மு.க. ஸ்டாலின்: தமிழக அரசின் மீது அடுத்தடுத்து ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தும் தி.மு.க.: ஆளும் தரப்புக்கு நெருக்கடியா?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

பாரத் நெட் டெண்டர், நெடுஞ்சாலைத் துறை காண்ட்ராக்ட், துணை முதல்வரின் கார் என ஆளும் அ.தி.மு.க. அரசு மீது அடுத்தடுத்து பல குற்றச்சாட்டுகளை முன்வைத்திருக்கிறது தி.மு.க. தமிழக அரசுக்கு இது நெருக்கடியாக மாறுமா?

கடந்த ஏப்ரல் 30ஆம் தேதியன்று மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தமிழக அரசின் தலைமைச் செயலருக்கும் தமிழ்நாடு ஃபைபர்நெட் கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனருக்கும் ஒரு குறிப்பு ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில், தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் 'பாரத் நெட்' திட்டத்திற்கென விடுத்திருந்த 2,000 கோடி ரூபாய் மதிப்பிலான டெண்டர் குறித்து சென்னையைச் சேர்ந்த அறப்போர் இயக்கம் என்ற ஊழலுக்கு எதிரான அமைப்பு சுமத்தியிருந்த குற்றச்சாட்டுகள் பற்றி கேள்வியெழுப்பப்பட்டிருந்தது.

தமிழ்நாடு ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் இந்த டெண்டர்களுக்கான அறிப்பை வெளியிட்ட பிறகு, ஏப்ரல் 15ஆம் தேதி கூடுதலாக சில திருத்தங்களையும் வெளியிட்டது. முன்பு குறிப்பிட்டதைவிட கூடுதலான வர்த்தகம், அனுபவம் ஆகியவை இருக்க வேண்டுமென அந்தத் திருத்தங்களில் கூறப்பட்டிருந்ததோடு 'ரூட்டர்' கருவிகள் பற்றிய அளவுகள், குறிப்புகளும் மாற்றம் செய்யப்பட்டிருந்தன. போட்டியில் உள்ள எல்லா நிறுவனங்களையும் நீக்கிவிட்டு, இரு நிறுவனங்களை மட்டும் டெண்டரில் கலந்துகொள்ளச் செய்வதற்காகவே இப்படி செய்யப்பட்டதாக அறப்போர் இயக்கம் குற்றம்சாட்டியிருந்தது.

இது தொடர்பான புகாரை மத்திய, மாநில அரசுகளுக்கு அனுப்பியதோடு மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அந்த இயக்கம் அனுப்பியிருந்தது.

இந்தப் புகாரை தமிழக தலைமைச் செயலருக்கு அனுப்பியிருந்த மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை, உள்நாட்டு நிறுவனங்கள் பங்கேற்காதவகையில் விதிகளை மாற்றி தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறியிருந்தது. இந்தப் புகாரை ஆராய்ந்து, ஏதாவது விதிமீறல் இருந்தால், அதனைச் சரிசெய்ய வேண்டுமென்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

"மேலும் நிலைக்குழுவில் இந்த விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியிருப்பதால், இது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்யவும். தகுந்த முறையில் இந்தப் புகார் குறித்து விசாரித்து முடிவெடுப்பதற்கு முன்பாக, இந்த டெண்டரில் முடிவெடுக்க வேண்டாம்" என்றும் மத்திய அரசு அனுப்பியிருந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், FACEBOOK

இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், டான்ஃபிநெட் இயக்குநரை வேறு துறைக்கு மாற்ற வேண்டும்; தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரை டிஸ்மிஸ் செய்ய வேண்டுமெனக் கோரினார்.

"'டெண்டர் கோரிவிட்டு தொழில்நுட்ப புள்ளிக்கூட்டத்தை ரத்து செய்தனர். ஐ.டி. துறையின் செயலராக இருந்த சந்தோஷ் பாபு விருப்ப ஓய்வுக்கு விண்ணப்பித்துவிட்டு, பிறகு வேறு பதவிக்கு தூக்கியடிக்கப்பட்டார். டான்ஃபிநெட்டின் நிர்வாக இயக்குனராக ஒரு ஜூனியர் அதிகாரி நியமிக்கப்பட்டார். இவ்வளவுக்குப் பிறகும் முறைகேடு ஏதுமில்லையென அறிக்கைவிட்டார் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

இப்போது மத்திய அரசின் தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தகத் துறை, டெண்டரின் குறித்து மேல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என உத்தரவிட்டிருக்கிறது. மத்திய அரசின் மூன்று செயலாளர்கள், இரு இணைச் செயலாளர்கள் கொண்ட குழுவும் இது குறித்து விசாரிக்கவிருக்கிறது. மேக் இன் இந்தியா திட்டத்திற்கு விரோதமாக வெளியிடப்படும் டெண்டர்களை மாநில லஞ்ச, ஊழல் தடுப்புத் துறை கண்காணிக்கிறதா?" ஸ்டாலின் தன்னுடைய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.

சம்பந்தப்பட்ட அனைவர் மீதும் வழக்குப் பதிவுசெய்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்றும் ஆளுநருக்குக் கோரிக்கைவிடுத்தார் மு.க. ஸ்டாலின்.

இதற்கு அடுத்த நாளே, மே மூன்றாம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வசமுள்ள நெடுஞ்சாலைத் துறையில் விடப்பட்டுள்ள காண்ட்ராக்டில் ஊழல் இருப்பதாகக் குற்றம் சாட்டியது தி.மு.க.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள தஞ்சாவூர், ஒரத்தநாடு, பேராவூரணி, பட்டுக்கோட்டை உப கோட்டங்களில் 462.11கி.மீ. நீள நெடுஞ்சாலைத்துறை சாலைகளை ஐந்து வருடங்கள் பராமரிக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான டெண்டரைத் தாக்கல் செய்வதற்கான கடைசி நாளாக ஏப்ரல் 15ஆம் தேதி குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவுபெற்ற முப்பத்தி இரண்டு முதல்நிலை ஒப்பந்ததாரர்கள் செய்ய வேண்டிய இந்தப் பணியை ஒரேயொரு ஒப்பந்ததாரருக்கு (MONOPOLY) வழங்கும் விதத்தில் இந்த டெண்டர் விடப்பட்டது என்று துரை ஜெயக்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடர்ந்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

"இந்த டெண்டரில் கூறப்பட்டுள்ள பணிகள் 500 கோடி ரூபாய் மட்டுமே மதிப்பிலானவை. ஆனால், 1165 கோடி ரூபாய்க்கு டெண்டர் விடப்பட்டுள்ளது. இது 700 கோடி ரூபாய் வரை அதிகம்" என்றும் "டெண்டருக்காக குறிப்பிடப்பட்டுள்ள தகுதிகளில் பல" ஒரு சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களை மனதில் வைத்து, கொண்டு வரப்பட்டுள்ளது" என்றும் அந்த வழக்கை மேற்கோள்காட்டி ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

அன்று இரவே ஆளும் தரப்பு மீது மற்றொரு குற்றச்சாட்டை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டார் ஸ்டாலின். அதில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கீழ் இயங்கும் ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை குழுமத்திடம் அவரது இரு மகன்களும் இயக்குநராக உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒரு திட்டத்திற்குஅனுமதி கோரி விண்ணப்பித்து, அனுமதியைப் பெறுவது அப்பட்டமான அதிகார அத்துமீறல் என குற்றம்சாட்டினார்.

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் மகன்களான ஓ.பி. ரவீந்திரநாத், ஓ.பி. ஜெயபிரதீப் ஆகிய இருவரும் இயக்குனர்களாக உள்ள விஜயந்த் டெவலப்பர்ஸ் பிரைவேட் லிமிட்டட் நிறுவனம் தங்களது ப்ராஜெக்ட்களைப் பதிவுசெய்து கொள்ள தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அத்தாரிட்டியிடம் கடந்த ஜனவரி 20ஆம் தேதி விண்ணப்பித்தது.

இந்த தமிழ்நாடு ரியல் எஸ்டேட் அத்தாரிட்டி, துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தின் கீழ் உள்ள வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் இயங்குகிறது.

இதனைச் சுட்டிக்காட்டிய மு.க. ஸ்டாலின், தந்தையின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு குழுமத்திடம் மகன்கள் தங்கள் நிறுவனத்திற்கு சாதகமான உத்தரவுகளைப் பெற முயல்வது, அனுமதி பெறுவது என்பது அதிகார துஷ்பிரயோகம் என ஸ்டாலின் குற்றம்சாட்டினார். மேலும் இதில் ஒருவர், தனது தந்தை ஓ. பன்னீர்செல்வத்திற்கு அரசு ஒதுக்கிய வீட்டிலிருந்தே விண்ணப்பித்திருப்பதையும் சுட்டிக்காட்டினார்.

பட மூலாதாரம், Getty Images

ஓ. பன்னீர்செல்வம் இது தொடர்பாக விளக்கமளிக்க வேண்டுமென மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் திங்கட்கிழமையன்று காலையில், மாநில மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் நெடுஞ்சாலைத் துறை டெண்டர் தொடர்பாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்தார். "டெண்டர் விடப்பட்டதில் எவ்வித முறைகேடும் இல்லை. செவி வழியாகக் கேட்ட தகவலைக் கொண்டு, இந்த ஒப்பந்தப் புள்ளியில் 700 கோடி ரூபாய் அதிகம் என கருத்துத் தெரிவித்திருப்பது வேடிக்கையாக இருக்கிறது. மின்னணு முறையில் டெண்டர் கோரப்படுவதால், யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம். குறிப்பிட்ட நபர்களுக்குத்தான் வழங்கப்படும் எனக் கூற முடியாது. இதில் முறைகேடு நடக்க வாய்ப்பே இல்லை" என்று தெரிவித்திருந்தார்.

இதற்குப் பிறகு, தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரும் இது தொடர்பாக தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். பாரத் நெட் உருவாக்கத்திற்காக கடந்த ஆண்டு டிசம்பர் 15ஆம் தேதியன்று ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதாகவும் அதற்குப் பிறகு, ஒப்பந்தப் புள்ளிக்கான முன்னோடிக் கூட்டம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 21ஆம் தேதி கூட்டப்பட்டபோது, உத்தேச ஒப்பந்ததாரர்களின் சந்தேகங்களை மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டு அதற்கேற்ற வகையில்தான் பிழை திருத்தப் பட்டியல் (Corrigendum) ஏப்ரல் 15ஆம் தேதி வெளியிடப்பட்டதாகவும் விளக்கமளித்திருக்கிறார்.

இந்தத் திட்டத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31ஆம் தேதிக்குள் நிறைவேற்ற மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்திருப்பதால் முன் அனுபவமும் பொருளாதாரத் திறனும் மிக்க நிறுவனங்களைத் தேர்ந்தெடுத்து திட்டத்தை நிறைவேற்றவே திருத்திய டெண்டர் வெளியிடப்பட்டிருப்பதாகவும் உதயகுமார் கூறியிருக்கிறார்.

தவறான புரிதல்களின் அடிப்படையில் சில அமைப்புகள் புகார் அளித்திருப்பதால், மத்திய தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறை தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கோரியிருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக விரிவான அறிக்கையை அரசு அனுப்புமென்றும் ஒப்பந்ததாரரின் தகுதியையும் திறமையும் வரையறுக்கும் பொறுப்பு மக்கள் நலன் காக்கும் அரசின் கடமை என்றும் அவர் கூறியிருக்கிறார். பாரத் நெட் திட்டத்திற்கு மத்திய அரசு எந்தத் தடையும் விதிக்கவில்லையென்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில், மாநில அரசின் மீது அடுத்தடுத்து ஊழல்குற்றச்சாட்டுகள் புறப்பட்டிருப்பது ஆளும் தரப்புக்கு நெருக்கடியாகவே அமையக்கூடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: