“கொரோனா வைரஸை கட்டுப்படுத்துவதில் பிரதமர் மோதி உலகிற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்”

  • ராம் மாதவ்
  • பாஜக பொதுச் செயலர்
நரேந்திர மோதி

பட மூலாதாரம், Maja Hitij - FIFA

சுமார் 110 ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் அதன் காலனி நாடுகளுக்குப் பயணம் செல்ல பாஸ்போர்ட்கள், விசாக்கள் தேவையில்லை. முதலாவது உலகப் போர் வந்த பிறகு சூழ்நிலைகள் மாறின.

நாடுகள் தங்கள் எல்லைகளில் உறுதியாக இருந்தன, எல்லைப் பகுதி கட்டுப்பாடுகள் அதிகரித்தன. பொருளாதார தேக்கம், மந்தநிலை ஏற்பட்டது. தேசியவாதம் என்பது அளவுகடந்த தேசியவாதமாக மாறியது. அது இன்னொரு உலகப் போருக்கு வித்திட்டது. இரண்டாவது உலகப் போருக்குப் பிறகு நாம் ஒன்றுக்கொன்று தொடர்புடைய, ஒருவரை ஒருவர் சார்ந்துள்ள, நிறுவன அமைப்பு சார்ந்த உலக ஒழுங்குமுறை உருவானது.

கடந்த 75 ஆண்டுகளாக, பல தடங்கல்கள் இருந்தாலும், இந்த உலக ஒழுங்கு பெரும்பாலும் உறுதியாகவே இருந்து வருகிறது.

கொரோனா வைரஸ் நோய்த் தாக்குதல் இந்த உலக ஒழுங்கை சிதைத்துவிடும் ஆபத்தை உருவாக்கியுள்ளது. முதலாவது உலகப் போருக்கு பிந்தைய நிலையில் இருந்ததைப் போல, நாடுகள் தங்கள் நலனை மட்டும் பார்க்கின்றன, அதிகார எண்ணத்துடன் பார்க்கின்றன. தங்கள் நலன் மட்டும் சார்ந்த, குறுகிய மனப்போக்கு கொண்ட ஒரு உலகம் உருவாகும் என்று அரசியல் நிபுணர்கள் கணிக்கிறார்கள்.

``அரசாங்கம் பழைய நிலைக்குத் திரும்புதல்'' என்பது புதிய மறைமொழியாக உள்ளது. உலகமயமாக்கல் மற்றும் தாராள வர்த்தகம் காணாமல் போகும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இந்த சுயநலப் பார்வை எப்படி உருவானது? வெறும் 0.125 மைக்ரான் அளவு விட்டம் கொண்ட, கண் இமையின் தடிமனில் ஆயிரத்தில் ஒரு பங்கு தடிமன் கொண்ட வைரஸ் காரணமாக இந்த நிலை உருவாகியுள்ளதா? அப்படியில்லை. ஒரு நச்சுயிரியால் இது ஏற்படவில்லை. மாறாக அதிக வல்லமை மிகுந்த இரண்டு நாடுகளால் இது ஏற்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகின் நம்பிக்கையையும் அது அசைத்துப் பார்த்துள்ளது. அவற்றை ஹூவர் கல்வி நிலையத்தின் அமெரிக்க வரலாற்றாளர் நியால் பெர்குசன் ``சீமெரிக்கா'' என்று குறிப்பிடுகிறார்.

கடந்த ஒரு தசாப்த காலமாக அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக, அமெரிக்காவும் சீனாவும் 'நிச்சிபெய்' போன்ற பொருளாதார உறவுகளை உருவாக்கி வந்திருப்பதாக நியால் கூறுகிறார். கடந்த நூற்றாண்டின் இறுதி வரையில் அமெரிக்கா -ஜப்பான் இடையே இருந்த பொருளாதார உறவுகளைக் குறிப்பதாக நிச்சிபெய் என்ற வார்த்தை உள்ளது. சீமெரிக்கா என்பது வெறும் கற்பனையான வேறுபாடு என்று கொரோனா வைரஸ் காட்டியுள்ளது.

இந்த வைரஸ் எல்லை தாண்டி சென்று பெரிய நோய்த் தொற்றாக பரவ சீனாதான் காரணம். அதுபற்றிய தகவல்களை சீனா மறைத்துவிட்டது என்ற குற்றச்சாட்டு பரவலாகக் கூறப்படுகிறது. சீனா கூறும் தகவல்கள் தவறானவை என்று மறுப்பு கருத்துகள் கூறப்படுகின்றன. மொத்தம் 82 ஆயிரம் பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு 4,500 மரணங்கள் ஏற்பட்டதாக சீனாவின் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதிலும், வாஷிங்டனைச் சேர்ந்த சிந்தனையாளரான அமெரிக்கன் என்டர்பிரைஸ் இன்ஸ்டிடியூட்டைச் சேர்ந்த டெரெக் சிசர்ஸ், சீனாவில் 2.9 மில்லியனுக்கும் மேற்பட்டவர்களுக்கு நோய்த் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கும் என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், Matthew Horwood

வழக்கமான நடைமுறைகளை சில நாடுகள் பின்பற்றுவதில்லை. அவற்றில் சீனாவும் ஒன்று. 'வரலாற்று அனுபவம்' என கூறப்படும் நடைமுறையையே அது பின்பற்றுகிறது. 1949ல் ஆட்சி அதிகாரத்தை மாவோ கைப்பற்றிய புரட்சியின் விளைவாகத்தான் இன்று உள்ள நிலைமையை எட்ட முடிந்துள்ளது.

உலகைப் பற்றிய சீனாவின் பார்வை மூன்று முக்கிய கோட்பாடுகளை மையமாகக் கொண்டுள்ளது - ஜிடிபி, சீனாவை மையாகக் கொண்டு, சீனா விதிவிலக்குவாதம் (GDPism, China-centrism and Chinese exceptionalism) - இவை அந்தப் புரட்சியில் இருந்து பெறப்பட்ட கோட்பாடுகளாக உள்ளன.

``பொருளாதார வளர்ச்சி என்பதுதான் மிக முக்கியமான அம்சமாக இருக்கும்'' என்று 1980களில் டெங் ஜியோ பிங் அறிவித்தார். அதை சீன பொருளாதார வல்லுநர்கள் `ஜி.டி.பி.யிசம்' என்று கூறுகிறார்கள்.

இரண்டாவது சீனாயிசம். சுதந்திரம், தன்னாட்சி, சுயசார்பு ஆகியவற்றை மாவோ வலியுறுத்தினார். வாங் ஷென் உருவாக்கிய புகழ்பெற்ற 'Gechang Zuguo' - Ode to Motherland என்ற தேசபக்திப் பாடலில், `சிகரங்கள், சமவெளிகள், யாங்க்ட்ஜே மற்றும் ஹுவாங் நதிகளைக் கொண்ட' சீனா `பிரமாண்டமான மற்றும் அழகான நாடு' என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. இதை ஒவ்வொரு சீனரும் அப்படியே ஏற்றுக் கொண்டுள்ளனர்.

மூன்றாவது சீனா விதிவிலக்குவாதம். மற்றவர்களிடம் இருந்து கற்றுக் கொள்வோம் என்பதில் சீனாவுக்கு நம்பிக்கை இல்லை. புரட்சி காலத்தில் மாவோ கூறிய கருத்தை தான் - `பயிற்சி செய்து பார்த்து, அதைப் பின்பற்றுதல்' என்ற நடைமுறையை அந்நாடு பின்பற்றுகிறது. தன்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் காண்பதற்கு, தன்னுடைய வளங்களையே சீனா பயன்படுத்த வேண்டும் என்று தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

பட மூலாதாரம், STR / Getty

வரலாற்றில் நடந்த விஷயங்கள் எப்போதுமே முன்மாதிரியைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கிடையாது. ஆனால் சீனாவின் உலகப் பார்வைக்கான சூழ்நிலை, இரண்டாம் உலகப் போருக்கு முந்தைய ஜெர்மனியுடன் ஒப்பிடும் வகையில் உள்ளது.

இனவாத ஆதிக்கம், வரலாற்று உரிமை கேட்புகள், ஆரிய விதிவிலக்கு ஆகியவை 1930களில் உலக மக்களுக்கு மிகவும் பழகிய விஷயங்களாக இருந்தன. ஆனால் அதன் பிறகு, பல நாடுகளுக்கு அது வழக்கமாகிவிட்டது. முன்னாள் செக்கோஸ்லாவேகியாவில், ஜெர்மனி மொழி பேசும் சுடெட்டென்லாண்ட் பகுதியை ஹிட்லர் கைப்பற்றியபோது, அவருடன் சண்டையிடுவதை விட அவரை சமாதானப்படுத்துவது என்று ஐரோப்பா முடிவு செய்தது. முனிச் ஒப்பந்தத்தின்படி ஹிட்லரிடம் சரண் அடைந்ததை பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி போன்ற ஐரோப்பிய நாடுகள் கொண்டாடிக் கொண்டிருந்தபோது, ரூஸ்வெல்ட் தொலைவில் இருந்து நிலைமையைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

``ஒட்டுமொத்த மனிதகுலத்துக்கு தனிச்சிறப்பு வாய்ந்த வரலாற்று சேவையை செய்துள்ள உங்கள் செயல்பாட்டை, பல கோடி மக்கள் பாராட்டுவார்கள் என்று நம்புகிறேன்'' என்று ஹிட்லரை அவர் பாராட்டவும் செய்தார்.

`இனிமேல் நாடுபிடிக்க மாட்டேன்' என்ற உத்தரவாதத்தை ஓராண்டு காலத்திற்குள் ஹிட்லர் மீறியதில் ஆச்சர்யம் எதுவும் கிடையாது. இரண்டாம் உலகப் போர் மூண்டது. இப்போது அமெரிக்கா உள்ள இடத்தில் 1939-40ல் பிரிட்டன் இருந்தது. அமெரிக்க மாகாணங்களில் கொரோனா வைரஸ் பேரழிவை ஏற்படுத்திய பிறகு டிரம்ப் விழித்துக் கொண்டார். வைரஸ் தொற்று பற்றிய எச்சரிக்கைகள் குறித்து கவலைப்பட வேண்டாம் என்று தெற்கு கரோலினாவில் உள்ள தன் ஆதரவாளர்களிடம் பிப்ரவரி 28 ஆம் தேதி டிரம்ப் கூறினார். ஊடகங்கள் தான் `பித்துபிடித்தது போல' செயல்படுவதாகப் புகார் கூறிய அவர், கொரோனா என்பது ``ஊடகங்களின் புதிய வதந்தி'' என்று கூறினார்.

பட மூலாதாரம், Joe Raedle / Getty

ஐரோப்பிய நாடுகள் இந்த நோய்த் தாக்குதலை சமாளிக்க முடியாமல் போராடி வருகின்றன.

இந்தத் தொற்று நோயை சமாளிக்க ஆயத்தமாக இருந்தவை ஆசிய ஜனநாயக நாடுகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. தங்களைவிட ஆறு மடங்கு அதிக மக்கள் தொகை கொண்ட அமெரிக்காவைவிட அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகளை நடத்தி தென் கொரியா வழிகாட்டியது. சிங்கப்பூரில் அதிக அளவில் மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டன. வைரஸ் தாக்குதல் அறிகுறிகள் இருப்பவர்களை கண்டறிய பெரிய அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டன. சார்ஸ் தாக்குதலின் அனுபவத்தைக் கொண்டுள்ள ஹாங்காங் மற்றும் தைவான் நாடுகள், இந்த வைரஸ் தாக்குதலை சிறப்பாகக் கட்டுப்படுத்த உரிய காலத்தில் நடவடிக்கை எடுத்தன.

மாறாக, கொரோனா சவால் முறியடிப்பதில் ஜனநாயக செயல்பாட்டில் இந்தியா ஒரு முன்னுதாரணத்தை ஏற்படுத்தியது. தன் சக அமைச்சர்களுடன், இதில் பிரதமர் நரேந்திர மோதி வழிநடத்திச் செல்கிறார். மக்களின் முழுமையான ஆதரவுடன் முடக்கநிலை அமல் மற்றும் சமூக இடைவெளி பராமரித்தலை வெற்றிகரமாக அவர் செயல்படுத்தியுள்ளார்.

1.3 பில்லியன் மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில், 18 ஆயிரத்துக்கும் சற்று அதிகமானவர்கள் மட்டுமே நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தன்னிச்சையான அல்லது சர்வாதிகாரத்தனமான நடவடிக்கைகள் எதையும் மோதி எடுக்கவில்லை.

இஸ்லாமியர்கள் மீது புகார் கூறும் வகையிலான, வேண்டுமென்றே, துவேஷத்தை ஏற்படுத்தும், தவறான தகவல்கள் பரப்பப்பட்ட நிகழ்வுகளும் இருந்தது. அதுபோன்ற, சமயங்களில் மோதி அமைதி, பொறுமையை கடைபிடித்து, நேர்மறை சிந்தனையுடன் செயல்பட்டார்.

பட மூலாதாரம், Hindustan Times / getty

தொலைநோக்கு சிந்தனையுள்ள தலைமையால் வழிநடத்தப்படும் ஜனநாயக நாடுகளில், சுதந்திரமான மாண்புகளை விட்டுக் கொடுக்காமல் இந்தச் சவால்களை முறியடிக்க முடியும் என்பதை அவர் நிரூபித்துக் காட்டினார்.

உலக நியதி புதிய வகையில் மாறும் நிலையில், பிரதமர் மோதி கூறியிருப்பதைப் போல, `மனிதகுலத்தை மையமாகக் கொண்ட வளர்ச்சி ஒத்துழைப்பை' அடிப்படையாகக் கொண்ட உலகை உருவாக்குவதில் அமெரிக்காவும் ஜெர்மனியும் முக்கியப் பங்காற்ற முடியும். புதிய அட்லாண்டிக் வரைவுத் திட்டத்தை உருவாக்குவதற்கான காலம் இது. சுற்றுச்சூழல், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் ஜனநாயக சுதந்திரம் ஆகியவை இந்த வரைவுத் திட்டத்தின் அடித்தளங்களாக இருக்கலாம்.

அறைக்குள் அடைபட்டுக் கிடக்கும் யானையைப் போன்ற நிலையில் சீனாவுக்கு இன்றைய காலக்கட்டத்தில் ஒரு வாய்ப்பு இருக்கிறது. உலக அளவில் சீனா அவப்பெயரைப் பெற்றுள்ளது. நாட்டுக்குள்ளேயே அமைதியின்மை அதிகரித்து வருகிறது. ஷி- ஜின்பிங்கின் தலைமைக்கு சவால்கள் அதிகரித்துக் கொண்டிருக்கின்றன.

`ஆற்றைக் கடப்பதற்கு, காலில் தென்படும் கற்களை உணர வேண்டும்' என்ற டெங்-ன் கருத்துகளை சீனாவின் தலைமை பின்பற்ற வேண்டிய காலமாக இது உள்ளது. சீன கம்யூனிஸ்ட் கட்சி - 'Luxian Douzheng' - என்ற வாசகத்தைக் குறிப்பிடுகிறது. வழிமுறைப் போராட்டம் என்பது அதன் அர்த்தம். அதை அதிகாரத்துக்கான போராட்டம் என்று சிலர் எடுத்துக் கொள்கிறார்கள். ஆனால், கட்சியின் புதிய வழிமுறைக்கான போராட்டமாகவும் அதைக் கருத வேண்டியுள்ளது. கடந்த காலங்களில் இது மாதிரி பல நிகழ்வுகள் இருந்தது உண்டு. இப்போது ஒரு நல்ல மாற்றத்தை உலகம் எதிர்பார்க்க முடியுமா?

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: