கொரோனா வைரஸ்: இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்கள் 724 பேர் - 24 மணிநேரத்தில் 75 பேர் பாதிப்பு

கோப்புப்படம் படத்தின் காப்புரிமை Getty Images

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 724ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர்களில் இதுவரை 64 பேர் முழு உடல்நலன் பெற்றுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் இந்தியாவில் புதிதாக 75 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது என்றும், நான்கு பேர் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளனர் என்றும் இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் லவ் அகர்வால் இன்று மாலை 4 மணிக்கு நடந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

அடுத்த ஓரிரு மாதங்களில் 30,000 கூடுதல் வெண்டிலேட்டர்களை வாங்க பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தை இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 10,000 வெண்டிலேட்டர்களைத் தயாரிக்க பொதுத்துறை நிறுவனங்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளன.

அதே சூழ்நிலையில், கோவிட்-19 நோய்த்தொற்று அச்சத்தின் காரணமாக கரடியின் பிடியில் சிக்கியிருந்த இந்திய பங்குச்சந்தைகள் கடந்த சில தினங்களான ஏற்றம் கண்டு வருகின்றன.

மீண்டும் சரிவை நோக்கிஇந்திய பங்குச்சந்தைகள்

அந்த வகையில், இன்று ஏற்றத்துடன் தொடங்கிய மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் உயர்ந்த நிலையில், ரெப்கோ வட்டி விகிதத்தை குறைப்பதாக ரிசர்வ் வங்கி அறிவித்தவுடன் மீண்டும் சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

தமிழகத்தை பொறுத்தவரை, இதுவரை 35 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஆறு பேர் குணமடைந்துள்ள நிலையில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மதுரையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களோடு தொடர்பில் இருந்த குடும்ப உறுப்பினர்கள் இருவருக்கு தொற்று இருப்பது சோதனையில் உறுதிசெய்யப்பட்டுள்ளது என தேசிய சுகாதார அமைப்பு (தமிழகம்)தெரிவித்துள்ளது.

மருத்துவமனைகள் மூடல்

ஈரோடு மற்றும் கோவையில் உள்ள போத்தனூர் ரயில்வே மருத்துவமனைகளில் பணிபுரிந்து வந்த மருத்துவருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதால் இம்மருத்துவமனைகள் இன்று காலை முதல் மூடப்பட்டுள்ளன.

23ஆம் தேதி முதல் இம்மருத்துவமனைகளுக்கு வந்து சென்ற நபர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும், கொரோனா அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல தாய்லாந்தில் இருந்து ஈரோடு வந்திருந்த நபர்களுடன் தொடர்பில் இருந்த இரண்டு நபர்களுக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த இரண்டு நபர்களுக்கும் கொரோனா பாதிப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் அரியலூரில் இருப்பதால், அவர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுவரை கொரோனா தாக்கம் உள்ளவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்தவர்களாக இருப்பதால், 2020 பிப்ரவரி மாதம் 15ம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு வந்த 96,663 பேரை கண்டறிய வேண்டியுள்ளது என தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தனிமைப்படுத்திக்கொள்ளுதல் மட்டுமே தற்போதைய தீர்வாக இருப்பதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோதியிடம் தெரிவித்துள்ளார். சமூக விலகலை பொது இடங்களில் உறுதிப்படுத்த சுகாதாரத்துறை, பேரிடர் மேலாண்மை மற்றும் காவல்துறையினரோடு ஆலோசனை செய்துவருவதாக தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்கள் மற்றும் மற்ற இன்றியமையாத தொழில்களை செய்பவர்களுக்கு ரோஜா பூக்களை கொடுத்த காவல்துறையினர் அவர்களுக்கு பாராட்டு தெரிவித்தனர்."கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து நாட்டின் பொருளாதாரத்தை பாதுகாக்க ரிசர்வ் வங்கி மிகப்பெரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த அறிவிப்புகள் பணப்புழக்கத்தை மேம்படுத்தும், செலவினத்தை குறைக்கும், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் வணிகங்களுக்கும் உதவும்" என்று பிரதமர் நரேந்திர மோதி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, கேரளாவுக்கு அடுத்து இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று அதிகம் ஏற்பட்டவர்களை கொண்ட மகாராஷ்டிராவில் ஆளும் சிவசேனா கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் நிவாரண நிதிக்கு அளித்துள்ளனர்.

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் மத்திய ஆட்சி நிலப்பகுதிகளின் ஆளுநர்கள் மற்றும் துணைநிலை ஆளுநர்களிடம் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காணொளி காட்சி வாயிலாக உரையாடினர்.

கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள சவாலை ஏற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோரை குடியரசுத் தலைவர் அப்போது பாராட்டினார்.

இந்திய தலைநகர் டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த வேற்று மாநிலத்தை சேர்ந்தவர்கள் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள முடக்க நிலையால் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் சூழ்நிலை இன்றும் தொடர்கிறது.

இதுதொடர்பாக, ஏ.என்.ஐ. செய்தி முகமையிடம் பேசிய ஒருவர், “எங்களிடம் இருந்த மொத்த பணமும் தீர்ந்தவிட்டது. ராஜஸ்தானை சேர்ந்த நாங்கள் டெல்லியிலுள்ள பூங்காவில் தங்கி பணிபுரிந்து வந்தோம். இப்போது பணத்திற்கு வழியில்லை என்பதால், நாங்கள் மூன்று நாட்கள் நடந்தே எங்களது சொந்த ஊர்களுக்கு செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார்.

படத்தின் காப்புரிமை Getty Images
Image caption வேலைவாய்ப்பில்லாததால் சொந்த ஊர்களுக்கு நடந்தே செல்லும் மக்கள்

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ள 724 பேரில் பெரும்பாலானோர் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்தவர்களே. எனவே, இந்திய விமான நிலையங்களில் இதுவரை அடிப்படை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் 14 நாட்கள் கட்டாய சுய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது.

எனினும், அதை மீறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில், இரண்டு வாரத்திற்கு முன்னதாக அமெரிக்காவிலிருந்து ஆந்திரப்பிரதேசம் வந்த இரண்டு வெளிநாடுவாழ் இந்தியர்கள் கட்டாய சுய தனிமைப்படுத்துதலை மீறி தப்பி சென்றதாக காவல்துறையினர் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொடர்பாக சார்க் நாடுகளின் சுகாதாரத்துறை உயரதிகாரிகள் இடையே நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் அறிவித்தபடி, கோவிட்-19 நோய்த்தொற்று குறித்த படிப்பினைகள், தகவல்கள் மற்றும் சிகிச்சை முறைகளை உறுப்பு நாடுகளுக்கு இடையே பகிர்ந்து கொள்ளும் மின்னணு தளத்தை உருவாக்கும் பணியில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருவதாக ஏ.என்.ஐ. செய்தி வெளியிட்டுள்ளது.

சென்னையிலிருந்து அந்தமான் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது நேற்று (வியாழக்கிழமை) உறுதிசெய்யப்பட்டிருந்த சூழ்நிலையில், அவருடன் சேர்ந்து பயணித்த மற்றொருவருக்கும் கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பதாக அந்தமான் & நிக்கோபார் நிர்வாகம் அறிவித்துள்ளது.

படத்தின் காப்புரிமை ANI

கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை சமாளிப்பது தொடர்பாக விவாதிப்பதற்காக, காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற ஜி20 நாடுகளின் கூட்டத்தில் பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோதி, கோவிட்-19 வைரஸால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள உயிரிழப்புகளில் 88 சதவீதம் ஜி20 நாடுகள் என்றும், உலக நாடுகள் மனிதர்களை மையமாக கொண்ட புதிய உலகமயமாக்க கொள்கையை கடைபிடிக்க வேண்டுமென்றும் வலியுறுத்தியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த பரிசோதனையை மேற்கொள்ள இந்தியா முழுவதும் உள்ள 38 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி அளித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த நான்கு ஆய்வகங்களும் அடக்கம்.

கொரோனா வைரஸ் அச்சத்தால் இந்தியா முழுவதும் முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த் தாஸ் இன்றைய தினம் (வெள்ளிக்கிழமை) பல முக்கிய அறிவிப்புகளை அறிவித்துள்ளார்.

குறிப்பாக, வங்கிகளுக்கான ரெப்போ விகிதம் 5.15 சதவிகிதத்திலிருந்து 4.4%ஆக குறைக்கப்பட உள்ளது. இதனால் வீட்டுக்கடன், வாகன கடன், இஎம்ஐ மற்றும் தொழில்துறையினர் பெற்ற கடன்கள் மீதான வட்டித் தொகை இனிவரும் காலத்தில் குறையும்.

மேலும், வங்கிகளில் கடன் பெற்றவர்கள் மூன்று மாதங்களுக்கு இஎம்ஐ செலுத்த தேவையில்லை. கடன்களுக்கான மாத தவணைகளை செலுத்த 3 மாதங்கள் வரை அவகாசம் எடுத்து கொள்ளலாம். இது அனைத்து வகை கடன்களுக்கும் பொருந்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: