கொரோனா ஊரடங்கு: கொடியிலே காய்ந்து போகும் வெற்றிலைகள் - தவிக்கும் விவசாயிகள்

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழுக்காக
வெற்றிலை

பட மூலாதாரம், Getty Images

கொரோனா ஊரடங்கு காரணமாக அறுவடை செய்ய முடியாமல் கொடியிலே பழுத்து வீணாகி வருகிறது வெற்றிலை. இதனால் கடும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என வெற்றிலை விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

வருவாயின்றி தவித்து வரும் வெற்றிலை விவசாயிகள்

ராமநாதபுரம் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, பெரியபட்டிணம், தங்கச்சிமடம், புதுமடம் உள்ளிட்ட கடலோர பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் வெற்றிலை விவசாயம் செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக திருவிழா, மற்றும் சுப நிகழ்ச்சிகளுக்கு தடை விதித்து இருப்பதால் வெற்றிலை பயிரிட்டிருக்கும் விவசாயிகள், பயிரிட்ட வெற்றிலையை அறுவடை செய்யாமல் கொடியிலேயே விட்டு விடுகின்றனர். இதனால் வெற்றிலை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மட்டும் அல்லாமல் தமிழகம் முழுவதிலும் உள்ள வெற்றிலை விவசாயிகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து வெற்றிலை விவசாயி பாக்கிய ராஜேந்திரன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "நான் ராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டையில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிலை விவசாயம் செய்து வருகிறேன். தற்போது கொரோனா பாதிப்பு காரணமாக வெற்றிலை வியாபாரம் தடைப்பட்டதால் வெற்றிலை விவசாயிகள் வாழ்வாதாரமின்றி தவித்து வருகிறோம்." என்கிறார்.

மேலும், "இந்த தொழிலை நம்பி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறோம். கொரோனா பாதிப்பு காரணமாக பேருந்து போக்குவரத்து இல்லாததால் வெற்றிலைகள் தேங்கிவிட்டன. அரசு பேருந்து போக்குவரத்து இல்லாததால் தனியாக வண்டி ஏற்பாடு செய்து அண்டை மாவட்டங்களுக்கு வெற்றிலை கொண்டு செல்லும் அளவிற்கு வருவாய் கிடைப்பதில்லை,"

"கொரோனா ஊரடங்கால் வெளி மாவட்டங்களுக்கு வெற்றிலை கொண்டு செல்ல முடியாததால் பக்கத்து ஊர்களுக்கு கொண்டு சென்று விற்கலாம் என்றால் பக்கத்து ஊர்களும் சீல் வைக்கபட்டு இருப்பதால் வெற்றிலையை விற்க முடியவில்லை,"

"கடந்த இரண்டு மாதம் முகூர்த்த நாட்கள் அதிகம் இருந்தது ஆனால் சுப காரிய நிகழ்ச்சிகளில் மக்கள் அதிகம் கலந்து கொள்ளாமல் போனதால் வெற்றிலை வியாபாரம் பாதிக்கப்பட்டது. மாசி, பங்குனி, சித்திரை மாதங்களில் கோவில் திருவிழாக்கள் அதிகளவில் நடைபெறும் ஆனால் அரசு கோவில் திருவிழாக்களுக்கு அனுமதி அளிக்காததால் வெற்றிலை வாங்குவதற்கு வியாபாரிகள் வரத்து இல்லாமல் போனது, இன்னும் சிலர் வெற்றிலையில் இருந்து கொரோனா தொற்று பரவி விடுமோ என்ற அச்சத்தில் வெற்றிலை வாங்குவதில்லை இதனால் வெற்றிலை விவசாயம் முடங்கியுள்ளது." என்றார் பாக்கிய ராஜேந்திரன்.

விவசாயத்தை தவிர வேறு தொழில் தெரியாது

வெற்றிலை விவசாய பாதிப்பு குறித்து வெற்றிலை தோட்டத்தில் வேலை செய்யும் விவசாய தொழிலாளி கணபதி பிபிசி தமிழிடம் பேசுகையில், "கொரோனா ஊரடங்குக்கு முன் ஒரு நாளைக்கு 300 ரூபாய் கூலி கிடைத்து கொண்டிருந்த நிலையில், தற்போது நான்கு நாட்களுக்கு ஒரு முறை மட்டும்மே வேலை இருக்கிறது. இதனால் தோட்டத்தில் வெற்றிலையும் தேங்கியுள்ளது," என்கிறார்.

"விவசாய தொழிலை விட்டால் வேறு எந்த தொழிலும் எனக்கு செய்ய தெரியாது இதனால் தினசரி உணவின்றி தவித்து வருகிறேன்," என்கிறார் விவசாய கூலி தொழிலாளி கணபதி.

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெற்றிலையை பறிக்காமல் போனதால், கொடியிலையே வெற்றிலைகள் காய்ந்துவிட்டன. இதனால், வெற்றிலை கொடியை நம்பி வாழ்ந்து வரும் கூலி தொழிலாளிகளுக்கு வேலை இல்லை எனவும், அரசு தமிழகம் முழுவதிலும் உள்ள வெற்றிலை விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கி உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கிறார் கணபதி.

விவசாய பொருட்கள் தங்கு தடையில்லாமல் விற்பனை செய்ய ஏற்பாடு

இது குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் வீர ராகவ ராவ் பிபிசி தமிழிடம் கூறுகையில், "ராமநாதபுரம் மாவட்டத்தில் புதுமடம், முத்துப்பேட்டை, தங்கச்சிமடம், பெரியபட்டிணம் ஆகிய கடலோர கிராமங்களில் குறைந்த அளவிலான விவசாய நிலங்களில் விவசாயிகள் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாவட்டங்களுக்கு வெற்றிலை கொண்டு செல்ல முடியாத நிலையில் விவசாயிகள் தாங்கள் விளைவித்த வெற்றிலைகளை உள்ளுர் காய்கறி சந்தைகளில் விற்பனை செய்வதற்கான ஏற்பாடுகள் மாவட்ட நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டுள்ளது," என்றார்.

"தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகள் அறிவித்ததின் அடிப்படையில் தற்போது விவசாய பொருட்கள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் விற்பனை செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டதுடன் வெளி மாவட்டங்களுக்கு செல்ல சிறப்பு பாஸ்கள் (அனுமதி சீட்டு) வழங்கப்பட்டுள்ளது,"

"ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வெற்றிலை விவசாயிகளுக்கு வெற்றிலை விற்பனை செய்வதில் ஏதேனும் சிக்கல்கள் ஏற்பட்டால் மாவட்ட நிர்வாகம் அல்லது தங்களது வட்டார தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்களை தொடர்பு கொள்ளலாம் விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் உடனடியாக செய்து தரப்படும்." என்றும் தெரிவித்தார் மாவட்ட ஆட்சி தலைவர் வீர ராகவ ராவ்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: