கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பு

கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் 9ஆம் வகுப்புவரை அனைவரும் தேர்ச்சிபெற்றதாக அறிவிப்பு படத்தின் காப்புரிமை Getty Images
Image caption சித்தரிப்புக்காக

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று தடுக்கும் நடவடிக்கையாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருக்கும் நிலையில், மாநிலம் முழுவதும் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் தேர்வுகள் இன்றி தேர்ச்சிபெற்றதாக அறிவிக்கப்படுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

மேலும், மார்ச் 24ஆம் தேதியன்று 12ஆம் வகுப்புக்கான தேர்வுகள் நடைபெற்றபோது, பலர் தேர்வுகளை எழுத வரவில்லை. ஆகவே, இந்தத் தேர்வர்களுக்காக வேறு ஒரு நாளில் தேர்வு நடைபெறும் என்றும் அந்தத் தேதி பிறகு அறிவிக்கப்படுமென்றும் முதலமைச்சர் அறிவித்திருக்கிறார்.

தமிழ்நாட்டில் நேற்று மாலை முதல் ஊரடங்கு அமலுக்கு வந்த நிலையில், தேநீர் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டது. ஆனால், அங்கு கூட்டம் கூடுவதால் மாலை 6 மணி முதல் தேநீர்க் கடைகளை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 23ஆக உயர்வு

இதற்கிடையில், தமிழ்நாட்டில் மேலும் ஐந்து பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 4 பேர் இந்தோனேசியர்கள். ஒருவர் சென்னையைச் சேர்ந்த பயண வழிகாட்டி. ஐந்து பேரும் சேலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மார்ச் 22ஆம் தேதி முதல் சிகிச்சைபெற்றுவருகின்றனர்.

இந்த ஐந்து பேரையும் சேர்த்து, தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 23ஆக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் மார்ச் 25ஆம் தேதிவரை 2,09,276 பேர் காய்ச்சலுக்காகப் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,492 பேர் கண்காணிக்கப்படுகின்றனர். 211 பேர் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மொத்தம் 890 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் 757 பேருக்கு அந்நோய் இல்லையென்பது தெரியவந்துள்ளது. 23 பேருக்கு நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஒருவர் குணமடைந்து வீடுதிரும்பிவிட்டார். ஒருவர் மரணமடைந்துவிட்டார். 110 பேருக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்