங்கள் வரும் மார்ச் 31ஆம் தேதி நள்ளிரவு வரை முடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, தெலங்கானா மாநிலத்தில் உள்ள 87 லட்சம் குடும்ப அட்டைத்தாரர்களுக்கு இந்த இக்கட்டான சூழ்நிலையில் மக்கள் அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ளும் வகையில், தலா 12 கிலோ அரிசியும், 1500 ரூபாயும் வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஜார்கண்ட் மாநிலமும் மார்ச் 31 வரை முடக்கப்பட்டுள்ளது. அனைத்து கடைகள், வணிக நிறுவனங்கள், அலுவலகங்கள், தொழிற்சாலைகள், வழிபாடு தலங்கள் மற்றும் கிடங்குகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை 21 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள பஞ்சாப் மாநிலத்திலும் இம்மாத இறுதிவரை முடக்கநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பஞ்சாப் மாநிலம் முழுவதும் உடனடியாக ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

புதுச்சேரியை பொறுத்தவரை, பள்ளிகள், கல்லூரிகள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், மதுபானக்கடைகள் வரும் 31ஆம் தேதி வரை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதேபோன்று, வரும் 31ஆம் தேதி வரை புதுச்சேரியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் நிலைமை என்ன?

தமிழகத்தில் இதுவரை ஒன்பது பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அதில் ஒருவர் முழு உடல் நலன் பெற்று வீடு திரும்பியுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரை, இதுவரை மாநிலம் தழுவிய முடக்க நிலை அறிவிக்கப்படவில்லை. எனினும், மாநிலங்களுக்கு இடையே இயக்கப்படும் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் சேவை வரும் 31ஆம் தேதி வரை நிறுத்தப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images

அதே போன்று, சென்னை மற்றும் உள் மாவட்டங்களில் தேவைக்கேற்ப குறைந்த அளவில் பொது போக்குவரத்தை இயக்குவதற்கு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்தும் வகையில் இந்தியா முழுவதும் 80 மாவட்டங்களை தனிமைப்படுத்தி வைக்குமாறு மாநில அரசுகளை மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. அந்த பட்டியலில் தமிழகத்தில் உள்ள சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன. இதுகுறித்து இறுதி முடிவு எடுப்பதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில், கோயம்புத்தூரில் கொரோனா அறிகுறிகளோடு சிகிச்சை பெற்று வந்த பெண்ணுக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் இன்று (திங்கட்கிழமை) காலை தெரிவித்துள்ளார்.

ஸ்பெயின் நாட்டிலிருந்து தமிழகத்துக்கு வந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கொரோனா அறிகுறிகளோடு ஸ்பெயின் நாட்டிலிருந்து வந்த பெண்ணுக்கு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்பெண்ணின் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாகவும், அவர் குறித்துதான் அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் எனவும் நேற்று தகவல்கள் பரவின.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தனி வார்டில் அளிக்கக்கூடிய சிகிச்சைகள் குறித்து பார்வையிட வந்த மாவட்ட ஆட்சியர், ஸ்பெயின் நாட்டிலிருந்து கோவைக்கு வந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாக செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், "கோவையை சேர்ந்த இளம்பெண் உயர்கல்விக்காக ஸ்பெயின் நாட்டிற்குச் சென்று கடந்த மார்ச் 17ஆம் தேதி அன்று பெங்களூர் விமான நிலையம் வந்துள்ளார். அங்கிருந்து ரயில் மூலம் கோவைக்கு வந்துள்ளார். ஆரம்ப கட்டத்தில் கொரோனாவிற்கான அறிகுறிகள் ஏதுமில்லாத நிலையில், 19ஆம் தேதி இருமல் மற்றும் காய்ச்சல் காரணமாக கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரின் ரத்த மாதிரிகளை பரிசோதித்ததில் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு தற்போது தீவிர சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அவரது தந்தை, சகோதரி மற்றும் நண்பர் ஒருவருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் அவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் விதிகளை புறக்கணிக்கிறார்கள்: விஜயபாஸ்கர்

கொரோனா பாதிப்பை தடுக்க, வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், வீடுகளில் தனிமையாக இருக்கவேண்டும், பொது இடங்களில் இருக்கக்கூடாது என தமிழக அரசு அறிவுறுத்தியபோதும், சிலர் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதால், அவர்களால் பிறருக்கு கொரோனா பரவும் ஆபத்து உள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், வீடுகளில் தனிமைப்படுத்தவேண்டிய பயணிகளின் பட்டியல் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறையினருக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றும் அரசின் அறிவுரையை மீறுபவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் விமான நிலையங்களில், வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பிய பயணிகளுக்கு ஆரம்பகட்ட சோதனை நடத்தப்பட்டு, பலரும் அவரவர் வீடுகளில் இருக்கவேண்டும் என கைகளில் முத்திரையிடப்படுகிறது. இவ்வாறு முத்திரையிடப்படும் நபர்கள் 14 நாட்கள் வரை வீடுகளில் இருக்கவேண்டும் என அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது. அவர்களை தினமும் கண்காணிக்க, மருத்துவ பணியாளர்கள் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பில் உள்ளனர்.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், வீடுகளில் இருப்பதற்கு பதிலாக, சிலர் விதிகளை மீறிவருகின்றனர் என்றும் அவர்கள் மூலமாக பொது இடங்களில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவவாய்ப்புள்ளது என்கிறார் அமைச்சர். இதுவரை தமிழகத்தில் ஒன்பது நபர்கள் சென்னை மற்றும் ஈரோடு அரசு மருத்துவமனைகளில் கொரோனா தொற்றுக்காக சிகிச்சை பெற்றுவருகின்றனர். பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்கள், ஒரு நபர் வெளிநாட்டு பயணியோடு தொடர்பில் இருந்தவர் இருந்தவர் என்பதால், வெளிநாடுகளுக்கு செல்லாமல் தமிழகத்தில் வசிப்பவர்கள் மத்தியில் நோய் தொற்று இல்லை என அமைச்சர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், வீடுகளில் இருப்பதற்கு பதிலாக வெளிநாட்டில் இருந்து திரும்பியவர்கள் பொது வெளிகளுக்குச் சென்றால், அவர்கள் மூலம் பொது மக்களுக்கு கொரோனா பரவும் வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக அறிவிப்பு

கொரோனா தடுப்பு காரணமாக, திமுக, காங்கிரஸ், இந்திய முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் தற்போது நடைபெற்றுவரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன.

தனிமைப்படுத்துவது மட்டுமே கொரோனா நோய் தடுப்பிற்கு அவசியம் என்ற நிலையில், சட்டமன்றத்தில் கூட்டமாக அமர்ந்து விவாதம் செய்வது உகந்ததாக தெரியவில்லை எனக்கூறி, தற்போது நடைபெறும் கூட்டத்தை புறக்கணிப்பதாக திமுக தலைவர் முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தனிமைப்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்காமல், நோயை எதிர்கொள்ள கிடைக்கும் நேரத்தை வீணடிக்கிறோமோ என்ற சந்தேகம் எழுகிறது என விமர்சித்துள்ளார்.

பிரதான எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் சட்டமன்றக் கூட்டத்தொடரை ஒத்தி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் விடுத்த கோரிக்கையை ஏற்காமல் "தனிமைப்படுத்திக் கொள்வோம்" என்று அரசு அறிவித்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு எதிராகவே கூட்டத் தொடர் நடைபெறுகிறது என கருதுவதாக தெரிவித்துள்ளார். மக்களின் பாதுகாப்பு கருதியும், சட்டமன்ற உறுப்பினர்கள் அச்சத்தில் வாழும் மக்களின் பக்கத்தில் தொகுதியில் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்துடனும், தற்போது நடைபெறுகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரின் எஞ்சிய நாட்களை இன்று (23.3.2020) முதல் திமுக உறுப்பினர்கள் புறக்கணிக்கிறார்கள் என தெரிவித்துள்ளார்.

''நோய் வரும் முன்பே "தனிமைப்படுத்திக்" கொள்ளாத "இத்தாலி" நாட்டின் பாதிப்பையும், முன்கூட்டியே நோய் அறிகுறி குறித்த தகவல் கிடைத்தும் தயாராகாமல் அலட்சியம் செய்த சீனாவின் பாதிப்பையும் நமது மாநில அரசு உணரத் தவறியிருப்பது வருத்தமளிக்கிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கை" மற்றும் "வரும் முன் காப்போம் நடவடிக்கை" ஆகியவற்றில் அரசின் கவனத்தை மேலும் ஈர்க்க தி.மு.க.வின் இந்த சட்டமன்ற "கூட்டத் தொடர் புறக்கணிப்பு" உதவிடும் என்று நம்புகிறேன்,'' என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியில் 3,000 வீடுகளில் 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு' ஸ்டிக்கர்

சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சுமார் 3,000 இல்லங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக 'தனிமைப்படுத்தப்பட்ட வீடு உள்ளே வரவேண்டாம்' என ஸ்டிக்கர் ஓட்டும் பணிகள் தொடங்கியுள்ளன என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

''வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் இல்லங்களில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வெளியில் வரக்கூடாது என்றும் பிறர் வரவேண்டாம் என தெரிவிக்க ஸ்டிக்கர் ஒட்டுகிறோம். இதனை சரியான புரிதலோடு மக்கள் எடுத்துக்கொள்ளவேண்டும். கொரோனா தாக்கத்தைக் குறைப்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்பதால், அனைவரின் ஒத்துழைப்பும் எங்களுக்கு அவசியம்,''என ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார்.

கொரோனா எதிரொலி: தமிழகத்தில் நாளை முதல் 144 தடை உத்தரவு

கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் நாளை (மார்ச் 24) மாலை ஆறு மணி தொடங்கி மார்ச் 31ம் தேதி வரை 144 தடைஉத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட எல்லைகளும் மூடப்படும் என்றும் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனியார் நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப மற்றும் உயிர்தொழில்நுட்ப அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அம்மா உணவகங்கள் திறந்திருக்கும் என்றும் உணவகங்களில் பார்சல் மூலம் மட்டும் உணவு வழங்க அனுமதி உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

அதேநேரம் கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்