கொரோனா வைரஸ்: ஊரடங்கை மீறி கோயில் தேர் இழுக்க கூடிய கூட்டம்

  • இம்ரான் குரேஷி
  • பிபிசி
கொரோனா வைரஸ்

பட மூலாதாரம், ANI

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் அமலில் உள்ள ஊரடங்கு உத்தரவை மீறி கர்நாடகாவின் கலபுரகி மாவட்டத்தில் உள்ள கோயில் ஒன்றின் தேர் திருவிழாவில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

கோவிட்-19 தொற்றுக்கு இந்தியாவில் நிகழ்ந்த முதல் மரணம் கலபுரகி மாவட்டத்தில்தான்.

அந்த மாவட்ட நிர்வாகம் தற்போது திருவிழா நடத்தப்பட்ட ரெவூர் கிராமத்தின் எல்லைகளை மூடி அதை தனிமைப்படுத்திவிட்டது.

மேலும் சித்தபுர் தாலுகாவின் வட்டாச்சியர் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் ஆகியோர், சமூக விலகளை மீறும் வகையில், தேர் திருவிழாவை தடுக்காமல் இருந்ததற்காக பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள்

17656

மொத்தம்

2842

குணமடைந்தவர்கள்

559

இறந்தவர்கள்

தகவல்: சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம்

கடைசியாக புதுப்பிக்கப்பட்ட நேரம்: 11: 30 IST

இந்த கிராமம் , வாடி என்னும் கிராமத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. வாடி கிராமத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்ட பின், சுமார் 10,000 பேர் வசிக்கும் ஒரு பகுதி தனிமைப்படுத்தப்பட்டது.

ஆனால், அங்கு கொரோனா வைரஸ் தொற்றின் மூலம் யார் என்பது இதுவரை தெரியவில்லை.

புதன்கிழமை மாலை சில கோயில் பூசாரிகள் மற்றும் அறங்காவலர்கள் முன்னிலையில் கோயிலில் வழக்கமாக செய்யப்படும் சடங்குகள் நடந்துள்ளன என அதிகாரிகள் பிபிசி இந்தி சேவையிடம் கூறியுள்ளனர்.

"ஆனால் அதற்கு அடுத்த நாள் அதிகாலை நேரத்தில் தேர் கோயிலை விட்டு வெளியே கொண்டு வரப்பட்டு நூற்றுக்கணக்கான மக்களால் இழுக்கப்பட்டது," என அதிகாரி ஒருவர் கூறினார். ஆயிரத்திற்கும் குறைவானோர் இதில் கலந்துகொண்டதாக தெரிகிறது.

"இந்த திருவிழா நடத்தப்படாது என ஊர் மக்கள் அரசுக்கு உறுதி அளித்தனர். அது தொடர்பாக ஒரு செய்தியாளர் சந்திப்பும் நடத்தினர். இந்த திருவிழாவை நடத்தக்கூடாது என அதிகாரிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். மேலும் கோயில் அறங்காவலர்களுடன் இது குறித்து ஆலோசனை செய்தனர்," என சித்தபுரின் சட்டமன்ற உறுப்பினர் பிரியங்க் கார்கே பிபிசி இந்தி சேவையிடம் கூறியுள்ளார்.

கோவிட்-19 பரவத் தொடங்கியபின், இந்தியாவிலேயே ஒரு குறிப்பிட்ட பகுதியில் பொது நடமாட்டக் கட்டுப்பாட்டை விதித்த முதல் மாவட்டம் கலபுரகி மாவட்டம்.

இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் இருந்தால் அந்த பகுதியை உடனடியாக மூடிவிட்டு அங்கிருக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்களை அரசாங்கமே வழங்கும்.

மாவட்ட நிர்வாகம் தற்போது ரெவூர் கிராமத்தில் மருத்துவ முகாம் அமைக்க மருத்துவ குழுவைத் துரிதமாக அனுப்பியுள்ளது.

"நாங்கள் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ முகாம்களை அமைக்க ஒரு மருத்துவக் குழுவை அங்கு அனுப்புகிறோம். அந்த கிராமத்தின் எல்லைகளை ஏற்கனவே மூடியாயிற்று," என கலபுரகி மாவட்டத்தின் துணை ஆணையர் ஷரத் பிபிசி ஹிந்தி சேவையிடம் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்டவர்கள் குறிப்பாக இரண்டு வயது குழந்தைக்கு தொற்று என கண்டுபிடிக்கப்பட்ட வாடி கிராமத்தில் உள்ளனரா என அறியும் முயற்சி நடந்துவருகிறது என ஷரத் கூறியுள்ளார்.

"கோயில் அறங்காவலர்கள் மற்றும் பிற 19 பேர் மீதும் விதிமுறைகளை மீறியதற்காக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்," என காவல்துறை கண்காணிப்பாளர் அயதா மார்டின் மார்பனியாங் கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: