தமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்வு

தமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று; மொத்த எண்ணிக்கை 29ஆக உயர்வு

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மேலும் மூவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. மாநிலத்தில் மொத்தம் இதுவரை 29 பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றுவரை 26 பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், துபாயிலிருந்து திரும்பியிருந்த 24 வயது வாலிபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் கேஏபிவி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டனிலிருந்து திரும்பிய சென்னையைச் சேர்ந்த கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டு, அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் இவருடைய உறவினரான 65 வயதுப் பெண்மணிக்கும் கொரோனா இருப்பது உறுதிசெய்யப்பட்டு அவரும் கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் இதுவரை விமான நிலையங்களில் 2,09284 பேர் காய்ச்சலுக்காக சோதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 15,788 பேர் 28 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் 86,644 பேர் வெளிநாட்டிலிருந்து வந்திருப்பதாக குடிவரவுத் துறை அளித்த தகவல்களின் அடிப்படையில், அந்த நபர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டுவருகின்றன.

கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வந்து, ஆனால் நோய் அறிகுறி ஏதும் இல்லாத 109 பேர் விமான நிலையத்திற்கு அருகிலேயே தடுத்து, தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், 284 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இதுவரை தமிழ்நாட்டில் 1039 பேருக்கு கொரொனா இருக்கிறதா என்ற சோதனை செய்யப்பட்டுள்ளது. 962 சோதனை முடிவுகள் வெளியாகியுள்ளன. 933 பேருக்கு கொரொனா இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. 29 பேருக்கு நோய் இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மேலும் 77 பேருக்கான முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமைச் செயலகத்தில் பல்வேறு துறையின் அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூட்டம் ஒன்றை நடத்தினார். அந்தக் கூட்டத்தில் சில முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

அதன்படி, தமிழ்நாட்டில் ஏற்கனவே மார்ச் 31ஆம் தேதிவரை அறிவிக்கப்பட்டிருந்த ஊரடங்கு, ஏப்ரல் 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சிறிய வங்கிகள், நிதி நிறுவனங்கள், சுய உதவிக் குழுக்கள் ஆகியவை தினசரியோ, வாராவாரமோ மாதாமாதமோ வட்டிகளை வசூலிக்கின்றன.

ஆனால், இப்போது யாரும் வேலைக்குச் செல்லவில்லை என்பதால், மறு உத்தரவு வரும்வரை வட்டி வசூலிக்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

காய்கறிச் சந்தைகளில் மக்கள் அதிகம் கூடுவதால் அவற்றை பெரிய மைதானங்களில் அமைக்க வேண்டுமென்றும் காய்கறிக் கடைகளிலும் மருந்துக் கடைகளிலும் மக்கள் 3 அடி இடைவெளி விட்டே நிற்க வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ச்சியாக மருந்துகளை உட்கொள்ள வேண்டிய நிலையில் உள்ள கர்ப்பிணிப் பெண்கள், பிற நோயாளிகளுக்கு இரண்டு மாதங்களுக்கு மருந்துகளை அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

அமெஸான், பிக் பாஸ்கட் போன்ற இணையதள நிறுவனங்களின் மூலம் பொருட்களை சப்ளை செய்ய அனுமதியளிக்கப்படுகிறது. ஆனால், ஊபர், ஸொமாட்டோ ஆகியவற்றின் மூலம் ஹோட்டல்களில் இருந்து உணவு வாங்க தடை நீடிக்கும்.

விவசாயப் பணிகளைச் செய்வோர் அதனைத் தொடர்ந்து செய்யலாம். விவசாயப் பணிகளுக்கான வாகனங்களும் அனுமதிக்கப்படும். முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், டயாலிசிஸ் நோயாளிகள் உதவிக்காக 108 என்ற எண்ணை அழைக்கலாம். ஆம்புலன்ஸ் சேவையோடு, இந்த சேவையும் 108 என்ற எண் மூலம் தொடர்ந்து நடைபெறும்.

கொரோனா வந்தவர்களுடன் தொடர்பில் இருந்ததால் தனிமைப்படுத்தப்பட்டவர்கள், வீட்டைவிட்டு வெளியில் வந்தால் அவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: