இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கனவான ‘சுயசார்பு’ சாத்தியமா? சீனாவை வீழ்த்த முடியுமா?

  • ஜுபைர் அகமது
  • பிபிசி இந்தியா
மோடி

பட மூலாதாரம், Getty Images

பிரதமர் நரேந்திர மோதி, ஆத்மநிர்பார் பாரத் எனும் திட்டத்தை வாக்குறுதியாக அளித்திருக்கிறார். அதாவது சுயசார்பு இந்தியா.

கொரோனா பெருந்தொற்று காரணமாக மட்டும் அல்ல, இந்த சுயசார்பு இந்தியா திட்டமானது எதிர்கால இந்தியாவை கட்டமைப்பதற்கான திட்டம் என்கிறது என்கிறது பா.ஜ.கவின் உட்கட்சி குறிப்பு. எதிர்கால இந்தியாவை காப்பதற்கான திட்டம் என அந்த குறிப்பு வர்ணிக்கிறது.

அவர் இதனை மெல்ல சாதிக்க விரும்பவில்லை. அவர் பெரும்பாய்ச்சலில் இதனை சாதிக்க விரும்புகிறார். இருபது லட்சம் கோடி ஒதுக்கப்படும் என அவர் கூறுவதிலிருந்தே இதனை புரிந்து கொள்ள முடிகிறது.

காலத்தால் புதைக்கப்பட்ட சுதேசி திட்டம்

அவர் தனது உரையில் சுதேசி எனும் பதத்தை பயன்படுத்தவில்லை. ஒரு பொருளாதார மாதிரியாகப் பார்க்கப்பட்ட சுதேசி திட்டம், தேசியவாதிகளால் பரிந்துரைக்கப்பட்ட சுதேசி திட்டம், காலத்தால் புதைக்கப்பட்டுவிட்டது.

ஆனால், மோதியின் இந்த 'சுயசார்பு' திட்டமானது, சுதேசி திட்டத்தின் இன்னொரு டெம்ப்ளேட்தான். காதி குறித்து அவர் பேசியதிலிருந்தே இதனை புரிந்து கொள்ள முடியும்.

கடந்த நூற்றாண்டில் இந்த சுதேசி திட்டமானது கடைப்பிடிக்கப்பட்டது. ஆனால்,பெரும் வளர்ச்சி ஏதும் தராததால், 1991 ஆம் ஆண்டு தனது பொருளாதார கதவுகளை உலகுக்கு திறந்துவிட்டது இந்தியா.

இப்போது மீண்டும் சுயசார்பு திட்டமென பேசுகிறார் மோதி. ஆனால், அதே நேரம், உலகமயமாக்கப்பட்ட பொருளாதாரத்திற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அமெரிக்க சந்தை சரிவை கண்டால், இந்தியாவின் தெரு வணிகத்தில் எதிரொலிக்கும் பொருளாதார அமைப்புக்கும், இந்த சுயசார்பு திட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை.

இந்தியா உலக வர்த்தக அமைப்பில் கையெழுத்திட்டு இருக்கிறது. அதனால் அது தன் போக்கில் உற்பத்தியில் ஈடுபட முடியாது, அது தொடர்பாக எந்த முடிவையும் எடுக்க முடியாது.

மோதியின் இந்த சுயசார்பு கொள்கையானது வித்தியாசமானது என்கிறார் கட்சியில் உள்விவகாரம் குறித்து விவரம் அறிந்த ஒருவர். இந்த திட்டமானது தன்னை தனிமைப்படுத்திக் கொள்ளும் திட்டமோ அல்லது இருக்கும் அமைப்பிலிருந்து வெளியேறும் திட்டமோ அல்ல. செயல்திறனை மேம்படுத்தி உலக நாடுகளுடன் போட்டியிட்டு, அவர்களுக்கு உதவுவதுதான் இந்த திட்டம் என்கிறார் அவர்.

பொருளாதார தேசியவாதம்

இந்த பெருந்தொற்றுக்கு பின் அனைத்து நாடுகளும் தன் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கும்.

ஆர்.எஸ்.எஸ் அமைப்புடன் தொடர்புடைய சுதேசி ஜக்ரா மன்ச் அமைப்பை சேர்ந்த அருண் ஓஜா, கொரோனாவுக்கு பின், பொருளாதார தேசியவாதத்தை அனைத்து நாடுகளும் கடைப்பிடிக்கும் என்கிறார்.

சுயசார்பு குறித்து இப்போது பேசப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று கூறும் அவர், நாங்கள் இந்த மாதிரியை பல ஆண்டுகாலமாக வலியுறுத்தி வருகிறோம் என்கிறார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப் 'அமெரிக்காவே முதன்மை' எனும் திட்டத்தைப் பின்பற்றுகிறார். இந்தியாவால் அமெரிக்காவுடன் வணிகப் போரில் ஈடுபட முடியாது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவின் வரிவிகிதங்கள் அதிகமாக உள்ளது. வரி விகிதங்களை இந்தியா குறைக்க வேண்டும். குறைந்தபட்சம் அமெரிக்காவுடனான வணிகத்தின் போதாவது வரிகளை குறைக்க வேண்டும் என டிரம்ப் வலியுறுத்தினார்.

இதனை எல்லாம் பொருத்திப் பார்க்க வேண்டும்.

மோதி தனது 30 நிமிட உரையில் உள்ளூர் விஷயங்களை உரக்கப் பேசுங்கள் என்கிறார். இதுவொரு கோஷம் போல உள்ளது. சுயசார்பு என்பது அனைத்து நாடுகளின் கனவு.

மேக் இன் இந்தியா கனவு திட்டத்துடன் இப்போது பேசப்படும் விஷயத்தை ஒப்பிட்டு பாருங்கள். மேக் இன் இந்தியா திட்டம் மூலம் இந்தியாவை உற்பத்தி மையமாக்க வேண்டும் என்பது மோதியின் கனவு. ஆனால், இது தோல்வி அடைந்துவிட்டது.

மோதி வாக்குறுதிகள் அதிகம் தருவார். ஆனால் செயல்படுத்துவதில் கோட்டைவிட்டுவிடுவார் என்கின்றனர் விமர்சகர்கள்.

எப்படி செயல்படுத்த போகிறார்?

எப்படி இதனை செயல்படுத்த போகிறார் என்பது குறித்து மோதி எதுவும் விவரிக்கவில்லை. ஆனால், சில குறிப்புகளை மட்டும் சொன்னார்.

"பொருளாதாரம், உள்கட்டமைப்பு, அமைப்பு, ஜனநாயகம் மற்றும் தேவை," - இவைதான் சுயசார்புக்கு தூணாக இருக்கும் என்றார்.

சரி இந்த தூண்கள் வலுவாக உள்ளதா?

பட மூலாதாரம், Getty Images

பொருளாதாரம்: இந்தியாவின் 2.7 ட்ரில்லியன் பொருளாதாரம் 2 சதவீத வளர்ச்சியில் இருக்கிறது. இந்த தலைமுறை கண்ட மிக மோசமான வளர்ச்சி விகிதம் இது. விநியோக சங்கிலியும் பலவீனமாக உள்ளது.

சமூக முடக்கத்தால் மீண்டும் வறுமைக் கோட்டுக்குக் கீழே போன கோடிக்கணக்கான இந்தியர்களைத் தூக்கிவிடும் பெரும் பணி இந்திய அரசிடம் இருக்கிறது என்கிறார்கள் பொருளாதார வல்லுநர்கள்.

உள்கட்டமைப்பு: சீனாவுடன் போட்டியிட, சீனாவுக்குச் செல்லும் நிறுவனங்களை இந்தியாவை நோக்கி ஈர்க்க, இந்தியா சர்வதேச தரத்தில் உள்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும். அதற்கு ஆற்றல், நிலம், நீர் என பல்வேறு தளங்களில் சீர்திருத்தம் தேவை.

உள்கட்டமைப்பை மேம்படுத்த அதிக ஆண்டுகள் ஆகும், இந்தியாவிடம் அவ்வளவு கால அவகாசம் இல்லை.

தொழில்நுட்ப அமைப்பு: தொழில்நுட்பத்தை சிறப்பாகப் பயன்படுத்த மோதி வலியுறுத்துகிறார். அவர் அரசும் இந்த விஷயத்தில் சரியாக பாதையில் போகிறது. டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பரவலாக்கி வருகிறது.

துடிப்பான ஜனநாயகம்: ஜனநாயக விழுமியங்கள் மோதி அரசால் சிதைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் விமர்சகர்கள். ஆனால், அதே நேரம் ஜனநாயகம் தான் இந்தியாவின் பலம். சீனா அந்த விஷயத்தில் இந்தியாவுடன் போட்டி போட முடியாது. ஜனநாயகத்தை, மனித உரிமையை மதிக்கும் உற்பத்தியாளர்களின் முதல் தேர்வாக இந்தியாதான் இருக்கும்.

மக்கள்தொகை அமைப்பு: இந்திய மக்கள்தொகையில் 65% பேர் 35 வயதுக்கும் குறைவானவர்கள். இது இந்தியாவின் பலங்களில் ஒன்று. இந்த பலத்தை கொள்கை வகுப்பாளர்கள் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.

தேவை: இந்தியாவின் உள்நாட்டு சந்தைதான் முதலீட்டாளர்களை ஈர்க்கிறது. இப்போது தேவை சரிவில் இருக்கிறது. ஆனால்,கொரோனாவுக்கு பின் எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் பொருத்து தேவை அதிகரிக்கும் என்கிறார்கள் வல்லுநர்கள்.சுயசார்பை சாத்தியப்படுத்தச் சிறு, குறு தொழில்முனைவோர்களுக்கு அரசின் உதவி தேவை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: