கொரோனா வைரஸ் பாதிப்பு: இந்தியாவில் 649ஆக உயர்வு - தமிழகத்தின் நிலவரம் என்ன? Coronavirus India update

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 649ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 42 பேர் முற்றிலும் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை மொத்தம் 13 பேர் உயிரிழந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

தொடர்ந்து நான்கு நாட்களாக இந்தியாவில் புதிய கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 70-80 என்ற அளவில் இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 43 பேருக்கு மட்டுமே கொரோனா பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது என்று இன்று மாலை இந்தியாவின் சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினந்தோறும் உயர்ந்து வருகிறது. இதைத்தொடர்ந்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதி அறிவித்தபடி, நேற்று (புதன்கிழமை) முதல் நாடு முழுவதும் 21 நாட்களுக்கு முடக்க நிலை அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமை தளபதி மற்றும் ராணுவ, கப்பற்படை தளபதிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குறிப்பாக, சௌதி அரேபியாவிலிருந்து வந்த கொரோனா வைரஸ் பாதித்த பெண்ணொருவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், அவரது மனைவி, மகள் மற்றும் மேலும் நான்கு பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக டெல்லியின் சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption Delhi

மேலும், கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள அந்த மருத்துவரிடம் தொடர்பில் இருந்த 800க்கும் மேற்பட்டோர் 14 நாட்களுக்கு சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்கமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

ஊரடங்கு விதிகளையும், சமூக விலக்கத்தை அனைவரும் கடைபிடிப்பது அவசியம் என்று இந்திய அரசு தெரிவித்துள்ளது.

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் தொடர்ந்து அடையாளம் காணப்பட்டு வருகின்றனர் என்றும் ஊரடங்கை கடைபிடிப்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட கடமை என்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்று மாலை நடந்த செய்தியாளர்ட் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

பங்குச்சந்தைகள் மூன்றாவது நாளாக ஏற்றம்

கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக மற்ற உலக நாடுகளை போலவே தொடர்ந்து கடும் சரிவை சந்தித்து வந்த இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக இன்றும் ஏற்றத்தை சந்தித்து வருகின்றன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ், இன்று சந்தை தொடங்கியதில் இருந்து 1,100 புள்ளிகள் உயர்ந்துள்ளன.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தியா முழுவதும் முடக்க நிலை அமல்படுத்தப்பட்டுள்ளதால், தினக்கூலிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்திய தலைநகர் டெல்லியில் கூலி வேலை செய்து வந்த ஏராளமானோர் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளதால், உத்தரப்பிரதேசத்திலுள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்ல தொடங்கியுள்ளனர்.

“வேலைவாய்ப்பு எதுவும் இல்லாததால் எங்களிடம் பணமே இல்லை. நாங்கள் எப்படி உண்பது? நாங்கள் டெல்லியை விட்டு வெளியேறாவிட்டால், பசியிலேயே செத்துமடிய வேண்டியதுதான்” என்று டெல்லி-உத்தப்பிரதேச எல்லையான காசிப்பூரில் பெண்மணி ஒருவர் கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

நாடு முழுவதும் இன்றியமையாத பணிகளை மேற்கொள்பவர்கள் மீது தாக்குதல்கள் நடந்து வருவதாக கூறப்பட்டு வரும் நிலையில், அத்தகைய பணி செய்வோரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டுமென்று டெல்லி காவல்துறைக்கு மாநில முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் கொரோனா வைரஸ் அச்சத்தின் காரணமாக பொது மக்கள் செய்தித்தாள்களை வாங்குவதை குறைத்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. "எங்கள் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் செய்தித்தாள் வாங்குவதை நிறுத்திவிட்டனர். செய்தித்தாள் வாயிலாக கொரோனா வைரஸ் பரவ கூடும் என்று அவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

மேலும், பெரும்பாலான அடுக்குமாடி குடியிருப்புகளில் எங்களை அனுமதிப்பதே இல்லை” என்று கொல்கத்தாவை சேர்ந்த செய்தித்தாள் முகவர் ஒருவர் கூறியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 24ஆம் தேதி சென்னையிலிருந்து அந்தமான் நிக்கோபார் தீவுக்கு சென்ற நபர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருப்பதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

144 தடை உத்தரவை மீறியதற்காக 8,136 பேர் மீது 1,434 வழக்குகளை தமிழக காவல்துறை பதிவு செய்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பியாக 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி, சுய தனிமைப்படுத்தலை மீறியதற்காக மேலும் ஆறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள 21 நாள் முடக்க நிலையை தொடர்ந்து, வரும் ஏப்ரல் 14ஆம் தேதி வரை மெட்ரோ ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.நாக்பூரில் மூன்று மருத்துவர்கள் உள்பட 59 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி சமூக ஊடகங்களில் வலம் வரும் ஒலிப்பதிவு போலியானது என்று இந்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரியின் நிலவரம் என்ன?

தமிழகத்தில் இதுவரை 26 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் மதுரையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை இரண்டு பேர் குணமடைந்துள்ளனர் என்று தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரஸ் பிரிவில் சிகிச்சை பெற்றுவந்த 40 வயதாகும் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால், இவரது இறப்புக்கு கொரோனா வைரஸ் நோய்த்தொற்று காரணமா என்பது இன்னும் உறுதிசெய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.

படத்தின் காப்புரிமை Getty Images

இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கத்தை எதிர்கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நேற்று (புதன்கிழமை) தொலைக்காட்சி மூலம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிடவில்லை. மக்கள் அனைவரும் வீட்டிற்குள்ளேயே தனித்திருக்க வலியுறுத்திய அவர், ஊரடங்கால் பாதிக்கப்படும் பிரிவினருக்கான அரசின் திட்டங்களை விவரித்தார்.

மாலை ஏழு மணி அளவில் தொலைக்காட்சி மூலம் உரையாற்றிய எடப்பாடி கே. பழனிச்சாமி, "கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைக்காக 3,750 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 10,158 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மேலும் படுக்கை வசதியை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையை மீறியதாக புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜான் குமார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது. தனது வீட்டின் அருகே 200க்கும் மேற்பட்டவர்களை கூட வைத்து காய்கறிகள் கொண்ட தொகுப்பை வழங்கியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அம்மாநில முதல்வர் நாராயணசாமி தலைமையில் உயரதிகாரிகள் கூட்டம் நடந்தது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

தொடர்புடைய தலைப்புகள்