புற்றுநோயுடன் போராடும் இந்தியாவின் 'கொரோனா போர் வீரர்'

ரமா சாஹு தினமும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.
படக்குறிப்பு,

ரமா சாஹு தினமும் கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.

ரமா சாஹு என்பவரை இந்திய அரசு கொரோனாவுக்கு எதிரானா போராளி என்று அழைக்கிறது. இந்த தொற்று சமயத்தில் உதவி செய்யும் மருத்துவ பணியாளர்களில் ஒருவர்தான் ரமா சாஹு. ஆனால் அவர் புற்றுநோயுடனும் போராடி வருகிறார் என பிபிசி ஹிந்தி சேவையைச் சேர்ந்த சுசிலா சிங் செய்தி தெரிவிக்கிறார்.

46 வயதான ரமா சாஹு தினமும் காலையில் கிழக்கு ஒரிசாவில் இருக்கும் ஒரு ஊரில் ஒவ்வொரு வீடாக சென்று தகவல் சேகரித்து அவர்கள் வீட்டுக்குத் தேவையான மளிகைப் பொருட்கள் அளித்து வருகிறார்.

ஒரிசாவில் சாதாரணமாக அடிக்கும் 40 டிகிரி செல்சியஸ் வெயிலில் அவர் 201 வீடுகளுக்கு செல்ல வேண்டும்.

ஆனால் அவருக்கு கருப்பையில் புற்றுநோய் இருப்பது அவர் தினமும் சந்திப்பவர்களுக்கு கூட தெரியாது. அவர் வீட்டை வெளியேறும் போது டயப்பர் அணிந்தே செல்வார். அவர் நிலை அவ்வளவு மோசமாக உள்ளது. "வேலைக்கு சென்ற பிறகு என் எல்லா பிரச்சனையையும் மறந்து விடுவேன். என் சிந்தனை எல்லாம் வேலையில்தான் இருக்கும்" என்கிறார் ரமா சாஹு.

அனைத்து குடும்பங்களிடமும் கேள்விகள் கேட்டு வேறு யாருக்காவது கோவிட்-19 தொற்றுக்கான அறிகுறி இருக்கிறதா என கண்டறிந்து , தனிமைப் படுத்துதல், சமூக விலகல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை விளக்கி அவர்களுக்கு உணவு வழங்கிவிட்டு வருவார். அவர்கள் கேட்கும் ஒவ்வொரு கேள்விக்கும் பொறுமையாக பதிலளிப்பார். அவர்கள் கொடுக்கும் தகவலை படிவத்தில் பதிவிடுவார்.

பின்னர் அந்த படிவத்தை அலுவலகத்தில் கொடுக்க வேண்டும். அலுவலகத்தில் இதேபோல ஒரு நாளில் எத்தனை பேரிடம் விசாரணை நடத்தப்பட்டதோ அவர்கள் தொடர்பான படிவத்தை சேகரித்துவைப்பர். இப்படித்தான் எத்தனை பேருக்கு கொரோனா உள்ளது என்பதை ஆவணப்படுத்தி வைத்துள்ளார்கள்.

தற்போது கிட்டதட்ட இந்தியா முழுவதும் 60,000 பேர் தொற்றுக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்துள்ளது. ஆனால் தேவைப்படும் அளவுக்கு சோதனை செய்யப்படவில்லை என்பதால்தான் இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக கூறுகின்றனர். இதனால் புதிதாக யாருக்காவது தொற்று உள்ளதா என கண்டறியும் பணியில் முன்களத்தில் இருந்து வேலை பார்க்கும் சாஹூ போன்ற மருத்துவப் பணியாளர்கள் மிகவும் முக்கியமானவர்கள் ஆகின்றனர்.

இந்தியா முழுவதும் லட்சக்கணக்கான பணியாளர்கள் இது போன்ற வேலையில் உள்ளனர். மார்ச் 24 முதல் நாடு முழுவதும் அறிவித்த முழு ஊரடங்கின் காரணமாக ஏழைகளுக்கு மளிகை பொருட்கள் வழங்கி வருவதுடன் அவர்களுக்கு தேவைப்படும் அறிவுரைகளையும் கூறுகின்றனர்.

"இந்தப் பணியை செய்ய நாங்கள் அதிகம் தேவைப்படுகிறோம்" என்கிறார் சாஹு.

"அதனால்தான் நான் புற்றுநோயில் அவதிப்பட்டாலும் என்னுடைய வேலைக்கு தொடர்ந்து செல்கிறேன்" என்கிறார் சாஹூ.

"அவருக்கு வலி அதிகமானால் மட்டுமே அவர் வீட்டில் ஓய்வெடுப்பார்" என்று கூறினார் சாஹூவின் கணவர் ரமேஷ்.

"வீட்டில் இருக்கும் போது வலியின் காரணமாக அழுவார். ஆனால் அந்த வலியை வேலைக்கு சென்றால் மறந்து விடுவார். அவருடைய மேற்பார்வையாளர் அவர் நிலையை புரிந்து கொண்டு அவரை வீட்டில் ஓய்வெடுக்கக் கூறுவார்" என்கிறார் ரமேஷ்.

இவர்களுக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். இரண்டு பேரும் இறந்துவிட்டனர். ஒருவருக்கு 4 வயதிலும், ஒருவர் ஆறு மாதத்திலும் இறந்துவிட்டனர்.

"எங்கள் உலகமே முடிந்தது போல் இருந்தது. எங்கள் இருவருக்குமே உடல்நிலை சரியில்லாமல் போனது. ஆனால் என்ன நோய் என்று தெரியவில்லை" என்றார் சாஹூவின் கணவர்.

மீண்டும் குழந்தை பெறும் ஆசையில் 2014ல் உடல் பரிசோதனை செய்த போது ரமாவிற்கு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

சாஹுவின் கணவர் ரமேஷ் ஒரு மளிகை கடை வைத்துள்ளார். அவர் முன்னர் வெளிமாநிலங்களுக்கு கட்டுமானப்பணிக்கு சென்றுள்ளார்.

மும்பைக்கு சென்று ராமாவின் புற்றுநோய்க்கு கீமோதெரபி சிகிச்சை எடுத்ததாக கூறுகிறார் ரமேஷ். அவர் குணமடைந்ததாக கூறப்பட்டது. ஆனால் அவருக்கு மீண்டும் புற்றுநோய் வந்துள்ளது.

ஒன்றும் செய்யமுடியாது என மருத்துவர்கள் கூறிவிட்டனர் ஏனென்றால் புற்றுநோய் தற்போது தீவிர நிலையில் உள்ளது என்று அவர்கள் கூறிவிட்டதாக ரமேஷ் கூறினார்.

"மக்களுக்கு முகக்கவசம் பயன்படுத்துவது குறித்தும் கைகளை எப்படி கழுவ வேண்டும் என்பது குறித்தும் சொல்ல வேண்டியதே என்னுடைய வேலையாகும். இல்லையென்றால் அவர்கள் குழம்பி போவார்கள்". என்கிறார் சாஹு.

"உடம்பு சரியில்லாத நிலையில் கூட அவர் பின் வாங்க வில்லை. நாங்கள் அவருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்" என்கிறார் கிராமத் தலைவர் லக்ஷ்மன் கவுடா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: