குடியரிமைத் திருத்தச் சட்ட எதிர்ப்பு போராட்டம் : டெல்லி கலவரத்தை தூண்டியதாக திகார் ஜெயிலில் 4 மாத கர்ப்பிணி சஃபூரா – நடந்தது என்ன?

  • கீதா பாண்டே
  • பிபிசி செய்தியாளர்
சஃபூரா சர்கர்

டெல்லியின் தென் கிழக்கு பகுதியில் இருக்கும் சஃபூரா சர்கரின் வீட்டிற்கு போலீஸார் செல்லும்போது மதியம் 2.30 மணி.

டெல்லியின் மதிப்பிற்குரிய ஜாமியா மிலியா இஸ்லாமிய பல்கலைக்கழகத்தில் சோஷியாலஜி படிக்கும் சஃபூராவுக்கு வயது 27.

போலீஸார் அவரின் வீட்டிற்குள் நுழையும்போது அவர் உறங்கி கொண்டிருந்தார் என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத அவரின் கணவர்.

சஃபூராவுக்கும் அவரது கணவருக்கும் 19 மாதங்களுக்கு முன் திருமணம் நடைபெற்றது. அவரை போலீஸார் அழைத்து செல்வதற்கு சில வாரங்களுக்கு முன் சஃபூரா அவர் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

"அவருக்கு அடிக்கடி வாந்தி வருவதுபோல் தோன்றியது; அதுமட்டுமல்லாமல் அசதியாக இருப்பதாகவும் கூறியிருந்தார்."

திகாரில் சஃபூரா

சஃபூராவின் வீட்டிற்கு வந்த போலீஸார் அவர்கள் டெல்லி காவல்துறையின் பயங்கரவாத தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரிகள் என தெரிவித்துள்ளனர். மேலும் சஃபூராவை மத்திய டெல்லியில் உள்ள அவர்களின் அலுவலகத்துக்கு அழைத்துள்ளனர்.

சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சஃபூரா போராடியது குறித்து சில கேள்விகளைக் கேட்க வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.

காவல் நிலையத்தில் சஃபூராவை பல கேள்விகள் கேட்டுள்ளனர். அதன்பிறகு இரவு 11.30 மணியளவில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அது ஏப்ரல் 10ஆம் தேதி.

அதன்பின் சஃபூரா டெல்லியின் அதிக கைதிகளை கொண்ட திகார் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது ஒருமாதம் ஆகிவிட்டது.

நாடுமுழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது, கொரோனா தொற்று கர்ப்பிணி பெண்களை அதிகம் தாக்கும் வாய்ப்பு உள்ளது என அரசும் தெரிவித்துள்ள சூழலில்தான் சஃபூரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

UAPA சட்டத்தின் கீழ்

சஃபூரா மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவருக்கு ஜாமீன் கிடைப்பது என்பது கிட்டதட்ட சாத்தியமற்றது.

அவர் கைது செய்யப்பட்ட பிறகு ஐந்து நிமிடங்கள் அவரின் கணவருக்கும் வழக்கறிஞருக்கும் அழைப்பு விடுக்க அனுமதி வழங்கப்பட்டது. ஆனால் அவரை யாரும் சந்திக்கவும், கடிதம் எழுதவும் கோவிட் 19 காரணமாக அனுமதி வழங்கப்படவில்லை.

மார்ச் 25ஆம் தேதி ஊரடங்கு தொடங்கியபின் சஃபூராவுடன் பல முஸ்லிம் மாணவர்கள் மற்றும் ஆர்வலர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அரசாங்கம் அவர்களுக்கு எதிராக பேசுபவர்களுக்கு, எதிராக செயல்படுவதற்கான காலமாக ஊரடங்கை பயன்படுத்திக் கொள்வதாக பல குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

மாணவ அமைப்பான ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியின் உறுப்பினரான சஃபூரா வட கிழக்கு டெல்லியில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிராக அமைதியான போராட்டத்தை ஒருங்கிணைத்துள்ளார்.

சஃபூரா "தைரியமான, மிக நேர்மையான மற்றும் தனக்கென கொள்கைகளை கொண்ட பெண்" என அவரின் சகோதரி சமீயா விவரிக்கிறார்.

ஆனால் அந்த பகுதியில் பிப்ரவரி மாதம் நடைபெற்ற கலவரத்துக்கு சஃபூரா "முக்கியக் காரணமாக இருந்தார்" என என்ற போலீஸார் தெரிவிக்கின்றனர். அந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர் அதில் பெரும்பாலும் முஸ்லிம்கள்.

மறுக்கும் குடும்பத்தினர்

ஆனால் இந்த குற்றச்சாட்டை சமீயா மறுக்கிறார். தனது சகோதரி குற்றவாளி இல்லை என்றும், அவர் ஒரு மாணவி என்றும், ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினார் என்றும் கூறுகிறார்.

டெல்லி போலீஸ், தாங்கள் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் தங்கள் கடமையை செய்ததாக தெரிவிக்கின்றனர். மேலும் அனைத்து கைதுகளும், தடவியல் மற்றும் அறிவியல் ஆதாரங்களை ஆராய்ந்தபின்னே மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

ஆனால் கலவரத்துடன் போராட்டத்தை இணைக்க போலீஸார் தவறான கூற்றுக்களைப் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

"எனது பார்வையில், இது வஞ்சகமான துன்புறுத்தல்" என பிபிசியிடம் தெரிவித்தார் வழக்கறிஞரும் ஆர்வலருமான பிரஷாந்த் பூஷன்.

தங்களுக்கு எதிராகவுள்ள அனைவரையும் அரசு ஒடுக்கப் பார்க்கிறது என்றும், இம்மாதிரியான கைதுகள் மூலம், எதிர்காலத்தில் எந்த ஒரு போராட்டமும் நடைபெறாமல் இருப்பதற்கு வழி செய்கிறது என்றும் பிரஷாந்த் பூஷன் தெரிவிக்கிறார்.

"வன்முறையால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்கள்; அவர்கள்தான் அதிக துயரத்தை அனுபவித்தனர்," என்கிறார் பூஷன்.

பிப்ரவரி 23ஆம் தேதியிலிருந்து 25ஆம் தேதிவரை இந்து குழுக்கள், முஸ்லிம் பகுதிகளில் இந்து மத கோஷங்களை எழுப்பிக் கொண்டு கற்கள், தடிகளை வைத்து தாக்கினர்.

பல முஸ்லிம்கள் கும்பலாகத் தாக்கப்பட்டனர்; அவர்களின் வீடுகள் மற்றும் வியாபாரங்கள் சூறையாடப்பட்டன. வீடுகள் தீவைக்கப்பட்டன. மசூதிகள் சேதப்படுத்தப்பட்டன; ஆயிரக்கணக்கானவர்கள் முகாம்களில் வலுக்கட்டாயமாகத் தங்க நேரிட்டது.

போலீஸார் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறினாலும், அவர்கள் கலவரக்காரர்களுக்கு உதவியது அல்லது ஏதும் செய்யாமல் கலவரத்தை பார்த்து கொண்டு நின்றதற்கான ஆவணப்படுத்தப்பட்ட எடுத்துக்காட்டுகள் இருந்தன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இந்து தேசியவாத கட்சியான பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த பலர் அந்த கலவரத்திற்கு முன்பாக போராட்டங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக மோசமான கருத்துக்களை பேசுவதும் காணொளிகளில் தெரிந்தது.

பட மூலாதாரம், Getty Images

ஒருங்கிணைக்கப்பட்ட வன்முறை

பாஜகவை சேர்ந்த மூன்று தலைவர்களை கைது செய்வதற்கான மனு டெல்லி உயர்நீதிமன்றத்தில் உள்ளது.

மேலும் பலர் இந்த கலவரம் "முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைக்கப்பட்ட ஒன்று" என்று பலர் கூறுகின்றனர்.

ஆனால் கொரோனா சூழலில் நீதிமன்றங்களும் குறைவாகவே செயல்படும் இந்த காலக்கட்டத்தில், கலவர கும்பலகள் மற்றும் பாஜக தலைவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, முஸ்லிம் மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் நடவடிக்கை எடுத்து, அவர்கள் மீது தேசதிரோகம் மற்றும் சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் சுமத்தி வருகின்றனர் என்கின்றனர் ஆர்வலர்கள்.

பிப்ரவரி மாத கலவரத்துடன் தொடர்புடையதாக கூறி இதுவரை 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும், அதில் டஜன் கணக்கானவர்கள் ஊரடங்கு சமயத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் ஒரு அறிக்கை கூறுகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் டெல்லி போலீஸ், பிரதமர் மோதி அரசின் உத்தரவுக்கு இணங்க செயல்படுவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது.

சஃபூராவை தவிர்த்து, ஆராய்ச்சி மாணவரும் ஜாமியா ஒருங்கிணைப்பு கமிட்டியின் உறுப்பினருமான மீரன் ஹைதர், ஜாமிய மிலியா இஸ்லாமியாவின் முன்னாள் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஷியா உர் ரஹ்மான், எம்பிஏ மாணவரான குல்ஃபிஷா, மற்றும் முன்னாள் நகராட்சி கவுன்சிலரான இஷ்ரத் ஜஹான் ஆகியோரும் சிஏஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த அனைத்து வழக்குகளிலும், போலீஸார் ஒரே கூற்றை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் கலவரத்தை தூண்டினார்கள் என்றும், வெறுப்பை தூண்டும் விதமாக பேசினார்கள் என்றும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த கைதுகளை மனித உரிமை குழுக்கள் "சட்டவிரோதமானது" என்கின்றனர். மேலும் இது "மோசமான ஒரு அதிகார துஷ்பிரயோகம்" என்று கூறுகின்றனர்.

நாடு முழுவதும் உள்ள நூற்றுக்கணக்கான பெண் ஆர்வலர்கள், "ஜனநாயக முறையில் போராடுபவர்களுக்கு எதிரான இம்மாதிரியான கைதுகள், துன்புறுத்தல்கள் மற்றும் மிரட்டல்களை நிறுத்த வேண்டும்," என்று கோருகின்றனர்.

அமைதியாக போராட்டம் நடத்தியவர்கள் மீது தொடுக்கப்பட்ட பொய் வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் என்றும், பொய் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்றும், அறிக்கை தெரிவிக்கிறது.

ஆனால் சஃபூரா நான்கு மாத கர்ப்பிணியாக இருப்பதால், மாணவர்கள் மற்றும் ஆர்வலர்களை அரசு ஒடுக்குவதின் முகமாக அவர் இருக்கிறார்.

"பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து வேறுபாடுகளை தாங்கிக் கொள்ள முடியாத அரசாக இந்திய அரசு உள்ளது," என அம்னெஸ்டி இண்டர்நேஷனலின் இந்திய நிர்வாக இயக்குநர் அவினாஷ் குமார் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.

"நான்குமாத கர்ப்பிணியான சஃபூராவை கைது செய்து அதிக கைதிகளை கொண்ட சிறைக்கு இந்த சமயத்தில் அனுப்புவதன் மூலம் நாட்டில் எம்மாதிரியான ஒரு மோசமான சூழல் நிலவுகிறது என்பதை காட்டுகிறது" என அந்த அறிக்கை கூறுகிறது.

சஃபூராவின் கைது கவனம் பெற்றிருப்பது அரசு ஆதாரவாளர்களுக்கு பிடிக்கவில்லை. எனவே சமூக வலைதளங்களில் சஃபூரா குறித்து அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

ஆபாச காணொளி

கடந்த வாரம் நூற்றுக்கணக்கான வலதுசாரிகள், டிவிட்டரில் சஃபூரா குறித்து அவதூறுகளை பரப்பினர். அவருக்கு திருமணம் ஆகவில்லை என்றும், இருப்பினும் அவர் கர்ப்பமாக உள்ளார் என்றும் பதிவிட்டனர்.

மேலும்'நாங்கள் நரேந்திர மோதியை ஆதரிக்கிறோம்' (We Support Narendra Modi) என்ற முகநூல் குழுவின் உறுப்பினர்கள் ஆபாசப்பட வீடியோ ஒன்றை பகிர்ந்து அதில் உள்ளது சஃபூரா என்றும் தவறாக பதிவிட்டிருந்தனர்.

செய்தியின் உண்மையை பரிசோதிக்கும் வலைதளமான ஆல்ட் நியூஸ் "அது விளம்பரத்துக்காக பயன்படுத்தப்படும் ஒரு குழு என்றும், அதில் பிரதமர் மற்றும் பாஜகவை புகழ்ந்தும் எதிர் தரப்பினருக்கு எதிரான பதிவுகளே இருப்பதாகவும்" தெரிவிக்கிறது.

அரசுக்கு ஆதரவான வலதுசாரி பத்திரிகைகள் "கலவரத்தின்போது பல அப்பாவி உயிர்கள் பலியாவதற்கு சஃபூரா காரணமாக இருந்தார்" என்று கூறுகிறது.

அவர் குற்றமற்றவரா என்பது நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டால் மட்டும்தான் தெரியும் என்கின்றனர் சட்டநிபுணர்கள்.

ஆனால் அது ஒரு நீண்ட நடைமுறை. அந்த நீண்ட நடைமுறையே ஒரு தண்டனை.

சஃபூரா குறித்து பரப்பப்பட்ட அவதூறுகள் அவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த துயரத்தை கொடுத்திருக்கும்.

செவ்வாயன்று சஃபூராவுடன் பேசிய அவரின் கணவர் இந்த அவதூறுகள் குறித்து ஏதும் அவரிடம் சொல்லவில்லை என்கிறார்.

"எனக்கு நிறைய பேச வேண்டியிருந்தது ஆனால் நாங்கள் சிறிது நேரத்திற்கு மட்டுமே பேச முடியும்."

ஐந்து நிமிடத்திற்கும் குறைவான அந்த அழைப்பில், சஃபூராவின் உடல்நலம் குறித்தும், சிறையில் அவருக்கு கிடைக்கும் உணவு குறித்தும், ஊரடங்கு கட்டுப்பாடால் பணம் அனுப்ப முடியாமல் போனதால் எவ்வாறு பணம் அனுப்புவது என்பது குறித்தும் பேசியுள்ளனர்.

"அவர் எனது பெற்றோர்கள், அவரின் பெற்றோர்கள், மற்றும் உடன்பிறந்தவர்கள் குறித்து கேட்டார். அவரை நினைத்து குடும்பம் கவலையில் உள்ளதா என்றும் கேட்டார்,"

உனது உறுதியை மட்டுமே நாங்கள் நம்பியிருக்கிறோம் என அவரிடம் நான் சொன்னேன் என்கிறார் அவரின் கணவர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: