கொரோனா வைரஸ்: "தமிழகத்தை இயல்பு நிலைக்கு கொண்டுவர முயற்சிக்க வேண்டும்": முதலமைச்சர் பழனிசாமி

முதலமைச்சர் பழனிசாமி

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா தாக்கம் அதிகம் உள்ள சிவப்புப் பகுதிகளை மெல்லமெல்ல பச்சைப் பகுதிகளாக மாற்றி இயல்புநிலை திரும்பச் செய்ய வேண்டுமென முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். விவசாயப் பணிகளுக்கும் அனுமதிக்கப்பட்ட தொழில்களுக்கும் எவ்விதத் தடையும் இருக்கக்கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.

தமிழ்நாடு அரசின் தலைமை செயலகத்தில் இன்று மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் பேசிய முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி, தமிழகத்தில் சென்னையைத் தவிர பிற மாவட்டங்களில் நோய்ப் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

"தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுக்க மாநில அரசு போர்க்கால அடிப்படையில் செயல்பட்டுவருகிறது. இந்தத் தடுப்புப் பணியில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவரும் தம்முடைய முழுத் திறமையையும் பயன்படுத்தி, தம் மாவட்டங்களில் தடுப்பு முறைகளை செயல்படுத்தியதால், நோய்ப் பரவல் பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் இந்நோய் கட்டுக்குள் இருக்கிறது. சென்னையைப் பொறுத்தவரை அது மிகப் பெரிய நகரம். இங்கு குறுகலான தெருக்களில் அதிகமான மக்கள் வசிக்கின்ற பகுதியாக இருக்கின்ற காரணத்தால், கொரோனா தொற்று எளிதாக மக்களுக்குப் பரவுகிறது. அதுதான் சென்னையில் இப்போது பெருமளவில் அந்நோய் பரவுவதற்குக் காரணம்.

கிராமப்புறங்களிலும் நகர்ப்புறங்களிலும் அரசு அறிவிக்கும் வழிமுறைகளைப் பின்பற்றினால் இந்த வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த முடியும். கிராமப்புறங்கள், பேரூராட்சிப் பகுதிகளில் இந்நோய் பரவுதல் ஓரளவுக்கு கட்டுக்குள் வைக்கப்பட்டுள்ளது. ஆனால், மாநகராட்சிப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வசிப்பதால் அங்கு இன்னும் கட்டுப்படுத்த முடியவில்லை.

மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கின்றன. தினமும் ஏழு லட்சம் பேர் அம்மா உணவகத்தில் உணவருந்துகிறார்கள். அதேபோல சமூக சமையற்கூடங்களின் மூலம் உணவு தயாரிக்கப்பட்டு அந்தந்தப் பகுதிகளில் தேவைப்படுபவர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வேலைக்கு வந்தவர்களுக்கும் அரசின் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகின்றன.

பொதுமக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் கிடைக்கவேண்டிய பொருட்கள் தடையில்லாமல் கிடைத்து வருகின்றன. மே மாதத்திற்கான பொருட்களும் விரைவில் வழங்கப்படும். நியாய விலைக் கடைகளில் பொருட்களை வழங்கும்போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். பல இடங்களில் மக்கள் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் தென்படுகின்றன. அது தவிர்க்கப்பட வேண்டும்.

காய்கறிகளை வாங்கும்போதும் இந்த சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதில்லை. அங்கேயும் இந்த சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களைப் பயன்படுத்தி சரிசெய்யலாம்.

பட மூலாதாரம், ARUN SANKAR

உள்ளாட்சிப் பகுதிகளில் நோய் பரவலைத் தடுக்க கிருமி நாசினி தெளிக்க வேண்டும். நகர்ப்புறங்களில் உள்ள பொதுக் கழிப்பறைகளை ஒரு நாளைக்கு மூன்று முறை சுத்தம்செய்ய வேண்டும்.

நியாய விலைக் கடைகளில் டோக்கன்களை வழங்கும்போது, எந்தத் தேதியில், எத்தனை மணிக்கு பொருட்கள் கிடைக்கும் என்பதைத் தெரிவித்து டோக்கனை வழங்க வேண்டும். குறிப்பாக கிராமங்களில் வசிப்பவர்களுக்கு டோக்கன் கிடைத்தவுடன் வந்துவிடுவார்கள்; ஆகவே தெளிவாக விளக்கி, அவர்களிடம் டோக்கனை வழங்க வேண்டும். மண்ணெண்ணையை வழங்கும்போதும் இதேபோல சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும்.

வேளாண்மைப் பணிகளுக்கு ஊரடங்கு விதிகளில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அந்தப் பணிகளுக்குச் செல்பவர்களைத் தடுக்க வேண்டாம். விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை சந்தைக்குக் கொண்டு செல்ல தடை விதிக்கக்கூடாது. அந்த வாகனங்களைத் தடுக்கக்கூடாது. காய்கறிகள் பழங்களை குளிர் பதன கிடங்குகளில் வைக்க ஏற்பாடு செய்து தர வேண்டும்.

விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன் கிடைக்கவும் ஏற்பாடு செய்யலாம். விவசாயம் தொடர்பான ஆலைகளான அரிசி ஆலை, எண்ணெய் மில், ஜவ்வரிசி ஆலை, முந்திரி பதப்படுத்தும் ஆலைகள் செயல்பட எவ்வித பாதிப்பும் இருக்கக்கூடாது.

100 நாள் வேலைத் திட்டத்தை அமல்படுத்தும்போது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அவசியம் முகக் கவசத்தை அணிந்திருக்க வேண்டும். 100 நாட்கள் வேலைக்கு அதிக அளவில் தொழிலாளர்கள் வந்தால் இரண்டாக, மூன்றாகப் பிரித்து பணியாற்றச் சொல்லவேண்டும்.

பட மூலாதாரம், ARUN SANKAR

தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்கு யாரும் செல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அந்தப் பகுதிகளில் தினமும் இரண்டு முறை கிருமி நாசினி அடிக்க வேண்டும்.

நோய்த் தொற்றே இல்லாத Green Zone பகுதிகளில் படிப்படியாக தொழில் துவங்குவதற்கு எல்லா தொழிற்சாலைகளுக்கும் அனுமதிக்கலாம். அதற்கான உத்தரவு வழங்கப்படும். சிமிண்ட், சர்க்கரை ஆலை, ஸ்டீல், மருத்துவ உபகரண ஆலை போன்ற தொழிற்சாலைகளுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இவை தடை செய்யப்பட்ட பகுதிகளுக்கு வெளியில் இருந்தால் இயங்க அனுமதி அளிக்கலாம்.

பேக்கரி உள்ளிட்ட உணவகங்களில் பார்சலுக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் காய்கறிகள் கிடைப்பதை உறுதிசெய்ய வேண்டும். தடைசெய்யப்பட்ட பகுதிகளை காவல்துறை கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டும். பிற மாநிலங்களுடனான எல்லைகளைக் கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டும். அவர்களிடம் அனுமதிச் சீட்டு இருந்தால், முழுமையாகப் பரிசோதனை செய்துதான் அனுமதிக்க வேண்டும்.

எல்லா மாவட்டங்களையும் சிவப்புப் பகுதியிலிருந்து ஆரஞ்சுப் பகுதியாகவும் பிறகு பச்சைப் பகுதியாகவும் மாற்ற வேண்டும். அப்போதுதான் மாநிலம் இயல்பு நிலை திரும்பும்" என முதல்வர் ஆட்சித் தலைவர்களிடம் உரையாற்றினார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: