கொரோனா வைரஸ்: மின் விளக்குகளை அணைத்து, அகல் விளக்கை ஒளிர செய்த மக்கள்

பட மூலாதாரம், Getty Images
கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் அனைவரும் ஒன்றிணைந்திருப்பதை சுட்டிக்காட்டும் வகையில், இன்று (ஏப்ரல் 5) இரவு 9 மணிக்கு துவங்கி 9 நிமிடங்கள் வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைக்கும்படி இந்தியப் பிரதமர் மோதி கோரிக்கை விடுத்திருந்ததை ஏற்ற மக்கள் அதை நாடு முழுவதும் செயல்படுத்தினர்.
வீட்டில் உள்ள மின் விளக்குகளை அணைத்த மக்கள், பிறகு அகல் விளக்குகளையும், டார்ச் விளக்குகளையும் ஒளிர செய்தனர்.
இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர்.
முன்னதாக, இந்தியாவில் கொரோனா வைரஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக நாட்டின் இரண்டு முன்னாள் குடியரசுத் தலைவர்கள், இரண்டு முன்னாள் பிரதமர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் முதலமைச்சர்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களுடன் பிரதமர் நரேந்திர மோதி ஆலோசனை நடத்தியதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி கடந்த சில நாட்களாக துறைசார் அதிகாரிகள், சிறப்பு குழுக்கள், சுகாதார பணியாளர்கள் உள்ளிட்டோருடன் பேசி வருகிறார்.
இந்நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர்களான பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்களான மன்மோகன் சிங், தேவகவுடா உள்ளிட்டோரை அழைத்து, கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரதமர் ஆலோசனை நடத்தியாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? பாதுகாத்து கொள்வது எப்படி?
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- Pandemic என்றால் என்ன?
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
அதே போன்று, காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ், தமிழ்நாட்டின் முன்னாள் துணை முதல்வரும், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான மு.க. ஸ்டாலின், பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பர்காஷ் சிங் பாதல் உள்ளிட்டோரிடமும் பிரதமர் ஆலோசனை நடத்தியதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,374ஆக உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இணை செயலர் லவ் அகர்வால் தெரிவித்துள்ளார். சற்று முன்னர் டெல்லியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டவர்களில் இதுவரை 267 பேர் குணமடைந்துள்ளதாகவும், அதே சமயத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 79ஆக உயர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
குறிப்பாக, இன்று காலை 9 மணிக்கு முந்தைய 12 மணிநேரத்தில் மட்டும் இந்தியா முழுவதும் புதிதாக 302 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
"இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சராசரியாக 4.1 நாட்களுக்கு ஒருமுறை இரட்டிப்பு ஆகிறது, இதுவே தப்லிக் ஜமாஅத் நிகழ்வு நடைபெறாமல் இருந்திருந்தால், இது 7.4 நாட்களாக இருந்திருக்கும். நாடு முழுவதும் உள்ள 274 மாவட்டங்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது" என்று அவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
இவரை தொடர்ந்து பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் மற்றொரு இணை செயலரான புன்யா சலிலா , "இந்தியா முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் 27,661 நிவாரண முகாம்கள் மற்றும் தங்குமிடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இவற்றில் மொத்தம் 12.5 லட்சம் பேர் தங்கியுள்ளார்கள். இதுமட்டுமின்றி, அரசு, தனியார் பங்களிப்பில் நாடு முழுவதும் 19,460 உணவு வழங்குமிடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றின் வாயிலாக 75 லட்சம் மக்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது" என்று கூறினார்.
"13.6 லட்சம் தொழிலாளர்களுக்கு அவர்கள் பணிபுரியும் நிறுவனங்கள் மற்றும் தொழில்துறையால் தங்குமிடம் மற்றும் உணவு வழங்கப்படுகிறது."
இந்நிலையில், கொரோனாவிற்கு எதிரான நாட்டு மக்களின் ஒற்றுமையை தெரிவிக்கும் நோக்கில், இன்று இரவு 9 மணிக்கு 9 நிமிடங்கள் அனைவரும் அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் லைட் ஏதேனும் ஒன்றை ஏற்றி வைக்குமாறு பிரதமர் மோதி அழைப்பு விடுத்திருந்தார்.
தமிழகத்தில் நிலவரம் என்ன?
தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 485ஆக அதிகரித்துள்ளது. குறிப்பாக டெல்லியில் நடந்த மத நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற தமிழகத்தை சேர்ந்த 422 பேருக்கு கோவிட்-19 நோய்த்தொற்று ஏற்பட்டிருப்பது இதுவரை உறுதிசெய்யப்பட்டுள்ளது.
நேற்று (சனிக்கிழமை) கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட 74 பேரில் 73 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பிலிருந்தவர்கள் என்று தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்திருந்தார்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 5ஆக அதிகரித்துள்ளது. சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 60 வயதான நபர் இன்று அதிகாலை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
மேலும், இராமநாதபுரத்தை சேர்ந்த 71 வயதான ஆண் ஒருவர் கடந்த மார்ச் 2ம் தேதி இறந்தார். இவர் கோவிட்-19 நோய்த்தொற்றால்தான் இறந்தார் என்பது தற்போது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக, கொரோனா தாக்கத்தைக் கட்டுப்படுத்த இன்று (மார்ச் 5) முதல் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே செயல்படவேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: