கொரோனா அச்சம்: உச்சத்தில் காய்கறி விலை - என்ன நடக்கிறது தமிழகத்தில்?

கொரோனா அச்சம்: உச்சத்தில் காய்கறி விலை - என்ன நடக்கிறது தமிழகத்தில்? படத்தின் காப்புரிமை Getty Images

தமிழகத்தில், கொரோனா அச்சம் காரணமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்க மக்கள் அதிக அளவில் சந்தைகள் மற்றும் கடைகளில் கூடினர். இதன் காரணமாக காய்கறிகளின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ளது.

மாநில எல்லைகளில் காய்கறிகள் ஏற்றி வரும் வாகனங்களின் போக்குவரத்து தடைபடுவதாலும், பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி வருவதாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

அச்சத்தில் மக்கள்

"கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாநில எல்லைகள் மூடப்பட்டு, காய்கறிகள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் ஏற்றி வரும் வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. இருந்தும், 144 தடை உத்தரவு காரணமாக கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் எண்ணிக்கையும் அதிகரித்தது. இதனால், மாநில எல்லைகளில் வாகன நெரிசல் அதிகமாகி காய்கறிகள் ஏற்றி வந்த வாகனங்கள் தேங்கி நின்றன. குறிப்பாக, கர்நாடகாவில் இரண்டு நாட்களுக்கு முன்பே ஊரடங்கு உத்தரவு போடப்பட்டதால், தமிழகத்திற்கு வரும் காய்கறிகளின் வரத்து குறையத் துவங்கியது."

"மேலும், தற்போது பொதுமக்கள் அதிக அளவில் காய்கறிகளை வாங்கி வருகின்றனர். கொரோனா அச்சம் காரணமாக தேவையான அளவைவிட அதிகமாக காய்கறிகள் மற்றும் பழங்களை வாங்கிச் செல்கின்றனர். இதனால், தட்டுப்பாடும் அதிகரித்துள்ளது. வரும் நாட்களில் காய்கறி வாகனங்களின் போக்குவரத்து சீரானால் விலை ஏற்றமும் சீராகும்" என்கிறார் கோவை எம்.ஜி.ஆர் சந்தையில் காய்கறி விற்பனை செய்துவரும் பஷீர்.

நடுத்தர குடும்பத்தினர்

கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தி வரும் இந்த சூழலில் காய்கறிகளின் விலை உயர்வு கவலையை அதிகரித்திருப்பதாக நடுத்தர குடும்பத்தினர் கூறுகின்றனர்.

"எனது குடும்பத்தில் மூன்று பெரியவர்கள், இரண்டு குழந்தைகள். நானும் எனது கணவரும் வேலைக்கு சென்று குடும்பத்தை நடத்தி வருகிறோம். கொரோனா பயத்தினால் வேலைக்கு செல்லாமல் தற்போது வீட்டில் தான் இருக்கிறோம். மாதக்கடைசி என்பதால் வரும் மாதத்திற்கான சம்பளத்தை எதிர்நோக்கி தான் காத்திருக்கிறோம்'' என்று குறிப்பிட்டார் கோவையில் வசித்து வரும் சுதாப்பிரியா.

"கொரோனா தாக்குதலில் இருந்த தப்பிக்க அதிக அளவில் காய்கறிகளை சாப்பிட்டு நோய் எதிர்ப்பை வளர்த்துக்கொள்ள வேண்டும், குழந்தைகளை தவறாமல் பழங்கள் சாப்பிட வைக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். ஆனால், தற்போதைய சூழலில் சமையலுக்கு காய்கறிகள் வாங்குவதே கடும் சவாலாக உள்ளது''

"அனைத்து காய்கறி மற்றும் பழங்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. சில்லறை வியாபாரிகள் காய்கறிகளின் விலையை கடுமையாக உயர்த்தியுள்ளனர். அதிக விலை என்றாலும் வாங்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. மேலும், பொருளாதாரத்தில் வலுவான நிலையில் உள்ளவர்கள் மொத்தமாக காய்கறிகளை வாங்கிவைத்து கொள்கின்றனர். இதனாலும், காய்கறிகளின் தட்டுப்பாடும், விலையும் உயர்ந்துள்ளது. இந்த சூழலில் நடுத்தர வர்க்கத்தினரும், கீழ்தட்டு மக்களும் தான் அதிகம் பாதிப்படைகின்றனர்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.

கோவை மொத்த விற்பனை சந்தையின் நிலவரப்படி, கிலோ ரூ.10 க்கு விற்கப்பட்ட தக்காளி ரூ.30 ஆகவும், ரூ.40 க்கு விற்கப்பட்ட சின்னவெங்காயம் ரூ.80 ஆகவும் உயர்ந்துள்ளது. கிலோ ரூ.10 க்கு விற்கப்பட்ட பச்சைமிளகாய் ரூ.40 க்கும், ரூ.7 க்கு விற்கப்பட்ட கத்திரிக்காய் ரூ.25 க்கும் விற்கப்படுகிறது.

ஒரு கிலோ ஆரஞ்சு பழம் ரூ. 80 ல் இருந்து ரூ.110 ஆகவும், ஒரு கிலோ ரூ. 20 ஆக இருந்த எலுமிச்சை ரூ.40 ஆகவும் உயர்ந்துள்ளது. சில்லறை கடைகளில் இந்த விலையோடு ரூ. 20 முதல் ரூ.50 வரை கூடுதலான விலையில் காய்கறிகள் விற்கப்படுகிறது.

இதனிடையே மார்ச் 24 இரவு இரவு 12 மணி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படும் என இந்திய பிரதமர் நரேந்திர மோதி மோதி அறிவித்துள்ளார். இருப்பினும் அத்தியாவசிய பொருட்களின் விநியோகம் தடைப்படாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: