கொரோனா வைரஸ் பாதிப்பு: தமிழகத்தில் ஒரே நாளில் 600க்கும் அதிகமானோர் பாதிப்பு, இந்திய அளவில் மூன்றாமிடம்

பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் ஒரே நாளில் புதிதாக 600க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது இன்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7204ஆக உயர்ந்துள்ளது.
இன்று 669 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிசெய்யப்பட்ட நிலையில், அதில் 509 நபர்கள் சென்னையில் உள்ள பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை எடுத்துவருவதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புள்ள மாவட்டங்களாக சென்னை(509), செங்கல்பட்டு(43) உள்ள நிலையில், பிற மாவட்டங்களில் புதிதாக தொற்று இருப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், கரூர் மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு மட்டுமே புதிதாக தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் மொத்தமாக பாதிக்கப்பட்ட 7204 நபர்களில், 6337 நபர்கள் 13-60 வயது பிரிவுக்குள் உள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
நேற்றுவரை தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 44ஆக இருந்தது. தற்போதைய நிலவரப்படி, அந்த எண்ணிக்கை 47ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 135 நபர்கள் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனர் என்பதால் குணமடைந்தோர் எண்ணிக்கை 1959ஆக உயர்ந்துள்ளது.
இதுவரை கொரோனா தொற்று இருப்பதை உறுதிசெய்ய 2,43,037 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. அதில் இன்று ஒரே நாளில் 13,367மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்புகளில், நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் ஊரடங்கு தளர்வுகள் இல்லை என்றும் பிற இடங்களில் அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகள், பார்சல் தரும் உணவகங்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவை இயங்குவதற்கான நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கக் காரணமாக இருந்த கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டுள்ளதால், திருமழிசை பகுதியில் தற்காலிக சந்தை நாளை முதல் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ள கல்லூரிகள், கண்காட்சி வளாகங்கள் தற்காலிக முகாம்களாக செயல்படுகின்றன. அதோடு, வெளிமாநில தொழிலாளர்கள் அவர்களின் சொந்த மாநிலத்திற்குச் செல்வதற்கான போக்குவரத்து வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், அரசு நடத்திவரும் தற்காலிக தங்குமிடங்கள் படிப்படியாகக் குறைந்துவருகின்றன.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: