கோயம்பேட்டில் கொரோனா வைரஸ்: கோவிட்-19 தொற்றின் ஊற்றாக உருவெடுத்தது எப்படி?

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துவரும் நிலையில், சென்னையில் உள்ள கோயம்பேடு காய்கறிச் சந்தையே அதற்கான முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. இந்த விபரீதம் எப்படி நடந்தது?

சென்னையின் கோயம்பேட்டில் அமைந்துள்ள காய்கறி மற்றும் மலர் விற்பனை வளாகம், ஆசியாவின் மிகப் பெரிய காய்கறிச் சந்தைகளில் ஒன்று. கிட்டத்தட்ட 2 சதுர கி.மீ. பரப்புக்கு பரந்து விரிந்திருக்கும் இந்த காய்கறிச் சந்தை, சென்னைக்கு மட்டுமல்லாமல் சென்னையை ஒட்டியுள்ள விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என பல மாவட்டங்களுக்கு முக்கியமான சந்தையாக இருந்து வருகிறது. ஆந்திர மாநிலத்தில் உள்ள தடாவரை இங்கிருந்துதான் காய்கறிகள் அனுப்பப்படுகின்றன.

இந்த காய்கறிச் சந்தைக்கு தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் காய்கறிகள் வருகின்றன. மொத்த வியாபாரிகள் வருகிறார்கள். இந்த வளாகத்தில் காய்கறிகளின் மொத்த விற்பனைக்கு என 200 கடைகளும் சில்லறை விற்பனைக்கு என சுமார் ஆயிரம் கடைகளும் உள்ளன.

பண்டிகைகளை ஒட்டிய நாட்களில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் பேர்வரை வந்து செல்லும் இடமாக இந்த காய்கறி மார்க்கெட் இருந்து வருகிறது. ஒரு நாளைக்கு மூவாயிரம் முதல் ஐந்தாயிரம் டன் காய்கறிகள் வரை இங்கே விற்பனையாகிறது.

பட மூலாதாரம், TWITTER

தமிழ்நாட்டில் கொரோனா தொற்று துவங்கியதிலிருந்து மக்கள் அதிகம் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்ட நிலையிலும், கோயம்பேடு சந்தை மூடப்படவில்லை. தொடர்ந்து இயங்கியே வந்தது. இந்தச் சந்தையை மூடிவிட்டால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என காரணம் சொல்லப்பட்டது. இந்தச் சந்தையின் நிர்வாகம் சிஎம்டிஏ எனப்படும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் கீழே வருகிறது.

தமிழ்நாட்டில் மார்ச் 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்த நிலையிலும்கூட, கோயம்பேடு மார்க்கெட் எவ்வித தடையுமின்றி இயங்கிவந்தது. ஆனால், ஏப்ரல் இறுதி வாரத்தில் கோயம்பேட்டில் வியாபாரம் செய்துவரும் வியாபாரிகள் சிலருக்கு கொரோனா தாக்குதல் இருப்பது உறுதிசெய்யப்பட்டதும்தான் பலரும் விபரீதத்தை உணர ஆரம்பித்தார்கள்.

இதையடுத்து அவர்களுடன் தொடர்பில் இருந்த வியாபாரிகளை தேடி, தனிமைப்படுத்தும் பணியில் சுகாதாரத் துறை இறங்கியது. இதற்கிடையில், ஏப்ரல் 26ஆம் தேதி முதல் தீவிர ஊரடங்கை தமிழக அரசு அமல்படுத்தியது. இதனால், ஏப்ரல் 25ஆம் தேதியன்று 75,000க்கும் மேற்பட்டவர்கள் கோயம்பேடு மார்க்கெட்டில் குவிந்தனர். காலை 11 மணி அளவிலேயே காய்கறிகள் தீர்ந்துபோகும் அளவுக்கு கூட்டம் இருந்தது.

இந்த நிலையில், ஊரடங்கு காலத்திலும் கோயம்பேடு காய்கறிச் சந்தை முழுமையாக இயங்குவதற்கு அனுமதிக்கப்பட்டது. ஏப்ரல் 25ஆம் தேதியன்று பெரும் எண்ணிக்கையில் மக்கள் கூடியதாலும் 2 வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதாலும் முதன்முதலாக கோயம்பேடு சந்தையை இடமாற்றம் செய்வது குறித்து பேச்சுவார்த்தையை சிஎம்டிஏ துவங்கியது. ஆனால், ஏப்ரல் 27ஆம் தேதி நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. இடத்தை மாற்றிக்கொள்ள வியாபாரிகள் மறுத்துவிட்டனர்.

இதற்கு அடுத்த நாள், கோயம்பேடு சந்தைக்கு பொதுமக்கள் வருவதற்குத் தடைவிதித்து சிஎம்டிஏ உத்தரவிட்டது. அங்கு நடந்துவந்த சில்லரை விற்பனையையும் தடைசெய்தது. அங்கு நடந்துவந்த பழம் மற்றும் பூ வியாபாரத்தை மாதவரம் பேருந்து நிலையத்திற்கு மாற்றுவதாகவும் உத்தரவிட்டது. ஆனால், இந்த மாற்றத்தை பழம் மற்றும் பூ வியாபாரிகள் ஏற்கவில்லை.

ஆனால், அப்போதே தமிழ்நாட்டில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்திருந்தது. ஏப்ரல் 28ஆம் தேதி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகரித்தது. 121 பேருக்கு அன்று பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இதில் 103 பேர் சென்னையைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள்.

இதற்கிடையில் ஏப்ரல் 30ஆம் தேதி ஊரடங்கு தளர்த்தப்பட்டபோது மீண்டும் வியாபாரிகள் அங்கே குவிந்தனர். மே 1ஆம் தேதியும் இதேபோல கூட்டம் நிலவியது.

இந்த நிலையில், சென்னையில் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை முன் எப்போதும் இல்லாத வகையில் அதிகரிக்க ஆரம்பித்தது. சென்னையில் மட்டுமல்லாமல், செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் போன்ற சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் பெரிய எண்ணிக்கையில் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்பட்டார்கள். இவர்களில் பெரும்பாலானர்கள் கோயம்பேட்டுடன் தொடர்புடையவர்களாக இருந்தார்கள். மேலும் அங்கிருந்து காய்கறிகளை வாங்கி, நகருக்குள் விற்பனை செய்த பலருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது.

இது சென்னை முழுவதும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியநிலையில்தான் மே ஐந்தாம் தேதி முதல் கோயம்பேடு காய்கறிச் சந்தை மூடப்படுவதாக சி.எம்.டி.ஏ. அறிவித்தது. இதற்குப் பதிலாக சென்னையிலிருந்து சற்றுத் தொலைவில் உள்ள திருமழிசையில் இந்த காய்கறிச் சந்தை செயல்படுமென அறிவிக்கப்பட்டது.

"ஊரடங்கு இருந்த நாற்பது நாட்களும் காய்கறிச் சந்தையை செயல்பட அனுமதித்தது தவறு. நாங்கள் ஆரம்பத்திலிருந்தே நடுநடுவே விடுமுறை அளித்து, சந்தையை செயல்பட அனுமதிக்கலாம் என்று சொல்லிவந்தோம். ஆனால், யாரும் அப்போது கேட்கவில்லை. இப்போது மொத்தமாக மூடச் சொல்லியிருக்கிறார்கள்" என்கிறார் கோயம்பேடு காய்கறி அங்காடி அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜி.டி. ராஜசேகர்.

இந்த நோய்த் தொற்று பரவ ஆரம்பித்த பிறகும்கூட தங்களிடம் கலந்தாலோசிக்காமலேயே சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் முடிவுகளை அறிவித்ததாக இங்கிருக்கும் வியாபாரிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

கோயம்பேட்டிலிருந்து கொரோனா நோய்த் தொற்று பரவியதற்கு முக்கிய காரணமாக இங்கிருப்பவர்கள் சொல்வது, ஏப்ரல் 25ஆம் தேதி கூடிய கூட்டத்தைத்தான். "அன்று நகரக்கூட இடமில்லை. அன்றைய தினமே யாரிடமிருந்தும், யாருக்கு வேண்டுமானாலும் பரவியிருக்கலாம்" என்கிறார் அங்கு வியாபாரம் செய்யும் ஒரு மொத்த விற்பனையாளர்.

இங்கிருந்து காய்கறிகளை வாங்கித்தான் சென்னையின் பிற பகுதிகளில் விற்பனை நடக்கிறது. ஏப்ரல் 25ஆம் தேதி திருவான்மியூர் பகுதியில் போடப்பட்டிருந்த சந்தையிலும் பெரும் கூட்டம் கூடியது. அவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கிருந்து காய்கறிகளை வாங்கியவர்கள்தான்.

"கோயம்பேட்டில் இருப்பதுபோன்ற கழிப்பறை வசதிகளோ, பாதுகாப்போ அங்கு கிடையாது. இங்கே மூட்டை இறக்கும் தொழிலாளர்கள் உள்பட தினமும் 10,000 தொழிலாளர்கள் வருவார்கள். அவர்கள் எல்லாம் அங்கே வருவார்களா?" எனக் கேள்வி எழுப்புகிறார் ராஜசேகர்.

இங்கே கூடியதைப் போலவே அங்கேயும் கூட்டம் கூடினால் என்ன செய்வது என்ற கேள்வியும் வியாபாரிகளிடம் இருக்கிறது. மேலும் காய்கறிச் சந்தை 5ஆம் தேதி முதலே மூடப்பட்ட நிலையிலும், குப்பைகள்கூட அகற்றப்படாமல் காட்சியளிக்கிறது கோயம்பேடு மார்க்கெட்.

பட மூலாதாரம், Twitter

"இப்படித்தான் திருமழிசை சந்தையும் இருக்கமென்றால், அதனால் என்ன பயன்?" என்கிறார்கள் வியாபாரிகள். மே 5ஆம் தேதி முதல் மார்க்கெட் மூடப்பட்டிருப்பதால், சென்னையின் பல கடைகளில் காய்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.

இப்போது திருமழிசையில் தற்காலிக காய்கறிச் சந்தைக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுவருகின்றன. மே 8ஆம் தேதி முதல் திருமழிசையில் காய்கறிச் சந்தை இயங்குமென அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சமூக விலகல் கடைப்பிடிக்கப்படாமல், பெரும் கூட்டம் குவிந்தால், இடமாற்றம் செய்யப்பட்டதற்கான அர்த்தமே இல்லாமல் போகக்கூடும். மேலும், கொரொனா தொற்று அபாயமும் நீடிக்கும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: