தமிழ்நாட்டில் கொரோனா- ஒரு மருத்துவர் உட்பட மேலும் 96 பேருக்கு பாதிப்பு; மூன்றாம் கட்டத்திற்குச் செல்கிறதா?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் மேலும் 96 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 834ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக தொற்று ஏற்பட்டுள்ள 96 பேரில் 84 பேர் ஒரே குழுவைச் சேர்ந்தவர்கள். மீதமுள்ள 12 பேரில் மூன்று பேர் வெளிமாநிலங்களுக்குச் சென்று திரும்பியவர்கள். 8 பேர் இவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள். மீதமுள்ள ஒருவர் மருத்துவர்.

தனியார் மருத்துமனையில் பணியாற்றிவந்த இவருக்கு நோயாளிகள் மூலம் தொற்று ஏற்பட்டிருப்பதாகக் கருதப்படுகிறது.

கொரோனா ஏற்பட்டு சிகிச்சைபெற்று வருபவர்களில் 6 பேரின் உடல் நிலை சற்று மோசமான நிலையில் உள்ளது. மேலும் ஒருவருக்கு செயற்கை சுவாசக் கருவி பொறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 27 பேர் உடல் நலம் பெற்று மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பியுள்ளனர்.

தமிழ்நாட்டிலிருந்து தில்லியில் நடந்த ஒரு மாநாட்டிற்குச் சென்று வந்தவர்கள் என 1480 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இது தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் 763 பேருக்கு கொரோனா ஏற்பட்டிருப்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் தற்போது 59918 பேர் வீட்டுக் கண்காணிப்பில் உள்ளனர். 213 பேர் அரசின் கண்காணிப்பில் உள்ளனர். 32896 பேருக்கு 28 நாட்கள் கண்காணிப்பு முடிவடைந்துள்ளது. 16,61, 487 வீடுகள் தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டுப் பயணமோ, கொரோனா நோயாளிகளுடன் தொடர்போ இல்லாவிட்டாலும்கூட, மூச்சுத் திணறல் ஏற்படும் நோயாளிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது. இதுவரை சுமார் 500 பேருக்கு அந்த சோதனை செய்யப்பட்டதில், 3 பேருக்கு மட்டுமே அந்நோய் உறுதியாகியுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் தற்போது கொரோனா இரண்டாம் கட்டத்திலிருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்கு செல்லும் வாய்ப்பிருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கிறார். அதனைக் கட்டுப்படுத்த தமிழக அரசு முயன்று வருவதாகவும் கூறினார்.

தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி, வியாழக்கிழமை இரவுக்குள் கொரோனாவைச் சோதனை செய்வதற்காந 50,000 ரேபிட் டெஸ்ட் கிட் வந்துவிடுமெனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த முதலமைச்சரிடம் ஒரிசா மாநிலத்தில் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, தமிழ்நாட்டில் தொடர்ந்து கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதாகத் தெரிவித்த முதல்வர், இதற்கென அமைக்கப்பட்டிருக்கும் குழுக்களின் ஆலோசனைகளைப் பெற்று இது தொடர்பாக முடிவெடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

கொரோனா தொற்று தற்போது இரண்டாம் கட்டத்தில் இருந்தாலும் மூன்றாம் கட்டத்திற்குச் செல்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. இருந்தபோதும் இரண்டாம் கட்டத்திலேயே இதனைத் தடுத்துவைப்பதற்கான முயற்சியில் மாநில அரசு முழுமையாக ஈடுபட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தமிழக அரசு தற்போது வாங்கியுள்ள ரேபிட் டெஸ்ட் கிட்களின் மூலம் முதலில் யாராரெல்லாம் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களின் குடும்பத்தினருக்கு சோதனை செய்யப்படும். அடுத்ததாக, இந்தக் குடும்பத்தினரோடு தொடர்பில் இருந்தவர்களுக்கு சோதனை செய்யப்படும். அதற்குப் பிறகு, அந்த வீட்டைச் சுற்றி இருந்தவர்களுக்கு சோதனை செய்யப்படும் என முதலமைச்சர் தெரிவித்தார்.

தூய்மைப் பணியாளர் நல வாரியம், கதர் கிராம தொழிலாளர் நல வாரியம், மீனவர் நல வாரியம், மூன்றாம் பாலினத்தவர் நல வாரியம், சிறு வியாபாரிகள் நல வாரியம், பூசாரிகள் நல வாரியம், உலாமாக்கள் நல வாரியம், சீர் மரபினர் நல வாரியம், நரிக்குறவர் நல வாரியம், திரைத்துறையினர் நல வாரியம், நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியம் ஆகிய வாரியங்களில் இடம்பெற்றுள்ள 7 லட்சம் பேருக்கு ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டு முழுவதுமுள்ள 1170 பட்டாசுத் தொழிற்சாலைகளில் பணிபுரிந்து தொழிலாளர் ஈட்டுறுதி மருத்துவமனை திட்டத்தில் பதிவுசெய்ள்ள 1,70,200 பேருக்கும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படுமென்றும் அரசு அறிவித்துள்ளது.

சென்னையில் ஊரடங்குப் பணியில் பணிபுரிந்துவந்த 33 வயது காவலர் ஒருவர் உயிரிழந்துவிட்ட நிலையில், அவர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்ச ரூபாய் வழங்கப்படுமென முதலமைச்சர் தெரிவித்தார். மேலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணி வழங்கப்படுமென்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோல, அரசு ஊழியர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் கொரோனா தடுப்புப் பணியில் இருக்கும்போது உயிரிழந்தால் அவர்களது குடும்பத்தினருக்கும் இதே போன்ற சலுகை வழங்கப்படுமென்றும் முதல்வர் தெரிவித்தார்.

ஊரடங்கு நாட்கள் நீட்டிக்கப்படும் பட்சத்தில், கூடுதலாக நிதி உதவி வழங்கப்படும் வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்விக்கு, மற்ற மாநிலங்களைப் போல இல்லாமல் தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு சம்பளப் பிடித்தம் செய்யப்படுவதில்லை. இருக்கும் நிதியை வைத்துத்தான் உதவிசெய்ய முடியுமெனத் தெரிவித்தார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

கொரோனா நோய்க்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனைகளில் மருத்துவர்களோ, மருந்துகளோ, செவிலியர்களோ இல்லாத நிலை கிடையாது என்றும் முதலமைச்சர் தெரிவித்தார். பத்தாம் வகுப்புகளுக்கு தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலித்துவருவதாகவும் கடைகள் திறக்கப்படுவதைப் பொறுத்தவரை, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உள்ளூர் அமைப்புகளோடு பேசி முடிவுசெய்யலாம் எனக் கூறப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

முட்டை விலை மீண்டும் உயர்வு - உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சி

இந்நிலையில், கொரோனா நோய்த்தொற்றை தொடர்புபடுத்தி பரப்பப்பட்ட ஆதாரமற்ற தகவல்களினால் தமிழகத்தில் முட்டையின் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்தது. தற்போது, முட்டையின் தேவை அதிகரித்திருப்பதால் அதன் விலை மீண்டும் ஏற்றம் கண்டுள்ளதாக நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த உற்பத்தியாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவிக்கின்றனர்.

நாமக்கல் மாவட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப் பண்ணைகள் உள்ளன. இங்கு உற்பத்தி செய்யப்படும் கோழி மற்றும் முட்டை தென் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

"கொரோனா நோய், கறிக்கோழி மற்றும் முட்டையால் பரவுவதாக எழுந்த வதந்திகளால், முட்டை விற்பனை கடுமையான சரிவைச் சந்தித்து. ரூ.4.10க்கு விற்கப்பட்ட ஒரு முட்டை, மார்ச் மாதத்தில், ரூ.1.95ஆகக் குறைந்தது. இதனால், பண்ணைகளில் உற்பத்தியும் குறைக்கப்பட்டது.

இந்நிலையில், முட்டை மற்றும் கோழி இறைச்சியால் கொரோனா நோய்த்தொற்று பரவாது என தற்போது மக்கள் புரிந்துகொண்டதால், மீண்டும் முட்டைகளை வாங்கி வருகின்றனர். இதனால், அவற்றின் தேவையும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது." என்கிறார் கோழிப்பண்ணை உரிமையாளர் தியாகராஜன்.

தற்போது, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ.4-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: