கொரோனா வைரஸ்: “உங்கள் ஊரில் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறதா?” - தெரிந்து கொள்ள இந்தக் கட்டுரையைப் படியுங்கள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான முக்கிய செய்திகளை தொகுத்து வழங்குகிறோம்.

இந்து தமிழ் திசை - "3 பகுதிகளாக பிரித்து ஊரடங்கை நீட்டிக்க முடிவு"

கொரோனா வைரஸ் பாதிப்பின் அளவைப் பொறுத்து, சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 பகுதிகளாகப் பிரித்து நாட்டில் ஊரடங்கை நீட்டிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்கிறது இந்து தமிழ் திசை.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியவுடன், கடந்த மாதம் 24-ம் தேதி நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. 21 நாட்களுக்கு அறிவிக்கப்பட்ட ஊரடங்கு நாளை 14-ம் தேதியுடன் முடிகிறது. இதற்கிடையில், இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதித்தோரின் எண் ணிக்கை 8,356 ஆக அதிகரித்துள்ளது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 273 ஆக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல மாநில முதல்வர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். பிரதமர் மோதியும் மாநில முதல்வர்களுடன் காணொளி வழியாக 2 முறை ஆலோசனை நடத்தி உள்ளார். இதற்கிடையில், ஒடிசா, தெலங்கானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் ஊரடங்கை ஏப்ரல் 30-ம் தேதி வரை நீட்டித்து விட்டன.

இந்நிலையில், ஊரடங்கை நீட்டித்தால் ஏழைகள் பாதிக்கப்படுவார்கள் என்று பல தரப்பில் இருந்தும் குரல்கள் எழுந்துள்ளன. இந்த நெருக்கடியான சூழ்நிலையில், கொரோனா வைரஸ் பாதிப் பின் அளவைப் பொறுத்து சிவப்பு, ஆரஞ்சு, பச்சை என 3 பகுதிகளாகப் பிரித்து ஊரடங்கு நீட்டிப்பது அல்லது சற்று தளர்த்துவது என மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன் விவரம் வருமாறு:

நாட்டில் கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படாத மாவட்டங்கள் 'பச்சை' பகுதிகளாகக் கருதப்படும். அதன்படி, நாட்டில் 400 மாவட்டங்களில் இது வரை கொரோனா வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15க்கும் குறைவாக இருக்கும் மாவட்டங்கள் 'ஆரஞ்ச்' பகுதிகளாகக் கருதப்படும். இந்தப் பகுதிகளில் பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அவர்களால் மற்றவர்களுக்கு வைரஸ் பரவாத நிலையில், குறைந்த அளவில் பேருந்து போக்குவரத்து அனுமதிக்கப்படும். அதேபோல், பயிர்கள் அறுவடைப்பணிகளும் அனுமதிக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸால் 15 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கும் மாவட்டங்கள் 'சிவப்பு' பகுதிகளுக்குள் அடங்கும்.

இதுபோன்ற மாவட்டங்களில் தற்போதுள்ள நிலையே நீடிக்கும். அங்கு போக்குவரத்து தடை செய்யப்படும்.

அத்தியாவசியப் பொருட்கள் விற்கும் கடைகள் திறக்க கட்டுப்பாடுகள் நீடிக்கும்.

அதன்படி, எந்தெந்தப் பகுதி களில் ஊரடங்கை தளர்த்துவது என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.

உணவு உற்பத்தி, விமானப் போக்குவரத்து, மருந்து கம்பெனிகள், தொழிற்சாலைகள், கட்டுமானத் தொழில்களுக்கு உள் துறை அமைச்சகம் அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படு கிறது. எனினும், சமூக இடைவெளி தொடர்ந்து வலியுறுத்தப்பட உள்ளது.

எனினும், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மேலும் பாதிக்காமல் இருக்கவும், விவசாயத் துறையில் தளர்வு களை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தினமணி - 'பிஎம் கேர்ஸ்' நிதிக்கு எதிரான மனு

பட மூலாதாரம், ROB STOTHARD / GETTY IMAGES

'பிஎம் கேர்ஸ்' நிதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது என்கிறது தினமணி நாளிதழ் செய்தி.

முன்னதாக, கடந்த 28-ஆம் தேதி பிரதமரின் குடிமக்கள் உதவி மற்றும் அவசரக்கால நிவாரண நிதி (பிஎம் கோ்ஸ்) உருவாக்கப்பட்டது. கொரோனா பிரச்சினையைச் சமாளிப்பதற்காக இந்த நிதி உருவாக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிதியின் தலைவராக பிரதமர் இருப்பார். பாதுகாப்பு, உள்துறை மற்றும் நிதித்துறை அமைச்சர்கள் இதில் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

ஏற்கெனவே பிரதமா் தேசிய நிவாரண நிதி இருக்கும்போது, புதிதாக இந்த நிதி உருவாக்கப்பட்டது ஏன் என்ற கேள்வி எழுந்தது. ஏனெனில், இதுபோன்ற தேசிய அளவிலான பேரிடர், பிரச்சினைகள் எழும்போது பிரதமர் தேசிய நிவாரண நிதிக்கே நிதி வழங்க கோரிக்கை விடுக்கப்படும். ஆனால், இப்போது 'பிஎம் கோ்ஸ்' உருவாக்கப்பட்டது பல சந்தேகங்களையும் உருவாக்கியது.

இந்நிலையில் வழக்குரைஞர் எம்.எல். சர்மா என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் இது தொடர்பாக ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் எவ்வித அவசர சட்டம் அல்லது அரசு அறிவிக்கை ஏதுமின்றி இதுபோன்ற ஒரு நிதியம் உருவாக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு நன்கொடை அளிக்குமாறு பிரதமரும் கேட்டுக் கொள்கிறார். இந்த நிதியத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் பிரதமரைச் சார்ந்தவர்களாகவே உள்ளனர். எனவே, இந்த நிதியம் அமைத்தது தொடர்பாக நீதிமன்ற கண்காணிப்பில் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். அதில் சேர்ந்துள்ள நிதியை இந்திய அரசின் ஒருங்கிணைந்த நிதித் தொகுப்புக்கு மாற்ற வேண்டும்.

மேலும் இந்திய அரசியலைப்புச் சட்டத்தின் 267 மற்றும் 266(2)-இன் படி இந்த நிதியம் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அப்படி உருவாக்குவதென்றால் நாடாளுமன்றத்தின் ஒப்புதல் தேவை. மேலும் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அதன்படி 'பிஎம் கோ்ஸ்' நிதியம் அரசியல் சாசன விதிகளின்படி உருவாக்கப்படவில்லை என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், எம்.எம். சந்தானகெளடா் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு காணொலி முறையில் திங்கள்கிழமை விசாரணைக்கு வருகிறது. - இவ்வாறாக அந்நாளிதழ் விவரிக்கிறது.

தினத்தந்தி - "9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியம் கையிருப்பில் உள்ளது"

பட மூலாதாரம், Getty Images

9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளதாக மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறி உள்ளார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

கொரோனா காரணமாக நாடு முழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கை மத்திய அரசு மேலும் நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், மந்திரி பஸ்வான் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், "பெருந்தொற்று வைரசான கொரோனாவை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஆதரவு அளித்து வருகிறார்கள்.

நாடு முழுவதும் உணவு தானியங்களை ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்வதிலும், வினியோகம் செய்வதிலும் எந்த பிரச்சினையும் இல்லை. இதற்கு முன் எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த பணி சிறப்பாக நடைபெறுகிறது. ரேஷன் கடைகளில் ஏழைகளுக்கு உரிய நேரத்தில் பொருட்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

9 மாதங்களுக்கு தேவையான உணவு தானியங்கள் அரசின் கையிருப்பில் உள்ளன. கடந்த 10-ந்தேதி நிலவரப்படி அரசின் சேமிப்பு கிடங்குகளில் 299.45 லட்சம் டன் அரிசி, 235.33 லட்சம் டன் கோதுமை என மொத்தம் 534.78 லட்சம் டன் அரிசியும், கோதுமையும் உள்ளன.

இப்போது அறுவடை காலம் என்பதால், புதிதாக அரசின் தொகுப்புக்கு வரும் உணவு தானியங்களையும் சேர்த்து நம்மிடம் கையிருப்புக்கு வரும் உணவு தானியங்கள் 2 ஆண்டுகளுக்கு போதுமானதாக இருக்கும். மக்களுக்கு உணவு தானியங்கள் கிடைப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படக்கூடாது என்பதில் மத்திய அரசு மிகவும் கவனமாக உள்ளது.

பொது விநியோக திட்டத்தின் கீழ் ஒரு மாதத்துக்கு 60 லட்சம் டன் உணவு தானியம் மக்களுக்கு வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர பருப்பும் வழங்கப்படுகிறது. மாதம் 35 கிலோ உணவு தானியம் பெறும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள அந்தியோதயா திட்ட பயனாளிகளுக்கு, அவர்கள் குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது.

கட்டுப்பாடுகளை நீக்கி, பொது வினியோக திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 3 மாதங்களுக்கு உணவு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என்று மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டு இருக்கிறது.

ஊரடங்கு அமலில் இருக்கும் இந்த காலக்கட்டத்தில் உணவுப் பொருட்கள் சப்ளையில் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே அப்படி ஒரு சூழ்நிலை ஏற்படாமல் இருக்க அரசு உன்னிப்பாக கண்காணித்து வருகிறது. இதனால் எந்த இடையூறும் இல்லாமல் எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்கிறது.

ஊரடங்கு காலத்தில் யாரும் பட்டினியால் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது." என்று அவர் கூறினார் என்கிறது தினத்தந்தி நாளிதழ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: