''மருத்துவர் சைமன் உடலை தோண்டி புது இடத்தில் புதைக்க வாய்ப்பில்லை''

டாக்டர் சைமன் ஹெர்குலிஸ்

பட மூலாதாரம், BBC

படக்குறிப்பு,

டாக்டர் சைமன் ஹெர்குலிஸ்

கொரோனாவால் உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்ட மருத்துவர் சைமனின் உடலை இடமாற்றம் செய்வது, சாத்தியம் இல்லை என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மருத்துவர் சைமனின் உடலை மயானத்தில் புதைக்க இரண்டு இடங்களில் எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில், காவல்துறையின் பாதுகாப்போடு, அவரது உடல் வேலங்காடு மயானத்தில் புதைக்கப்பட்டது. சைமனின் உடலை மீண்டும் எடுத்து கீழ்ப்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய அவரது மனைவி கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அவரது கோரிக்கையை ஏற்பது சாத்தியம் இல்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த மருத்துவர் சைமன் தனியார் மருத்துவமனையில், நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றியவர். அவர் சிகிச்சை அளித்த நபர்களிடம் இருந்து, அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், கடந்த ஏப்ரல் 19ம் தேதி காலமானார்.

அவரை, கீழ்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு என்ற தனியார் கல்லறை இடத்தில் அடக்கம் செய்யவேண்டும் என அவரது குடும்பத்தார் கோரிக்கை விடுத்தனர். ஆனால், தனியார் கல்லறை நிர்வாகம் மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்துவிட்டது. இதனைத் தொடர்ந்து சைமனின் குடும்பத்தினர் வேறு மயானபூமியில் அடக்கம் செய்து கொடுக்கும்படி மாநகராட்சியிடம் கேட்டுக்கொண்டனர்.

கீழ்பாக்கத்தில் அமைந்துள்ள மாநகராட்சியால் பராமரிக்கப்படும் கிருத்துவ கல்லறையில் அடக்கம் செய்ய அவர்களின் குடும்பத்தாரின் சம்மதத்துடன் ஏப்ரல் 19ம் தேதி இரவு 10 மணியளவில் அதற்கான பணிகளை மாநகராட்சி மேற்கொண்டது. மரணமடைந்தவரின் உடலை அடக்கம் செய்யத் தேவையான பணிகள் தொடங்கிய நிலையில், அந்த பகுதியை சார்ந்த சுமார் 400க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று சேர்ந்து கொரோனா நோய் தொற்று பாதித்த நபரின் உடலை தங்கள் பகுதியில் அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடலை அடக்கம் செய்வதால் மருத்துவ ரீதியாக எந்த ஒரு பாதிப்பும் இல்லை என காவல்துறையினர், எடுத்து கூறியும் அதனை பொதுமக்கள் ஏற்கவில்லை என மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்ப்பை அடுத்து, வேலங்காடு மயான பூமியில் அடக்கம் செய்ய சுமார் நள்ளிரவு 12 மணியளவில் மரணமடைந்த மருத்துவரின் உடல் ஆம்புலன்ஸ் வாகனத்தில் மயான பூமிக்கு கொண்டுவரப்பட்டது. மருத்துவர் உடலுக்கு அவர்களின் மதம் சார்ந்த சடங்குகளை செய்து முடித்த நேரத்தில், மயான பூமிக்கு அந்த பகுதியை சார்ந்த சுமார் 60 க்கும் மேற்பட்ட நபர்கள் கூடி மாநகராட்சி அலுவலர்கள் மற்றும் பணியாளர்களை தாக்கியும் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்தினர்.

இந்த அசாதாரண சூழ்நிலையில் ஆம்புலன்ஸ் வாகனத்தில் இருந்த மரணமடைந்த மருத்துவரின் உடல், நியூ ஆவடி சாலையில் அமைந்துள்ள நியூ ஹோப் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

காவல் துறையினரால் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டபின்,மருத்துவரின் குடும்பத்தாரின் ஒப்புதலுடனும், இறந்தவரின் உடல் வேலங்காடு மயான பூமியில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, அந்த மருத்துவரின் மனைவி ஆனந்தி சைமன், தனது கணவரின் உடலை மீண்டும் எடுத்து கீழ்ப்பாக்கம் சிமெட்ரிஸ் போர்டு கல்லறையில் அடக்கம் செய்ய சென்னை மாநகராட்சியிடம் ஏப்ரல் 22ம்தேதி வேண்டுகோள் வைத்தார்.

ஆனந்தியின் கோரிக்கை தொடர்பாக பொது சுகாதாரத்துறை வல்லுநர்கள் அடங்கிய குழுவின் அறிக்கை கோரப்பட்டது. அவ்வறிக்கையின்படி கொரோனா வைரஸ் நோய் தொற்று பாதித்து மரணமடைந்த நபரின் உடல் பாதுகாப்பான முறைப்படி அடக்கம் செய்யப்பட்டபின் மீண்டும் வெளியில் எடுத்து வேறு ஒரு இடத்தில் அடக்கம் செய்வது பாதுகாப்பானது அல்ல என தெரிவித்துள்ளதால், ஆனந்தியின் கோரிக்கையை ஏற்பது சாத்தியம் இல்லை என தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: