தமிழகத்தில் தன்னார்வலர்கள் நிவாரணம் வழங்குவதுவதற்குத் தடையா?: என்ன சொல்கிறது அரசு?

கொரோனா

பட மூலாதாரம், ARUN SANKAR/Getty images

தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் நிவாரண உதவிகளை வழங்குவதற்குத் தடை இல்லையென்றும் வழிமுறைகளில்தான் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக ஊரடங்கு விதிக்கப்பட்டிருக்கும் நிலையில், புலம்பெயர்ந்து பணியாற்றும் தொழிலாளர்கள், ஆதரவற்றோர் என சில தரப்பினருக்கு அரசு, உள்ளாட்சி அமைப்புகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் ஆகியவை உணவு வழங்குவது போன்ற உதவிகளைச் செய்துவருகின்றன.

இந்த நிலையில், இது தொடர்பாக தமிழக அரசு ஞாயிற்றுக்கிழமையன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது, அந்த அறிவிப்பில், "மக்கள் வீட்டை விட்டு வெளியில் வருவதையும் கூட்டம் கூடுவதையும் தவிர்த்து அதன் மூலம் சமூக இடைவெளியைப் பின்பற்றி வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்கவே ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் சில அமைப்புகளும் சில நபர்களும் அரசியல் கட்சிகளும் ஊரடங்கு உத்தரவு விதிமுறைகளுக்கு புறம்பாக பல்வேறு இடங்களில் உணவுப் பொருட்களையும் சமையல் பொருட்களையும் வழங்குவது தடை உத்தரவை மீறும் செயலாகும். இது போன்ற நடவடிக்கைகள் வைரஸ் தொற்று பரவ வழிவகுக்கும்.

உதவிசெய்ய விரும்பினால் பொருட்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடமோ மாநகராட்சி கமிஷனர்களிடமோ ஊராட்சிகளில் செயல் அலுவலர்களிடமோ கொடுக்க வேண்டும். இதனை மீறி யாராவது செயல்பட்டால் ஊரடங்குச் சட்டத்தை மீறியதாகக் கருதி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை அதிகாரிகள் வலியுறுத்தப்படுகிறார்கள்" எனக் கூறப்பட்டிருந்தது.

எதிர்க்கட்சியான தி.மு.க. நேற்று புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உணவும் நிவாரணப் பொருட்களும் வழங்கியது. அரசின் இந்த அறிக்கையை அடுத்து, தி.மு.கவின் சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. "தானும் செய்யமாட்டேன், மற்றவர்களும் செய்யக்கூடாது என்பது இந்த ஆட்சியின் வஞ்சகம். கூட்டம் சேர்வதை ஒழுங்கு படுத்தலாம். உதவியே செய்யக்கூடாது என்று எப்படி உத்தரவிட முடியும்? மக்களின் கண்ணீர் துடைக்க தமிழ் மக்களின் கரங்கள் நீளும்போது அதைத் தடுக்க எவராலும் இயலாது. தடுக்க நினைப்பது சர்வாதிகாரத்தனம்" என்று தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று காலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல் அமைச்சர் பழனிசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் ஒன்று நடைபெற்றது. இதற்குப் பிறகு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "புயல், வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் செய்வதைப் போல தற்போது உதவிசெய்ய ஆரம்பித்துவிட்டால் நோய்த் தொற்றுதான் அதிகமாகும் என பொது சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர். அதனால்தான் எந்த ஒரு அமைப்பு நிவாரணம் வழங்கினாலும் அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் அல்லது உள்ளாட்சி அதிகாரிகளிடம் வழங்கும்படி கூறப்பட்டது. தன்னார்வலர்கள் வழங்கும் மளிகைப் பொருட்களோ, பிற பொருட்களோ வழங்குபவர்கள் சொல்லும் பகுதிக்கு, அல்லது சொல்லும் நபர்களுக்கு வழங்கப்படும்.

இந்தப் பணியில் தன்னார்வலர்கள் மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு இணைந்து செயல்படலாம். நேற்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் உள்ள சில அம்சங்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருக்கின்றன. சூழ்நிலைக்குத் தகுந்தாற்போல உரிய வழிமுறைகளைப் பின்பற்றி செயல்படத்தான் அரசு கேட்டுக்கொண்டுள்ளதே தவிர, யாருக்கும் தடை விதிக்கவில்லை. இதில் அரசு எந்தவிதமான அரசியலும் செய்யவில்லை" என்று கூறப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: