கொரோனா வைரஸ்: இந்தியாவில் முடக்கநிலை எப்போது விலக்கப்படும்?

  • சரோஜ் சிங்
  • பிபிசி செய்தியாளர்
கொரோனா வைரஸ்: முடக்கநிலை முடிவடைவது எப்போது?

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ்: முடக்கநிலை முடிவடைவது எப்போது?

முடக்கநிலை எப்போது முடிவுக்கு வரும்? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்து கொள்வதற்கு முன்னதாக, மாநில அரசுகளின் சார்பில் கடந்த காலங்களில் வெளியான இந்த அறிக்கைகளைப் பாருங்கள்:

"எங்களுக்கு வேறு வழியில்லை. முடக்க நிலை நீட்டிக்கப்பட வேண்டும் என்று மாண்புமிகு பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன். இதில் தயக்கம் காட்ட வேண்டிய அவசியமில்லை." - தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ்

"ஏப்ரல் 14 க்குப் பிறகும் முடக்கநிலை நீட்டிக்கப்படும் என்று கடந்த சில நாட்களாக ஊடகங்கள் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கின்றன. இதையடுத்து மக்களிடையே பதற்றம் அதிகரித்துள்ளது. ஏப்ரல் 14 க்குப் பிறகு என்ன நடக்கும் என்பதை இப்போது சொல்ல முடியாது. நமது மாநிலத்தில் ஒரு கொரொனா பாதிப்பு இருந்தாலும்கூட முடக்க நிலையை முடிவுக்குக் கொண்டுவருவது பொருத்தமானதாக இருக்காது." - அவ்னீஷ் அவஸ்தி, உள்துறை அமைச்சக கூடுதல் தலைமைச் செயலாளர், உத்தரபிரதேச அரசு.

"மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பரிந்துரைகளை கோரியுள்ளது, மாநிலத்தில் நிலவும் நிலைமையைப் பார்த்து மாநிலங்கள் இது குறித்து முடிவெடுக்க வேண்டும். முடக்கநிலையை முதலில் அறிவித்த மாநிலம் ராஜஸ்தான்."- அசோக் கெஹ்லோத், முதல்வர், ராஜஸ்தான்.

"மகாராஷ்டிர அரசு முடக்கநிலையை வெவ்வேறு பகுதிகளில் படிப்படியாக திறக்க பரிசீலித்து வருகிறது."- ராஜேஷ் டோபே, சுகாதார அமைச்சர், மகாராஷ்டிர அரசு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

"ஏப்ரல் 14 அல்லது ஏப்ரல் 20 -ஆம் தேதி முடக்கநிலை முடிவுக்கு வந்தால், அசாமுக்கு வெளியே இருக்கும் அசாமிய இளைஞர்களும், இளம் பெண்களும் மாநிலத்திற்குத் திரும்பினால், அவர்கள் அனைவரையும் 14 நாள் தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப முடியாது, ஏனெனில் அரசாங்கத்திடம் இவ்வளவு அதிகமான மக்களை தனிமைப்படுத்துவதற்கு தேவையான வசதிகள் தற்போது இல்லை." - ஹிமாந்த் பிஸ்வா சர்மா, சுகாதார அமைச்சர், அசாம்.

இந்த அறிக்கைகள் அனைத்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களின் முதலமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வெளியிட்டவை. ஏப்ரல் 14 க்குப் பிறகு நாடு முழுவதும் ஒரே நேரத்தில் முடக்கநிலை முடிவுக்கு வராது என்பது இந்த அனைத்து அறிக்கைகளிலிருந்தும் தெளிவாகிறது.

சில கட்டுப்பாடுகளை தங்கள் தரப்பிலிருந்தும் விதிப்பதற்கு சில மாநில அரசாங்கங்களும் ஆதரவாக உள்ளன.

இந்த நிலையில் தற்போது அமலில் உள்ள முடக்கநிலை எப்போது முடிவுக்கு வரும்? அரசின் திட்டம் என்ன? இது குறித்து டெல்லி அகில இந்திய மருத்துவ விஞ்ஞானக் கழகத்தின் (எய்ம்ஸ்) இயக்குநர் ரன்தீப் குலேரியாவுடன் பிபிசி பேசியது. கோவிட் -19க்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட 11 குழுக்களில் ஒரு குழுவின் தலைவர் ரன்தீப் குலேரியா.

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ்: முடக்கநிலை முடிவடைவது எப்போது?

முடக்கநிலை எந்தெந்த பகுதிகளில் முடிவுக்கு வரும்? எங்கே நீட்டிக்கப்படும்?

டாக்டர் குலேரியாவின் கூற்றுப்படி, கொரோனா நோய்த்தொற்றின் அதிகரிப்பு விகிதம் தினமும் இரட்டிப்பாக இருக்கும் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் இப்போது முடக்கநிலையை அகற்ற முடியாது.

ஏனென்றால் முடக்கநிலையை அகற்றுவது என்பது கோவிட் -19 நோயாளிகளின் எண்ணிக்கை விரைவில் அதிகரிப்பதற்கான வாய்ப்புகளை பன்மடங்கு அதிகரிக்கும்.

இன்றுவரை கொரோனா இருப்பவர்கள் எதுவும் பதிவாகாத இடங்களில் படிப்படியாக முடக்கநிலையை அகற்றலாம்.

நாடு முழுவதும் 700 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் உள்ளன. அவற்றில் 274 மாவட்டங்களில் கொரொனா நோயாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில், ஏப்ரல் 14 க்குப் பிறகு, சுமார் 450 மாவட்டங்களில் முடக்கநிலையை தளர்த்த முடியும்.

அரசாங்கம் எந்த அடிப்படையில் முடிவெடுக்கும்?

இதுவரை, நாடு முழுவதும் 4000 க்கும் மேற்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன. தற்போது ஐந்து நாட்களில் நோயாளிகளின் எண்ணிக்கை இரட்டிப்பாகிறது.

தப்லிக் ஜமாத் நிகழ்வு நடக்காமல் இருந்திருந்தால், இந்த தொற்றுநோய் பரவல் இந்த அளவு அதிகரித்திருக்காது. மெதுவாக இருந்திருக்கும் என்று மத்திய அரசு பலமுறை கூறியுள்ளது.

முடக்கநிலை குறித்து எந்தவொரு முடிவையும் எடுப்பதற்கு முன்பு அரசாங்கம் சில விஷயங்களில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

நான்கு பிரச்சனைகளை மனதில் வைத்து அரசாங்கம் இந்த விஷயத்தில் முடிவெடுக்கும் என்று டாக்டர் குலேரியா கூறுகிறார்.

பட மூலாதாரம், Stringer / Getty

1. முடக்கநிலையை மேலும் நீட்டித்தால், அது பொருளாதாரத்தில் எவ்வளவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்? அதை அரசாங்கத்தால் ஈடுசெய்ய முடியுமா?

2. முடக்கநிலையை முடிவுக்குக் கொண்டுவந்தால், அது மக்களின் ஆரோக்கியத்தில் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்துமா?

3. முடக்கநிலை குறித்து முடிவெடுக்கும்போது, அரசு தொழில் துறையின் கேள்விகளையும், கவலைகளைகளையும் கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். முடக்கநிலை எவ்வளவு தூரம் நீட்டிக்கப்படும் என்பது மட்டுமல்ல முடிவுக்கு கொண்டுவருவதும்கூட, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதி, பிற நாடுகளுடனான உறவுகள், நாட்டின் மீதமுள்ள தொழில்துறை என பல தரப்பையும் பாதிக்கும் என்பதும் கருத்தில் கொள்ளப்பட வேண்டிய முக்கியமான விஷயங்கள்.

4. வறுமையில் வாடும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலைமைகள். அரசாங்கம் அவர்களை எந்த அளவு அணுகியிருக்கிறது? அவர்களின் பிரச்சனைகள் என்ன என்பது அரசுக்கு தெரிந்திருக்கிறதா? அவற்றை அரசாங்கத்தால் முழுமையாக தீர்க்க முடிகிறதா என்பதன் அடிப்படையிலேயே முடக்கநிலைப் பற்றிய எதிர்கால முடிவுகளை எடுக்க முடியும்.

முடக்கநிலை குறித்து மாநில அரசுகளிடமிருந்து மத்திய அரசு ஆலோசனைகளை கோரியதற்கும் இதுவே காரணம். புதன்கிழமையன்று, பிரதமர் மோடி பல்வேறு அரசியல் கட்சிகளுடன் இந்த விஷயம் குறித்து விவாதித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty images

படக்குறிப்பு,

கொரோனா வைரஸ்: முடக்கநிலை முடிவடைவது எப்போது?

முடக்கநிலையை எவ்வாறு அகற்றுவது?

முடக்கநிலையை அகற்ற இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன என்று கருதுகிறார் டாக்டர் ரன்தீப் குலேரியா. முதலில் படிப்படியாக அல்லது பகுதிவாரியாக முடக்கநிலையை அகற்றுவது.

இரண்டாவது வழி, ஒரு கொரோனா நோயாளி கூட இதுவரை பதிவாகாத சில பகுதிகளில் இயல்பு வாழ்க்கையை முழுவதுமாக மீண்டும் தொடங்கச் செய்வது.

படிப்படியாக அகற்றுவதற்கு ஆதரவளிக்கிறார் டாக்டர் ரன்தீப்.

அவரைப் பொறுத்தவரை, ஒருவர் கூட கொரோனாவால் பாதிக்கப்படாத பகுதிகளில் மட்டுமே முடக்கநிலையை முழுமையாக அகற்ற முடியும். ஆனால் இது இந்தியாவுக்கு சாத்தியமாகும் என்று தோன்றவில்லை.

பாதிக்கப்பட்டவர்கள் அல்லது பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் யாருமே, இதுவரை கொரொனா பாதிப்பு இல்லாதப் பகுதிக்கு செல்லக்கூடாது, இல்லாவிட்டால் நோய்த்தொற்று பரவும் ஆபத்தும் இதில் அடங்கியிருப்பதாக அவர் கூறுகிறார்.

எனவே, பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்களின் நடமாட்டத்தை அரசாங்கம் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஹாட்ஸ்பாட்களை அரசாங்கம் ஒருவிதமாகவும், ஹாட்ஸ்பாட் அல்லாத பகுதியை வித்தியாசமாகவும் கையாள வேண்டும் என்று டாக்டர் குலேரியா கூறுகிறார்.

'ஹாட்ஸ்பாட்' என்பது நாட்டின் பிற பகுதிகளுடன் ஒப்பிடுகையில் அதிகமானவர்கள் நோய் தொற்றுக்கு ஆளாகியிருப்பதாக பதிவாகியுள்ள பகுதிகள்.

இந்த ஹாட்ஸ்பாட்களை அடையாளம் கண்டுள்ள சுகாதார அமைச்சகம், இங்கிருந்து அது வேறு இடத்திற்கு பரவுவதற்கான வாய்ப்பைத் தடுக்க வேண்டும். இதற்காக நிலைமையைக் கட்டுப்படுத்த ஒரு சிறப்பு மூலோபாயத்தையும் உருவாக்கியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

டெல்லியின் நிஜாமுதீன் மற்றும் தில்ஷாத் கார்டன், நொய்டா, மீரட், ஆமதாபாத், மும்பை, புனே, காசர்கோடு மற்றும் பத்தனம்திட்டா ஆகிய இடங்கள் இந்த ஹாட்ஸ்பாட்களில் முக்கியமானவை என்று சொல்ல்லாம்.

இருப்பினும், இந்த ஹாட்ஸ்பாட்கள் நாள்தோறும் மாறிக்கொண்டே இருப்பவை. புதிய அரசாங்க உத்தரவின்படி, இந்தியாவில் மொத்தம் 21 ஹாட்ஸ்பாட்கள் உள்ளன.

ஏப்ரல் 14 க்குப் பிறகும் ஹாட்ஸ்பாட் பகுதிகள் நாட்டின் பிற பகுதிகளிலிருந்து முற்றிலுமாக துண்டிக்கப்பட வேண்டும் என்று டாக்டர் குலேரியா கருதுகிறார்.

அதாவது அந்த பகுதிகளில் ரயில்கள், பேருந்துகள் மற்றும் விமானப் போக்குரத்தை முற்றிலுமாக தடை செய்ய வேண்டியிருக்கும். இல்லையெனில், கொரோனா நோயாளிகள் இதுவரை இல்லாத இடங்களிலும் அதன் பாதிப்புகள் பரவிவிடும்.

முடக்கநிலையைத் தீர்மானிக்கும் போது, எந்த இடத்திற்கு விமானங்களை இயக்க அனுமதிப்பது, எந்தப் பாதையில் ரயில்களை மீண்டும் இயக்க அனுமதிப்பது ஆகியவையே அரசாங்கத்தின் முன் இருக்கும் மிகப்பெரிய சவால்.

முடக்கநிலையை படிப்படியாக நீக்குவதன் பொருள் என்ன?

முதலில் கொரோனா தொற்று இல்லாத ஒரு மாவட்டத்தில் முடக்கநிலையை நீக்கவேண்டும். பிறகு, கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை பூஜ்ஜியத்தை எட்டும் இடத்தில் முழுமையாக முடக்கநிலையை நீக்கலாம். அடுத்தபடியாக, பிற பகுதிகளைச் சேர்ந்த அனைவரும் இந்த இடங்களுக்கு வந்து செல்ல அனுமதிக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

வெளிநாட்டிலிருந்து வரும் விமானங்களுக்கு எவ்வளவு காலம் தடை?

முடக்கநிலை அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில் அனைவரின் மனதிலும் எழும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால், வெளிநாட்டிலிருந்து வருபவர்களை அரசாங்கம் எவ்வளவு காலம் தடை செய்ய முடியும் என்பதே.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்களால் மட்டுமே இந்தியாவில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக டாக்டர் குலேரியா கூறுகிறார். எனவே, வெளிநாட்டிலிருந்து வருபவர்களை நேரடியாக தனிமைப்படுத்தலுக்கு அனுப்ப அரசு ஏற்பாடுகளை செய்யலாம்.

விமான நிலையத்தில் ஸ்கிரீனிங் மற்றும் பரிசோதனையை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது. எனவே இப்போது விரைவாக பரிசோதனை செய்வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளோம். இது வியாழக்கிழமை முதல் நாட்டில் தொடங்கும்.

நிலைமை எப்போது தெளிவாகும்?

ஏப்ரல் 10 முதல் ஏப்ரல் 12ஆம் தேதிக்குள் மத்திய அரசிடம் கூடுதல் தரவுகள் வந்துவிடும் என்று கூறுகிறார் ரன்தீப் குலேரியா. முடக்கநிலையால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன, எந்தெந்த பகுதிகளில் நிலைமை எவ்வாறு இருக்கிறது என பல விஷயங்கள் அப்போதுதான் தெளிவாகும்.

கொரோனா வரைபடம் இன்னும் வளர்ந்து வருகிறதா அல்லது கொஞ்சம் 'குறுகிவிட்டதா' என்பதை தீர்மானிக்கும் நிலைக்கு அப்போதுதான் அரசாங்கம் வரமுடியும். எனவே, ஏப்ரல் 10-12ஆம் தேதிக்கு இடையில்தான் மத்திய அரசு தனது அடுத்த கட்டத்தை அறிவிக்க முடியும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: