கொரோனாவுக்கு எதிராக போராட கேரள அரசுக்கு உதவிய ‘குடும்பஸ்ரீ’ பெண்கள் அமைப்பு

  • பல்லா சதீஷ்
  • பிபிசி செய்தியாளர்
கொரோனாவுக்கு எதிராக போராட கேரள அரசுக்கு உதவிய பெண்கள் அமைப்பு : குடும்பஸ்ரீ

பட மூலாதாரம், KUDUMBASREE.ORG

உலகம் முழுவதும் கொரோனா தொற்றை சமாளிக்க போராடிக் கொண்டிருக்கும் போது கேரளாவை சேர்ந்த பெண்கள் இதற்கு வழி காட்டியுள்ளனர். மற்ற இந்திய மாநிலங்களை விட கேரளாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு குறைந்திருந்தது.

இருக்கும் வளங்களை வைத்து இந்த பேரழிவை சமாளிப்பதே அரசின் வேலை. ஆனால் அது இப்போது இருக்கும் எல்லா பிரச்சனைகளையும் சரி செய்து விடாது. இப்போது உள்ள சூழலில் அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க ஒரு பெரிய நிறுவனம் போன்ற அமைப்பு தேவைப்படுகிறது. அந்த தேவையை குடும்பஸ்ரீ நிறைவேற்றுகிறது.

ஒரு மாநிலத்தில் இருக்கும் அனைவருக்கான தேவையை நிறைவேற்றி அனைத்து குடும்பத்தின் உடல்நலம் குறித்த தகவலை சேகரிப்பது என்பது எளிதான விஷயம் கிடையாது. இந்த இரண்டு வேலையும் மிகப்பெரிய வேலை. இவற்றை ஒருங்கிணைப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. ஆனால் குடும்பஸ்ரீ என்னும் அமைப்பு இதை மிக சிறப்பாக செய்து வருகிறது. தேவைப்படும் மக்களுக்கு உணவு அளிப்பதிலிருந்து அவர்களின் ஆரோக்கியத்தை காக்கும் பணிவரை சிறப்பாக செய்கின்றனர்.

அதாவது குடும்பஸ்ரீ அமைப்பு ஒரு அரசாங்கத்தை போல் செயல்பட்டு வருகிறது. குடும்பஸ்ரீ என்பது கேரளாவில் இருக்கும் பெண்கள் சுய உதவி குழு.

கேரளாவில் உதவி செய்யும் குடும்பஸ்ரீ

நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்ட பிறகு நாட்டில் ஆங்காங்கே இருக்கும் வெளிமாநில தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்கள் மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் கேரளாவின் இந்த குடும்பஸ்ரீ அமைப்பின் சமயலறையில் எடுத்த முயற்சி இந்த பிரச்சனை வருவதற்கு முன்பே பலரின் பசியைப் போக்கியது.

உள்ளூர் அரசு அமைப்பின் உதவியோடு குடும்பஸ்ரீ அமைப்பினர் இந்த சமயலறையை நிறுவினர். அவர்கள் ஏழைகள் மட்டுமில்லாமல் தனிமைப்படுத்தப் பட்டவர்களுக்கும் உணவு வழங்கினர்.

பட மூலாதாரம், KUDUMBASRI/TWITTER

மொத்தம் உள்ள 1304 சமயலறையில் 1100 சமயலறைகள் இந்த குடும்பஸ்ரீ அமைப்பு பெண்களால் தனியாக நடத்தப்படுகிறது. இங்கே சாப்பிடும் அனைவருக்கும் இலவச சாப்பாடு கிடைக்கும். செலவு செய்ய முடிந்தவர்களுக்கென இவற்றில் 238 சமயலறைகள் விடுதிகளாக செயல்படுகின்றன.

இந்த உணவகத்தில் சாப்பாடு 20 ரூபாய்க்கு கொடுக்கப்படுகின்றன. இப்போது கிட்டதட்ட அனைத்து செக் போஸ்டிலும் லாரி ஓட்டுநர்கள் எங்கெல்லாம் தங்கியிருக்கின்றனரோ அதன் அருகிலும் 15 இடங்கள் சாப்பாடு வாங்கி கொள்ள அமைக்கப்பட்டிருக்கின்றன. இந்த சமயலறைகளால் 1,57,691 குடும்பங்களுக்கு உணவு வழங்கப்படுகிறது.

நாங்கள் இந்த அமைப்பை அரசுடன் இணைந்து நடத்தி வருகிறோம். யாரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதே எங்கள் கொள்கை. யாருக்கு உணவு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு அவர்களின் வீட்டு வாசல் வரை சென்று உணவு அளித்து வருகிறோம்.

பட மூலாதாரம், KUDUMBASHREE/WEBSITE

பிரச்சனையில் இருக்கும் மக்களும் உணவு கிடைக்காமல் இருப்பவர்களுமே எங்களுக்கு முக்கியமானவர்கள். பணம் கொடுத்து சாப்பாடு வாங்க முடிந்தவர்களுக்கு நாங்கள் மலிவான உணவகம் நடத்தி வருகிறோம். அந்த உணவகத்தில் 20 ரூபாய்க்கு சாப்பாடு வழங்குகிறோம். நாங்கள் மொத்தம் 25 பெண்கள். நாங்களே சமைப்போம். எர்ணாகுளம் மாவட்டத்தில் இருக்கும் கொச்சி மாநகராட்சியில் ஐந்து சமயலறை உள்ளது. அனைவருக்கும் சாதம், சாம்பார், காய் மற்றும் ஊறுகாயுடன் சாப்பாடு வழங்கி வருகிறோம். ஆயிரக்கணக்கான சாப்பாடு பொட்டலங்களை வழங்கி வருகிறோம் என கொச்சியில் இந்த சமயலறையைக் கையாளும் மின்னி ஜோஸ் கூறியுள்ளார்.

கேரள அரசின் குடிமைப் பொருள் வழங்கல் துறை 87 லட்சம் குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்காக இந்த அமைப்பின் உதவியைக் கேட்டுள்ளது. இதோடு அந்த பொருட்கள் வழங்குவதற்கான பையை தைக்கும் பொருப்பையும் இந்த அமைப்பினரே எடுத்துள்ளனர். இது போக நியாயவிலைக்கடையில் வழங்கப்படும் சத்து பொருட்கள் தடைப்படாமல் பார்த்து கொள்கின்றனர். ஏப்ரல் மாதத்திற்கான அம்ருதாநியூட்ரிமிக்ஸ் என்ற சத்துமாவை ஏற்கனவே நியாயவிலை கடைக்கு கொடுத்துள்ளனர்.

பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியிலும் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டு வருகிறது. சில இடங்களில் படகின் மேல் பல்பொருள் அங்காடிகளை வைத்து நடத்துகின்றனர். வயதானவர்கள் வீட்டை விட்டு வெளிவருவதற்கான காரணத்தை குறைக்க அவர்களின் வீட்டு வாசலுக்கு அனைத்து பொருட்களும் சென்று சேரும்படி ஏற்பாடு செய்கின்றனர்.

பரந்து விரிந்த மக்கள் தொடர்பு, தகுதியான உறுப்பினர்கள் மற்றும் அவர்களுக்குள் நடக்கும் தெளிவான தகவல் பரிமாற்றமே அரசு கேரளாவின் சுய உதவிக்குழு அமைப்பினரை சார்ந்து இருப்பதன் காரணமாக அமைகிறது.

கவுன்சிலிங்

உணவு அளிப்பது மட்டுமே இந்த அமைப்பின் வேலை கிடையாது. அனைவரின் உடல்நலம் குறித்தும் அவர்கள் விசாரிக்கின்றனர். ஸ்னேஹலதா என்னும் ஒரு திட்டம் உடல்நலம் குறித்து விசாரிப்பதை செய்து வருகிறது. அங்கிருக்கும் ஏழை மக்களில் 1,22,190 பேர் வயதானவர்கள். குடும்பஸ்ரீ அமைப்பின் ஒரு முக்கிய வேலை இவர்களை அழைத்து பேசவதே ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

தனிமைப்படுத்தப் பட்டவர்களையும் அழைத்து இவர்கள் பேசுவர். இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டவர்களைப் அழைத்து பேசும்போது அவர்கள் மனரீதியாக திடமாக இருப்பார்கள். இவ்வாறு தொலைப்பேசி மூலம் அழைத்து பேசுவதற்கென்றே 2,500 பேர் இருக்கின்றனர். ஸ்னேஹலதா என்னும் திட்டம் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் மற்றும் வயதானவர்களுக்கு மட்டுமில்லாமல் ஊரடங்கு உத்தரவால் வீட்டை விட்டு வெளியேறாமல் இருப்பவர்களின் மன உளைச்சல் மற்றும் அதனால் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றின் மீதும் கவனம் செலுத்துகின்றனர்.

குன்னம்குலம் என்னும் இடத்தில் உள்ள முகாமில் வெளிமாநில தொழிலாளர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். ஆனால் நிர்வாகம் சவாலை சந்தித்து வருகிறது. அவர்களுக்கு ஆலோசனை வழங்குவோம். திருச்சூரிலிருந்து எங்களுக்கு நிறைய அழைப்புகள் வரும். குறிப்பாக குடும்பத்தில் பெண்களுக்கு மற்றும் குழந்தைகளுக்கு எதிராக வீட்டுக்குள் நடக்கும் வன்முறை குறித்து பல உதவிகள் கேட்கப்படும்.

அது போன்ற குழந்தைகளுக்கு ஆலோசனை அளிப்போம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கூட சில சமயங்களில் அழைப்பார்கள் என தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஸ்னேஹலதாவில் திருச்சூரில் மனநல ஆலோசகாராக இருக்கும் அனிதா.

தகவல் பரிமாற்றம்

குடும்பஸ்ரீ செய்யும் மற்றுமொரு முக்கிய விஷயம் தகவல் பரிமாற்றம். கை கழுவுதல், சமூக விலகல் மற்றும் சுகாதாரத்தை பிரேக் தெ சைன் என்ற முகாம் மூலமாக சிறப்பாக தகவல் பரிமாற்றம் செய்தனர். வாட்ஸ் ஆப் மூலமாக கோவிட்-19 பற்றிய அன்றாட தகவல்களை குடும்பஸ்ரீ அமைப்பு குழுவில் இருக்கும் 22.50,000 உறுப்பினர்கள் ஆங்கிலம் மற்றும் மலையாளத்தில் பகிர்வார்கள்.

இது சாத்தியமானது எப்படி?

மகளிர் சுய உதவிக்குழு இந்தியா முழுவதும் உள்ளது. ஆனால் சில இடங்களில் மட்டுமே வெற்றிகரமாக இயங்கி வருகிறது. தென் இந்தியாவில் இந்த சுய உதவிக் குழுக்கள் வறுமையை ஒழிப்பதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. குறிப்பாக கேரளா போன்ற மாநிலங்களில் வலிமைமிக்கதாக இருக்கிறது.

இது 90களின் கேரளாவில் தொடங்கியது. 2,91,507 குழுக்கள் கேரளாவில் உள்ளது. இவர்களுக்கு மேல் 19,489 பிராந்திய வளர்ச்சி அமைப்பு மற்றும் அவர்களுக்கு மேல் 1064 சமூக வளர்ச்சி அமைப்பி உள்ளன. இதில் மொத்தமாக 43,93,579 பெண் உறுப்பினர்களாக உள்ளனர். ஒரு வீட்டில் இருந்து ஒருவர் மட்டுமே இதில் உறுப்பினராக இருக்கலாம். ஆனால் யார் வேண்டுமானாலும் இருக்கலாம்.

இந்த அமைப்பின் கொள்கை சமுதாயத்திலும் பொருளாதாரத்திலும் பின் தங்கிய பெண்களின் முன்னேற்றம், சிறுக்கடன் அளிப்பது, சிறுத்தொழில் செய்வது, கூட்டு வேளாண்மை, கால்நடை வளர்ப்பு, சந்தை வளர்ப்பு போன்ற பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடுதே ஆகும். ஆஸ்ரயா( வலியோருக்காக உதவுவது), பாலசபா( குழந்தைகளுக்கானது), பட்ஸ்( மாற்று திறனாளிகளான குழந்தைக்கு உதவுவது), தாழ்த்தப்பட்ட சமுதாயத்திற்காக உதவுவது ஆகியன சமூக சேவையின் கீழ் வரும்.

இந்த அமைப்புகள் வறுமையை ஒழிக்கவே உருவாக்கப்பட்டது. கேரளாவில் பேரழிவு வந்தபோது இந்த அமைப்புகளே முதலில் உதவி செய்ய முன் வந்தது. இப்போது இவர்கள் செய்வது மிகவும் குறைந்ததே ஆகும். கேரளாவில் வெள்ளம் வந்த போது இவர்கள் இன்னும் அதிகமாகவே உதவி செய்தார்கள். சுமார் 2,00,000 வீடுகளையும் பொது இடங்களையும் சுத்தப்படுத்தினர். மாவட்ட ஆட்சியர்களுடன் தாமாகவே முன்வந்து பணி செய்தனர். 11 கோடி ரூபாய் கேரள அரசுக்கு கொடுத்தனர். பேரழிவு ஏற்படும்போது தாமாக முன்வந்து உதவி செய்வது குடும்பஸ்ரீஇயின் ஒரு வழக்கம் என்றார் குடும்பஸ்ரீயின் நிர்வாக இயக்குனர் ஹரி கிஷோர்.

19 மாநிலங்களில் இவர்கள் சுய உதவிக் குழுக்களுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர். கஜகஸ்தானிலும் இந்த குழுக்களை நடத்தி வருகின்றனர். தங்கள் ஊரைத் தாண்டாத பெண்கள் கூட திரிபுரா வரை சென்று மொழியைக் கற்று கொண்டு அங்கிருப்பவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார். ஒவ்வொருவரின் வீட்டுக்கு சென்று முடக்கத்தினால் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து அவர்களுக்கு உதவி செய்கின்றனர் என்கிறார் ஹரி கிஷோர்,

கேரளாவைத் தவிர ஆந்திர பிரதேசம் ,தெலங்கானா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பெண்கள் தங்கள் சொந்த காலில் நிற்க உதவியுள்ளது. சுய வேலை வாய்ப்பை உருவாக்க பெண்களுக்கு உதவியாக உள்ளது.பெண்களின் தயாரிக்கும் பொருளை விற்க பயன்படுகிறது. குடும்பத்திற்கு தேவைப்படும் பொருளாதார உதவியையும் செய்கிறது. வறுமையை ஒழிக்க உதவு செய்கிறது.

கொரோனா வைரஸ் தொற்று பரவத் தொடங்கிய நாட்களிலேயே இவர்கள் முகக்கவசமும் சானிடைசர்களும் தயாரித்தனர். ஒரு நாளைக்கு 21 அலகு சானிடைசர்களும் 1,20,00 முகக்கவடங்களும் தயாரித்துள்ளனர்.

இதை மார்ச் 15லிருந்து செய்து வருகின்றனர். அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனை, மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கினர். மத்திய அரசு நிறுவனங்களுக்கும் வழங்கினர். பொது மக்களுக்கு விலைக் குறைவாக கொடுத்தனர். மார்ச் 15 முதல் 30 வரை 18,50,000 முகக்கவசங்கள் மற்றும் 4492 லிட்டர் சானிடைசர்கள் தயாரிக்கப்பட்டு 2.3 கோடி வருவாய் ஈட்டியுள்ளனர்.

கேரளாவில் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலங்கானா மற்றும் தமிழ்நட்டிலும் முகக்கவசங்கள் தயாரிக்கப்படுகிறது. இவர்கள் பொருட்களை பெரிய அளவில் தயாரிக்கின்றனர். மேலும் எந்த மாநிலத்திற்கு வேண்டுமோ அவர்கள் அந்த மாநில அரசு இவர்களிடம் வாங்கி கொள்கிறது.

குடும்பஸ்ரீ அமைப்பில் இருக்கும் பெண்களுக்கு கேரள அரசு சிறப்பு கடன் வசஅதி அளிக்கிறது. இதனால் முடக்கத்தின்போது அவர்கள் வறுமையில் இருக்க மாட்டார்கள். ஒரு ஆளுக்கு 20000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆறு மாதம் கழித்து தவணை முறையில் திருப்பிக் கட்டலாம்.

பட மூலாதாரம், Getty Images

ஆஷா பணியாளர்கள் என அழைக்கப்படும் சமூக உடல்நல செயற்பாட்டாளர்கள் மற்றும் ஏஎன்எம் எனப்படும் கூடுதல் செவியர்கள் இந்த கொரோனவைரஸ் நேரத்தில் செய்யும் பணி மாநிலத்தையே இந்த தொற்றிலிருந்து பாதுகாக்கிறது.

இதற்கான சிகிச்சை மருத்துவர்களே அளிப்பார்கள். ஆனால் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது, முடியாதவர்களை கண்டறிவது, வீட்டுக்கு வீடு சென்று தகவல் சேமிப்பது போன்றவை இந்த பெண்கள் செய்கின்றனர்.

2018-19ல் மட்டும் 9.37,107 ஆஷா பணியாளர்கள் உள்ளனர். இவர்களில் 42,209 பேர் ஆந்திராவிலும் 39,329 பேர் கர்நாடகாவிலும் 24,359 பேர் கேரளாவிலும் 26,500 பேர் தமிழ்நாட்டிலும் 29,871 பேர் தெலங்கானாவிலும் 341 பேர் புதுச்சேரியிலும் உள்ளனர்.

மக்கள் வெளிவர யோசிக்கும்போது இவர்கள் தொற்று பரவும் முக்கிய பகுதிக்கு சென்று யாராவது வெளிநாட்டிலிருந்தோ டெல்லியிலிருந்தோ வந்துள்ளார்களா என வீடு வீடாக சென்று கேட்டறிந்து, அவர்களை தொடர்ந்து கண்காணித்து தங்கள் மேலிருப்பவர்களுக்கு தகவல்களை தெரிவிக்கின்றனர்.

சோதனைக் காலங்களில் மக்களுக்கு உதவி செய்யும் தூணாக நிற்கின்றனர். இவர்கள் இல்லையென்றால் என்ன செய்வது என்பதைக் கற்பனைக் கூட செய்து பார்க்க முடியாது. அவர்கள் பகுதியில் இருக்கும் மக்களைப் பற்றியும் அவர்களின் வீடு மற்றும் அவர்கள் வீட்டு பகுதியில் இருப்பவர்களின் உடல்நிலை பற்றியும் புரிந்து கொண்டுள்ளனர். பயமில்லாமல் அனைவரின் வீட்டிலிருந்தும் அனைத்து தகவல்களையும் சேகரிக்கின்றனர். நாங்கள் செய்யும் வேலை அதை பொருத்தே அமையும் என்கிறார் தெலங்கானாவின் ஒரு மாவட்டத்தின் மாவட்ட தலைமை அலுவலர்.

எங்கெல்லாம் மனித வளம் தேவைப்படுகிறதோ அங்கெல்லாம் இந்த சுய உதவிக்குழுக்கள் அரசுக்கு உதவி செய்ய வருகின்றனர். அது நல்ல பலனைத் தருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: