கொரோனா வைரஸ்: தமிழ்நாட்டில் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள் மருத்துவர்கள்?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் தற்போதுவரை 23 பேர் கொரோனா தொற்று இருப்பதாக அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், அவர்களுக்கு தமிழகத்தின் அரசு மருத்துவர்கள் எப்படி சிகிச்சையளிக்கிறார்கள்?

சென்னையில் ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்தவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துமனை, ஸ்டான்லி அரசு மருத்துவமனை ஆகிய இடங்களில் கொரோனாவுக்கென சிறப்பு வார்டுகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இங்கு நோயாளிகளுக்கு எப்படி சிகிச்சையளிக்கப்படுகிறது, மருத்துவமனைகள் எந்த அளவுக்குத் தயார் நிலையில் இருக்கின்றன என்பதெல்லாம் குறித்து பிபிசியிடம் பிரத்யேகமாகப் பேசினார் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் பேராசிரியர் ரகுநந்தன்.

"நம்முடைய மருத்துவக் கட்டமைப்பு மிக வலுவானது. எந்த மருத்துவ நெருக்கடியையும் நம்மால் எதிர்கொள்ள முடியும். கொரோனா நோய்த் தொற்றை எப்போது சீனாவில் பெரிய அளவில் ரிப்போர்ட் செய்ய ஆரம்பித்தார்களோ, அப்போதிலிருந்தே நாம் தயார் நிலையில் இருக்கிறோம். இதற்கு முன்பாக டெங்கு, பன்றிக் காய்ச்சல் போன்றவற்றை நாம் சிறப்பாக எதிர்கொண்டிருக்கிறோம். ஆகவே டிசம்பர் 15ஆம் தேதிவாக்கிலேயே தமிழ்நாட்டில் இதற்கான புரோட்டோகால் உருவாக்கப்பட்டது. அதன்படி அப்போதே 8 படுக்கைகளைக் கொண்ட, கழிப்பறை வசதி உள்ள தனியான வார்டு உருவாக்கப்பட்டது" என்று விவரிக்கிறார் ரகுநந்தன்.

இதற்குப் பிறகு, கொரோனா நோயாளிகளைக் கையாளுவதில் மருத்துவர்கள் என்ன செய்ய வேண்டும், செவிலியர்கள் என்ன செய்ய வேண்டும், லேப் டெக்னீஷியன்கள் என்ன செய்ய வேண்டும், ஒரு நோயாளி வந்தால் எப்படிக் கையாள வேண்டும் என்பது குறித்தெல்லாம் புரோட்டோகால் உருவாக்கப்பட்டது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள டவர் ப்ளாக் - 2க்கு கீழே உள்ள பகுதி முன்பு கார் பார்க்காகப் பயன்படுத்தப்பட்டுவந்தது. இப்போது அங்குள்ள வாகனங்கள் அகற்றப்பட்டு, ஆம்புலன்ஸை உள்ளேயே கொண்டுவந்து நேரடியாக லிஃப்டில் ஏற்றும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

கொரோனா நோயாளிகளுக்கு தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்க முதல் தளத்தில் 6 படுக்கைகளைக் கொண்ட ஒரு வார்டும் மூன்றாவது தளத்தில் 36 படுக்கைகளைக் கொண்ட ஒரு வார்டும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு பணியாளர் ஆகியோர் மட்டும்தான் உள்ளே செல்ல முடியும். இதற்கு மூன்று கட்டங்களாக பாதுகாப்பு உள்ளது. வேறு யாரும் இவற்றைத் தாண்டி உள்ளே செல்ல முடியாத வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

"இந்த நோயாளிகள் வேறு யாருடனும் கலந்துவிடக்கூடாது என்பதிலும் வார்டுக்கு வந்த பிறகு, வேறு யாரும் அவர்களை நெருங்காமல் இருப்பதிலும் கவனம் செலுத்துகிறோம்" என்கிறார் ரகுநந்தன்.

கொரோனா பரவலுக்குப் பிறகு, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் காய்ச்சல் நோயாளிகளுக்காக மட்டுமே செயல்படும் சிறப்பு வெளிநோயாளிகள் பிரிவு உருவாக்கப்பட்டிருக்கிறது. காய்ச்சலுடன் வந்தவர்களுக்கு வெளிநாட்டுப் பயண பின்புலமோ, போய்வந்தவர்களுடன் பழகும் வாய்ப்போ இருந்தால், உடனடியாக கொரோனா சோதனை செய்யப்படுகிறது.

கொரோனா சிகிச்சை பெறும் நோயாளிகள் உள்ள வார்டுக்கு செல்பவர்கள் அனைவருக்குமே PPE எனப்படும் விண்வெளி வீரர்கள் அணிவது போன்ற ஒரு உடை வழங்கப்படுகிறது. இந்த உடை போதுமான அளவில் இருப்பில் இருக்கிறதா?

"நிச்சயமாக. அந்த உடை போதுமான அளவில் இருப்பில் இருக்கிறது. இந்த உடை தேவையான தருணத்தில் சரியாகப் பயன்படுத்தப்படுகிறது. இவற்றை எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பயிற்சியும் அளிக்கப்பட்டிருக்கிறது. எப்படி அணிவது, எப்படிக் கழற்றுவது, எப்படி அகற்றுவது என விரிவான பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கின்றன" என்கிறார் ரகுநந்தன்.

இங்கு தங்கியிருக்கும் நோயாளிகளுக்கு இங்கு உள்ள சமையலறையிலேயே சமைக்கப்பட்ட மிகச் சிறப்பான உணவு அளிக்கப்படுகிறது என்றும் சீனாவைச் சேர்ந்த நோயாளிகள் இருந்தபோது, அவர்களுக்கு ஏற்றபடியான நூடுல்ஸ் போன்ற உணவுகள் வழங்கப்பட்டன என்கிறார் அவர்.

நோயாளிகள் தனிமைப்படுத்தப்பட்டிருப்பதால், மன அழுத்தம் ஏற்படக்கூடும் என்பதால் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. "மருத்துவர்களும் டீனும் தொடர்ந்து பேசுகிறோம். நோயாளிகளைப் பொறுத்தவரை, 60 சதவீதம் பேருக்கு சாதாரணமான காய்ச்சல் 4-5 நாட்கள் இருக்கும். இந்த சிகிச்சை முழுக்க முழுக்க இலவசமாக அளிக்கப்படுகிறது" என்கிறார் ரகுநந்தன்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவர்களைப் பொறுத்தவரை ஷிப்ட் முறையில் பணியாற்றுவார்கள். இந்த முறை ஒவ்வொரு மருத்துவமனைக்கும் வெவ்வேறு மாதிரி இருக்கும் என்கிறார் அவர்.

சென்னையில் உள்ள ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை ஆசியாவின் மிகப் பெரிய மருத்துவமனைகளில் ஒன்று. 2,500க்கும் மேற்பட்ட படுக்கை வசதிகளைக் கொண்ட மருத்துவமனை என்பதால், மிகக் குறைந்த எண்ணிக்கையிலான கொரொனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது பெரிய விஷயமல்ல; நோயாளிகளுக்குக் கவனமாக சிகிச்சையளிக்க வேண்டும். அதை நாங்கள் செய்கிறோம் என்கிறார் அவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: