கொரோனா வைரஸ்: பல்கலைக்கழக பாடங்களை படிக்க முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள்

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
கொரோனா வைரஸ்: படிக்க முடியாமல் தவிக்கும் மாற்றுத் திறனாளி மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

சித்தரிக்கும் படம்

கொரோனா வைரஸ் தொற்றால் புதுச்சேரி பல்கலைக்கழகம் மூடப்பட்ட நிலையில், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தற்போது இணைய வகுப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் சூழலில் மாற்றுத் திறனாளி மாணவர்கள், கொரோனா பாதிக்கப்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்ட மாணவர்கள், கணினி மற்றும் இணைய வசதிகள் இல்லாதவர்கள் உள்ளிட்டோர் பல்கலைக்கழகம் நடத்தும் இணைய வழி வகுப்பில் பங்கேற்க முடியாமலும் தவித்து வருகின்றனர்.

பேராசிரியர்கள் கட்டாயம் முடிக்க வலியுறுத்தும் பணிகளை, செய்யமுடியாத சூழ்நிலையிலும மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மனிதவள அமைச்சகத்தின் உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கடந்த மார்ச் 17ஆம் தேதி மூடப்பட்டன.

இதனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் இயங்கிவரும் மத்திய பல்கலைக்கழகத்தில் வகுப்புகள் ரத்து செய்யப்பட்டதுடன் விடுமுறை அளித்து, விடுதிகள் மூடப்பட்டன.

இந்நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பல்கலைக்கழக விடுதியில், தங்கிப் படித்து வரும் மாணவர்கள் அனைவரும் அவரவர் மாநிலத்திற்குச் சென்றனர். இவர்களில் சிலர் இதுவரை அவர்களுடைய சொந்த மாநிலத்திற்குச் சென்றடைய முடியாமல் ஆங்காங்கே விடுதியில் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனிடையே,  இந்தியாவின் பல்கலைக்கழக மானியக்குழு (UGC) அறிவுறுதலின்படி  விடுமுறையில் இருக்கும் மாணவர்கள், அவர்களின் பாடத்திட்டங்களில் தொடர்ந்து தங்களை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்காக இணைய வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதனால், புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பல்வேறு இணையக் காணொளி தொடர்புகள் (Skype, Zoom) மூலமாகப் பாடவகுப்புகளைப்  பேராசிரியர்கள் நடத்தி வருகின்றனர். பின்னர், நடத்தப்படும் வகுப்புகள் தொடர்பாகச் செய்முறைகளும், பணிகளும் மாணவர்களுக்குக் கொடுக்கப்படுகிறது. 

பெரும்பாலான மாணவர்களுக்குக் கணினி மற்றும் இணைய வசதிகள் இல்லாமல் இருக்கின்றனர். மேலும், கொரோனா முன்னெச்சரிக்கைக் காரணமாகச் சிலர் வசிக்கும் பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்ட காரணத்தினாலும், இணைய வகுப்புகளுக்குப் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற நிலையில், பேராசிரியர்கள் கொடுக்கும் பாடப்பணிகளை எவ்வாறு முடிக்க முடியும் என்று கேள்வி எழுப்புகின்றனர். இதில் சில மாற்றுத் திறனாளி மாணவர்கள் தங்களுக்கு உதவ ஆட்கள் இல்லாத நேரத்தில், இதுபோன்ற பணிகளைச் செய்ய முடியாத நிலையில் இருப்பதாகக் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

இதுகுறித்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த, பார்வை மாற்றுத் திறனாளி மாணவி ஜெய ப்ரவீனா கூறுகையில், "பார்வை குறைபாடு கொண்ட நான், எனது குடும்பத்தில் பாடம் கற்கும் முதல் தலைமுறையாவேன். நேரத்தை வீணடிக்காமல் படிப்பதில் எனக்கு எந்தவொரு கஷ்டமும் இல்லை"

"பார்வை குறைபாடு இருப்பதால் அடுத்தவரின் உதவியின்றி படிப்பதும், எழுதுவதும் என்னால் தானாகச் செய்ய முடியாத ஒன்று. பல்கலைக்கழகத்தில் இருந்தவரை எங்களுக்கென்று பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வகுப்புகள் மற்றும் உதவியாளர்கள் துணை கொண்டு பாடம் தொடர்பாக அனைத்தும் செய்து வந்தேன்.

"தற்போது பேராசிரியர்கள் இணையம்மூலம் அனுப்பும் பாடம் தொடர்பான கோப்புகளை பெறுவதென்பதே மிகவும் கடினமாக இருக்கிறது"

மேலும், என்னைப் போன்ற மாணவர்களுக்கு உதவியாட்கள் இன்றி பேராசிரியர் கொடுக்கும் பணிகளை எழுதுவது என்பது சவாலான காரியம். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருக்கும் நாட்களுக்குள் பாடப்பணிகளை முடிக்கக் காலக்கெடு கொடுக்கக்கூடாது. அது எங்களைப் போன்றவர்களுக்குக் கடினமானதாக இருக்கும்," எனத் தெரிவித்தார்.

கேரள மாநிலத்தைச் சேர்த்த பல்கலைக்கழக மாணவி ஷாலினி அனன்யா கூறுகையில், "என்னிடம் சொந்தமாகக் கணினி கிடையாது. பொதுவாகவே விடுமுறை நாட்களில் வீடு திரும்பினால், இணையம் தொடர்பாக உதவி தேவைப்பட்டாலோ அல்லது வகுப்பில் கொடுக்கப்படும் பணிகளை முடிப்பதற்காக இணையச் சேவை பெற, வீட்டின் அருகே இருக்கும் கணினி மையத்திற்குச் செல்வேன். ஆனால், இப்போது ஊரடங்கு இருப்பதால் என்னால் வீட்டை விட்டு வெளியேற முடியாது, கணினி மையமும் மூடப்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் பேராசிரியர்கள் கொடுக்கும் பணிகளைச் செய்து முடிப்பது கடினமான விஷயம் ," எனத் தெரிவித்தார்.

மேலும், பல்கலைக்கழக மாணவி ஒருவர் கூறுகையில், "பேராசிரியர்கள் கொடுக்கும் பணிகள் அனைத்தும் குறிப்பிட்ட காலத்திற்குள்  முடிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

தற்போது திருநெல்வேலி மாவட்டத்தில், நான் இருக்கும் பகுதிக்கு அருகே பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வசிக்கும் பகுதியில் 15 நபர்களுக்கு மேல் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதால், அந்த மாணவன் உட்பட அப்பகுதி மக்களை முன்னெச்சரிக்கையாக அரசுப் பள்ளியில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர். இதுபோன்ற சூழ்நிலையில் இருக்கும் மாணவர்களால் எப்படி இணைய வகுப்பில் பங்கேற்க முடியும். எவ்வாறு பேராசிரியர்கள் கொடுக்கும் பணிகளைச் செய்ய முடியும்," எனத் தெரிவித்தார்.   

இதுகுறித்து புதுவைப் பல்கலைக்கழக நிர்வாகத்தைத் தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டபோது, நிர்வாகம் தரப்பில் கூறியதாவது, " பல்கலைக்கழக மானியக்குழு இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் கட்டாயமாக இணைய வகுப்புகள் எடுக்க அறிவுறுத்தியுள்ளனர்.

அதனடிப்படையில், புதுவைப் பல்கலைக்கழகத்தில் இணையக் காணொளி வசதிகள் மூலமாக மாணவர்களுக்கு வகுப்பெடுக்கப்படுகிறது. மாணவர்கள் பயின்று வரும் பாடப்பிரிவுகளில், அவர்களுக்கு முழுவதுமாக சலிப்பு தட்டிவிடக் கூடாது என்பதாகவே இவ்வாறு செய்யப்படுகிறது. இது மாணவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்வதற்காக மட்டுமே தவிர, அவர்களை மதிப்பீடு செய்வதற்கில்லை. மேலும், பேராசிரியர்கள் கொடுக்கும் பணிகளை, பல்வேறு இடர்பாடுகள் காரணமாகச் செய்ய முடியாத  மாணவர்களின் சூழ்நிலை குறித்து நிர்வாகத்துடன் ஆலோசிக்கப்படும்," எனத் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: