கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?

கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் அண்மைய தகவல் என்ன?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றால் இதுவரை இந்தியாவில் மொத்தம் 5734 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் இணை செயலர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்.

இவர்களில் 473 பேர் குணமடைந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 549 பேர் புதிதாக கொரோனா வைராஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுவரை இந்தியாவில் 166 பேர் உயிரிழந்துள்ளனர் இதில் 17 பேர் நேற்று உயிரிழந்தவர்கள் ஆவர்.

மஹாராஷ்டிரா, தமிழ்நாடு மற்றும் டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களியே அதிகம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மஹாராஷ்டிரா மாநிலத்தில் 1135 பேரும் தமிழகத்தில் 738 பேரும் டெல்லியில் 669 பேரும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

80000 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் தயார் செய்து கொண்டிருக்கும் நிலையில் 5000 ரயில்வே பெட்டிகளில் 3250 பெட்டிகள் தற்போது தயார் நிலையில் உள்ளது என மத்திய சுகாதாரத் துறை செயலாளர் லாவ் அகர்வால் கூறியுள்ளார்.

மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு உள்ளான மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவிக்கிறது.

மருத்துவர் உயிரிழந்த தகவலை இந்தூரில் உள்ள மகாத்மா காந்தி நினைவு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வெளியிட்டுள்ளது.

அவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தாரா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் உண்டாக்கும் கோவிட்-19 தொற்றுக்கு மருத்துவர் ஒருவரே உயிரிழப்பது இதுதான் முதல்முறை.

200க்கும் அதிகமானோர் கோவிட்-19 தொற்றுக்கு உள்ளாகியுள்ள இந்தூரில், இதுவரை 22 பேர் இறந்துள்ளனர்.

கொரோனா வைரஸால் உண்டாகும் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது குறித்த 10 முக்கிய தகவல்கள் தொகுக்கப்பட்டுள்ளன.

1.கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் இந்தியாவில் அமலில் இருக்கும் 3 வார ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2.இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,734ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை மட்டும் கூடுதலாக 773 பேருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

3.இறந்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து 149இல் இருந்து 166 ஆகியுள்ளது என்று இன்று, வியாழக்கிழமை, காலை 10 மணியளவில் இந்திய சுகாதார மற்றும் குடும்பநலத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

4.இதுவரை இந்தியாவில் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு உள்ளான 473 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 5095 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5.தலைநகர் டெல்லி, மும்பை, சண்டிகர் ஆகிய நகரங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதனை மீறுபவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

6.டெல்லியில் தப்லிக் ஜமாத் நிகழ்வு நடந்த இடமான நிஜாமுதீன் உள்ளிட்ட 20 இடங்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.

7.இந்த இடங்களுக்குள் செல்லவோ அல்லது அங்கிருந்து வெளியேறவோ மக்களுக்கு அனுமதி அளிக்கப்படாது என்று டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோதியா தெரிவித்துள்ளார். மக்களுக்கு தேவையான பொருட்களை அரசாங்கம் அவர்களிடம் கொண்டு சேர்க்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

8.இந்தியாவில் அதிகம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிர மாநிலத்தில்தான். அங்கு புதிதாக 162 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து மொத்தம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1297ஆக அதிகரித்துள்ளது.

9.ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்து மீதான தடையை விலக்கிய இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கும் இந்தியர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

10.கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக பிரேசில் மக்களிடம் உரையாற்றிய அந்த நாட்டின் அதிபர் சயீர் பொல்சனாரூ, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்துகளை ஏற்றுமதி செய்வதற்கான தடையை நீக்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோதிக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: