தமிழகத்தில் கொரோனா: விவசாயிகளிடம் நேரடி கொள்முதல் செய்ய உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளதால், விவசாயிகள் பாதிப்படையாமல் இருக்க, விளைபொருட்களை அரசே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசு அறிவித்திருந்த ஆயிரம் ரூபாய் நிதியுதவியையும், ரேஷன் பொருட்களையும் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கக்கோரி வழக்கறிஞர் ராஜேஷ் தொடர்ந்த வழக்கு, நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, சமூக விலகலை முறையாக கடைப்பிடித்து இதுவரை 96% பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, கொரோனா பாதிப்பு குறையாததால் மே மாதம் ரேஷன் பொருட்கள் வழங்கும் போதும், கடைகளில் மக்கள் கூட்டம் சேராமல் விநியோகிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
பின்னர், தமிழக விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், ஊரடங்கால் நஷ்டம் அடைந்துள்ள சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டியது அவசியம் என கருத்து தெரிவித்தார்.
மேலும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் இடைத்தரகர்களுக்கு இடம் தராமல் விளை பொருட்களை அரசே நேரடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும் அறிவுறுத்திய நீதிபதிகள், விசாரணையை தள்ளி வைத்தனர்.
தமிழ்நாட்டில் மேலும் 48 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. மாநிலத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 738ஆக உயர்ந்துள்ளது. 21 பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.
கொரோனா தொற்று தொடர்பாக தமிழ்நாட்டில் 60,739 பேர் வீட்டுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 230 பேர் அரசுக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்புள்ளதாக தெரியவந்தவர்களில் 42 பேர் தில்லி மாநாடு தொடர்புடையவர்கள். மீதமுள்ள ஆறு பேரில் 2 பேர் கண்காணிப்பில் இருந்தவர்கள்.
மீதமுள்ள நான்கு பேரும் சென்னையைச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தொற்று ஏற்பட்டதற்கான காரணங்கள் கண்டறியப்பட்டுவருகின்றன.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனாவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா சோதனைகளைப் பொறுத்தவரை 6095 பேருக்கு செய்யப்பட்டுள்ளது.
கொரோனா பாதித்துள்ள 34 மாவட்டங்களில் 15,66,448 வீடுகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை 4 மருத்துவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்நோய் தாக்கி, குணம் பெற்றவர்களில் 74 வயதுப் பெண்மணியும் ஒருவர். பொழிச்சலூரைச் சேர்ந்த பெண்மணி ஒருவர் மார்ச் 26ஆம் தேதி மூச்சுத் திணறலுக்காக சேர்க்கப்பட்டார். பிறகு இவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இவருக்கு உயர் ரத்த அழுத்தம், கட்டுப்பாடில்லாத சர்க்கரை நோய் ஆகியவை இருந்தன.
தொடர்ச்சியான சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்த அவர், ஏப்ரல் 8ஆம் தேதியன்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். அவருக்கு மருத்துவர்கள் பழக்கூடை கொடுத்து அனுப்பிவைத்தனர்.
தற்போது மாநிலத்திலேயே சென்னையில்தான் அதிக எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் உள்ளனர். 156 பேருக்கு கொரோனா நோய் தொற்றுடன் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நபரை தேடி வரும் போலீசார்
இதனிடையே, விழுப்புரம் மருத்துவமனையில் கொரோனா தொற்று இல்லை என கருதி நேற்று அனுப்பப்பட்ட இளைஞருக்கு நேற்று (மார்ச் 8) கொரோனாதொற்று இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டதால், காவல் துறையினர் அவரை தேடி வருகின்றனர்.
நோய்த் தொற்று இருப்பது தெரியாமலேயே அவர் தற்போது வெளியே இருக்கிறார்.
டெல்லியைச் சேர்ந்த அந்த 30 வயது இளைஞர் கடந்த மாதம் ஒரு வழக்கில் புதுவை காவல் துறையால் கைது செய்யப்பட்டார். பின்னர், புதுவை மத்தியச் சிறையிலிருந்து கடந்த மாதம் 16ஆம் தேதி விடுதலையாகியுள்ளார். அதன் பிறகு, புதுவை மற்றும் விழுப்புரம் பகுதியில் சுற்றித்திரிந்த இவர் ஊரடங்கு உத்தரவால் விழுப்புரம் பகுதியில் தங்கியிருக்கிறார்.
தொலைப்பேசி மூலம் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின் அடிப்படையில் கடந்த 6ஆம் தேதி கொரோனா அறிகுறி காரணமாக அவர் விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை அந்த நபருக்கு கொரோனா தொற்று இல்லை என கருதி மருத்துவமனையிலிருந்து அவரை அனுப்பிவிட்டனர்.
இந்நிலையில், கொரோனா தொற்று இல்லை என்று அனுப்பி வைக்கப்பட்ட நபருக்கு, இன்று கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவமனையில் தெரிவிக்கப்பட்டது. இதனால், அவரை தற்போது காவல் துறையினர் தேடி வருகின்றனர்.
பட மூலாதாரம், Getty Images
மேலும் அவர் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுமதிப்பதற்கு முன்பு, லாரி மூலம் விழுப்புரம் சென்றடைந்ததாகவும், அவர் வந்த லாரி ஓட்டுநர்கள் இருவருடன் சில நாட்கள் ஒன்றாகத் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து விழுப்புரம் காவல்துறை உயர் அதிகாரியை தொடர்பு விளக்கம் கேட்ட போது, அவர் கூறுகையில், "மருத்துவமனையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 26 நபர்கள் கொரோனா தொற்று இல்லை என கருதி அவர்களை அனுப்பி வைத்தனர். பிறகு இன்று காலை கொரோனா தொற்று இல்லை என அனுப்பி வைத்த 26 நபர்களில் 4 பேருக்கு தொற்று இருப்பது உறுதிப் படுத்தப்பட்டுள்ளது என தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து 4 நபர்களில் 3 பேர் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் முகவரி கொண்டு கண்டறிந்துள்ளோம். ஆனால், டெல்லி மாநிலத்தைச் சேர்ந்த 4வது நபர், தற்போது எங்கிருக்கிறார் என்பது குறித்து தீவிரமாகத் தேடி வருகிறோம். விரைவில் அவரை கண்டுபிடித்து விடுவோம். இவருடன் தொடர்பிலிருந்த லாரி ஓட்டுநர்கள் தற்போது கொரோனா தொற்று குறித்து பரிசோதனை செய்வதற்காக, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்," எனத் தெரிவித்தனர்.
சேலத்தில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் அமல்
இதனிடையே, ஊரடங்கு உத்தரவை தீவிரப்படுத்தும் விதமாக சேலத்தில் வாகன ஓட்டிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்லும் வாகனங்களுக்கு ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என சேலம் மாநகர காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவையின்றி சுற்றித்திரியும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சேலம் மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக, அத்தியாவசிய பொருட்கள் வாங்கச் செல்லும் பொதுமக்கள் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே வெளியில் சென்று தேவையான காய்கறி மற்றும் மளிகை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை வாங்கி வரவேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், "ஊரடங்கு உத்தரவை தீவிரமாக நடைமுறைப் படுத்தும் விதமாக ஒவ்வொரு நாளும் வெளியே செல்லக் கூடிய வாகனங்களின் மீது ஒரு வண்ணம் என, 5 நாட்களுக்கும் ஒவ்வொரு வண்ணத்தால் அடையாளக் குறியீடு இடப்படும். அவ்வாறு அடையாளக் குறியீடு செய்யப்பட்ட வாகனம் அனுமதிக்கப்பட்ட நாட்களை தவிர மற்ற நாட்களில் தேவையின்றி வெளியே சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப்பட்டால் மேற்படி வாகன ஓட்டி மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்வதுடன் அவர்களது வாகனம் பறிமுதல் செய்யப்படும்" என சேலம் மாநகர காவல் துறை சார்பாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை பாதுகாக்க 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடுமையாக அமல்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறி வெளியே சுற்றித் திரியும் நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர்களது வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. இருப்பினும் அத்தியாவசிய பொருட்கள் வாங்க செல்வதாகக் கூறி அதிகமான பொதுமக்கள் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வெளியே சுற்றித் திரிவதால் கொரோனா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது. எனவே இதனை தடுக்கும் விதமாக தமிழகம் முழுவதும் காவல்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: