தமிழ்நாட்டில் சில தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தரப்பட்ட அனுமதி திடீர் ரத்து - காரணம் என்ன?

தொழிலாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா காரணமாக மூடப்பட்டிருந்த 13 வகையான தொழிற்சாலைகள் இயங்குவதற்கு மாலையில் அனுமதி அளித்திருந்த தமிழக அரசு, தற்போது அந்த அனுமதியை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

கொரோனா நோய் தொற்று காரணமாக, தொடர்ச்சியான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள தொழிற்சாலைகள் தவிர பிற தொழிற்சாலைகள் இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று மாலையில் அரசின் செயலர்களுக்கு தொழில்துறையிலிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்தக் கடிதத்தில் இரும்பு, சிமிண்ட், உரம் உள்ளிட்ட 13 வகையான தொழிற்சாலைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக கூறப்பட்டிருந்தது.

உருக்கு தொழிற்சாலை, சுத்திகரிப்புத் தொழிற்சாலை, சிமென்ட், உரம், ரசாயனம், ஜவுளி தொழிற்சாலைகள், சர்க்கரை, கண்ணாடி, உருக்கி ஊற்றும் தொழிலகங்கள், தோல் பதனிடும் தொழிற்சாலைகள், பேப்பர் தொழிற்சாலைகள், டயர் தொழிற்சாலைகள், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் ஆகிய பிரிவுகளைச் சேர்ந்த தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

மேலும், ஏற்கனவே மூடப்பட்டிருக்கும் பல தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணியில் ஈடுபட, குறைந்த அளவு தொழிலாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் ஏற்கனவே தயாரிக்கப்பட்டுள்ள பொருட்களை பேக் செய்து, லேபிள் ஒட்டி ஏற்றுமதி செய்யவும் அனுமதி அளிக்கப்படும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில் அடுத்த சில மணி நேரங்களிலேயே அந்த உத்தரவை ரத்து செய்யப்பட்டிருப்பதாக தொழிற்துறை செயலர் உத்தரவிட்டுள்ளார்.

ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்துவந்த நிலையில், பல மாநில முதல்வர்கள் அந்த ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் தொழிற்சாலைகளைத் திறக்க தமிழக அரசு அளித்த அனுமதி ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது. தொழிற்சாலைகள் திறந்தால், ஊழியர்கள் எப்படி பணிக்கு வருவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

இந்த நிலையில்தான் தொழிற்சாலைகள் திறக்கப்படுவது குறித்த உத்தரவை ரத்துசெய்துள்ளது தமிழக அரசு.

69 பேருக்கு தொற்று

தமிழ்நாட்டில் மேலும் 69 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 690ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மாநில சுகாதாரத்துறைச் செயலர் பீலா ராஜேஷ், கொரோனா தொற்றினால் ஒருவர் உயிரிழந்திருப்பதாகத் தெரிவித்தார். இதன் மூலம் இந்நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.

உயிரிழந்தவர் 65 வயது பெண்மணி என்றும் அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் உள்ளிட்ட பிற பிரச்சனைகளும் இருந்த நிலையில், அவர் இன்று சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இன்று 69 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டிருக்கும் நிலையில், 63 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். 3 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஒருவர் வேறு மாநிலத்திலிருந்து பயணம் செய்து வந்தவர். மற்றொருவர் வெளிநாட்டுக்குச் சென்று வந்தவருடன் தொடர்பில் இருந்தவர். மற்றொருவருக்கு எப்படி ஏற்பட்டது என்பது விசாரிக்கப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Getty Images

தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டில் 66431 பேர் வீட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 253 பேர் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். 27, 416 பேர் 28 நாட்கள் வீட்டுக் கண்காணிப்பை முடித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஏற்கனவே 17 கொரோனா தொற்று ஆய்வகங்கள் உள்ள நிலையில், மேலும் 2 ஆய்கவகங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனையிலும் தனியார் மருத்துவமனை ஒன்றிலும் இந்த ஆய்வகங்கள் நிறுவப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டில் இதுவரை 5305 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தில்லி சென்று திரும்பியவர்களில் 1630 பேருக்கு இந்த சோதனை செய்யப்பட்டதில் 636 பேருக்கு நோய் உறுதியாகியுள்ளது. 33 பேருக்கு சோதனை செய்யப்பட்டு, முடிவுகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

இந்நோயைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் கீழ் 15 லட்சம் வீடுகள் கண்காணிப்பில் உள்ளன. இந்த வீடுகளில் வசிக்கும் 53 லட்சம் பேர் இவ்வாறு கண்காணிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாட்டில் இதுவரை 19 பேர் நோய் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். தமிழ்நாட்டில் கொரோனாவால் உயிரிழப்புகள் அதிகரித்துவரும் நிலையில், இந்த மரணங்கள் குறித்து ஆராய்வதற்காக குழு ஒன்று அமைக்கப்பட்டிருப்பதாகவும் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தொகுதி நிதி

தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஒதுக்குவதற்கு தமிழக முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் சிறிது நேரத்திற்கு முன்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "அரவக்குறிச்சி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் வி. செந்தில்பாலாஜி தன்னுடைய தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கரூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஒதுக்கிய நிதியை முதலில் ஏற்றுக்கொண்ட நிர்வாகம், பின்னர் மறுத்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. அரசியல் சூழ்ச்சி செய்ய இது நேரமன்று" என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கும் முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, "சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியினை சம்பந்தப்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில்தான் குறிப்பிட்ட பணிகளுக்காக உறுப்பினர்கள் பரிந்துரைகளின்படி ஒதுக்கீடு செய்யப்படும். இதையறியாமல் எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டியுள்ளார்" என விளக்கமளித்துள்ளார்.

மேலும், கொரோனா நோய் தடுப்பு மற்றும் சிகிச்சைக்கு அந்தந்த தொகுதிகளில் சட்டமன்ற உறுப்பினர்கள் 25 லட்ச ரூபாய் அளவுக்கு செலவு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது என்றும் கொரோனா நோய்த் தொற்றைத் தடுக்க, மாநில, மாவட்ட அளவில் மருந்துகள், மருத்துவக் கருவிகள் வாங்க தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ஒரு கோடி ரூபாயை, மாநில அளவில் ஒருங்கிணைத்து பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஈரோட்டில் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டினர் மீது வழக்கு பதிவு

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றுடன் தங்கியிருந்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த 6 பேர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுற்றுலா விசாவில் இந்தியாவிற்குள் வந்து விசா விதிகளை மீறி மத பிரசாரம் மேற்கொண்டது, கொரோனா தொற்று இருந்தும் அலட்சியமாக இருந்தது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் தாய்லாந்து நாட்டினர் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம், டெல்லி நிஜாமுதீன் பகுதியில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுவிட்டு, சென்னை வழியாக ஈரோடு மாவட்டத்திற்கு தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 7 பேர் வந்தனர்.

அவர்களில் ஒருவர், உடல்நலக்குறைபாடு காரணமாக சொந்த ஊருக்கு திரும்பிச் செல்ல கோவை விமான நிலையம் வந்த போது, கொரோனா பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், மார்ச் 17 ஆம் தேதி அன்று அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். கடுமையான சர்க்கரை நோய் பாதிப்பால் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் விளக்கமளித்தனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

இதனையடுத்து, உயிரிழந்தவரோடு பயணித்த தாய்லாந்து நாட்டினரின் தகவல்கள் கிடைக்கப்பெற்று, அவர்களை ஈரோடு அரசு மருத்துவமனையில் மாவட்ட நிர்வாகத்தினர் அனுமதித்து, கொரோனா பரிசோதனைகளை மேற்கொண்டனர்.

பரிசோதனையில் முதலில் இருவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர், மற்ற நான்கு நபர்களுக்கும் கொரோனா அறிகுறிகள் கண்டறியப்பட்டது. தற்போதுவரை இவர்கள் அனைவரும் கொரோனா தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில், சுற்றுலா விசாவில் இந்தியாவிற்கு வந்து மத பிரசாரம் செய்தது மற்றும் ஆபத்தான நோயை பரப்பும் வகையில் அலட்சியமாக செயல்பட்டது ஆகிய கரணங்களை சுட்டிக்காட்டி வட்டாட்சியர் சார்பில் தாய்லாந்து நாட்டினர் மீது காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

இதனடிப்படையில்,தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 6 பேர் மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.

ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவர்களில், நான்கு நபர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட இருவர் உடல்நலத்துடன் இருப்பதாகவும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: