கொரோனா வைரஸ்: சீனாவுக்கு ஏற்படும் அழுத்தம் இந்தியாவுக்கான தொழில் வாய்ப்பாக மாறுமா?

  • நிகில் இனாம்தார்
  • பிபிசி
கோவிட் 19: சீனாவுக்கு ஏற்படும் அழுத்தம் இந்தியாவுக்கான தொழில் வாய்ப்பாக மாறுமா?

பட மூலாதாரம், Getty Images

உலக நாடுகளின் உற்பத்தி மையமாக விளங்கி வந்த சீனாவின் ஆதிக்கத்தை கொரோனா வைரஸ் பாதிப்பு சீர்குலைக்கத் தொடங்கியுள்ளதால், அந்த நாடு பெரும் பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.

இந்த சூழ்நிலையை தனக்கான வாய்ப்பாக கருதும் அண்டை நாடான இந்தியா, சீனாவிலிருந்து வெளியேறும் தொழில் வாய்ப்புகளை கவரும் பணியில் தீவிரம் காட்டி வருகிறது.

உலக நாடுகள் மத்தியில் சீனாவின் நிலை இந்தியாவுக்கு அதிக முதலீட்டை ஈர்ப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தந்துள்ளதாக இந்தியப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறினார். பிரேசிலுக்கு இணையான மக்கள் தொகை கொண்ட வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசம், சீனாவிலிருந்து வெளியேற திட்டமிட்டுள்ள நிறுவனங்களை ஈர்க்க ஏற்கனவே ஒரு பொருளாதார பணிக்குழுவை உருவாக்கத் தொடங்கிவிட்டது.

அதே சமயம், சீனாவிலிருந்து வெளியேற விரும்பும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆயிரம் பன்னாட்டு நிறுவனங்களை இந்தியா அணுகியுள்ளதாக ப்ளூம்பெர்க் செய்தி வெளியிட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

இந்திய அரசாங்கத்தின் தேசிய முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனமான இன்வெஸ்ட் இந்தியாவின் தலைமை நிர்வாகி தீபக் பாக்லா பிபிசியிடம் பேசும்போது, "இது ஒரு தொடர்ச்சியான செயலாகும்" என்று கூறினார். "சீனாவிலிருந்து முதலீட்டை திரும்ப பெற விரும்பும் நிறுவனங்களின் முடிவை விரைந்து தீர்மானிக்க கோவிட்-19 வழிவகை செய்யும்" என்று அவர் கூறினார்.

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான முதலீடுகளை அதிகரிப்பதற்காக செயல்படும் ஒரு சக்தி வாய்ந்த குழுவான யு.எஸ்-இந்தியா வர்த்தக அமைப்பு (யு.எஸ்.ஐ.பி.சி), இந்தியா தனது முன்னெடுப்புகளை ஏற்கனவே தீவிரப்படுத்திவிட்டதாக கூறுகிறது.

"மத்திய மாநில அரசு மட்டத்தில் விநியோகச் சங்கிலிகளை ஈர்ப்பதற்கான முயற்சிகளுக்கு இந்தியா முன்னுரிமை அளிப்பதை நாங்கள் காண்கிறோம்" என்று யு.எஸ்.ஐ.பி.சியின் தலைவரும், அமெரிக்க வெளியுறவுத்துறையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முன்னாள் உதவிச் செயலாளருமான நிஷா பிஸ்வால் பிபிசியிடம் தெரிவித்தார்.

"இந்தியாவில் ஏற்கனவே தொழிற்சாலைகளை கொண்டுள்ள நிறுவனங்கள் சீனாவிலுள்ள தங்களது ஆலைகளின் உற்பத்தியைக் குறைத்து, இந்தியாவில் உற்பத்தியை அதிகரிக்க தொடங்குவது இதன் அறிகுறியாக கருதப்படலாம். 

ஆனால் இவை அனைத்தும் இன்னும் ஒரு மதிப்பீட்டு கட்டத்திலேயே உள்ளன.எனவே, இறுதி முடிவுகள் அவசரமாக எடுக்கப்பட வாய்ப்பில்லை என்று அவர் மேலும் கூறினார்.

"நகர்வுகளை மேற்கொள்ளும் என்று கருதப்படும் நிறுவனங்கள் பலவும், கொரோனா வைரஸ் பாதிப்பால் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எனவே, இந்த நிறுவனங்கள் விரைந்து நடவடிக்கை எடுப்பதில் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்று கூறுகிறார் பொருளாதார வல்லுநரான ரூபா சுப்ரமண்யா.

சீன சந்தையை நீண்டகாலமாக கண்காணித்து வருபவரும், பைனான்சியல் டைம்ஸின் ஹாங்காங் பணியகத்தின் முன்னாள் தலைவருமான ராகுல் ஜேக்கப், "இந்திய அரசு தொழிற்சாலைகளை அமைப்பதற்கான நிலத்தை அளிக்க முன்வருவது சரியான அணுகுமுறையாகத் தெரிந்தாலும், வெறும் நிலத்தை மட்டும் அளிப்பதால் பெரும் நிறுவனங்கள் இந்தியாவுக்கு செல்லும் என்று கூற முடியாது" என்று கூறுகிறார்.

"உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலிகள் ஆகியவற்றுக்கிடையேயான தொடர்பு நாம் நினைப்பதை விட மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை ஒரே இரவில் மேம்படுத்துவது என்பது இயலாத காரியம்."

"பெரிய துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், திறன்வாய்ந்த தொழிலாளர்கள் மற்றும் அதிநவீன தளவாடங்கள் போன்ற ஒருங்கிணைந்த உள்கட்டமைப்பை சீனா வழங்குகிறது. பன்னாட்டு நிறுவனங்களின் காலக்கெடு அடிப்படையிலான செயல்பாட்டு முறையில் மேற்குறிப்பிடப்பட்ட காரணிகள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவை."

பன்னாட்டு நிறுவனங்களுக்கான வெளிப்படையான தேர்வாக இந்தியா இருக்காது என்பதற்கான மற்றொரு காரணம், இந்தியா உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நன்கு ஒருங்கிணைக்கப்படவில்லை என்பதே ஆகும்.

பட மூலாதாரம், Getty Images

கடந்த ஆண்டு ஏழு ஆசிய நாடுகளுடனான ஒரு முக்கியமான பன்முக வர்த்தக ஒப்பந்தத்திலிருந்து இந்தியா விலகியது. இதன் மூலம், கடந்த ஏழு ஆண்டுகாலமாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் வீணாகின. இதுபோன்ற முடிவுகள் இந்திய ஏற்றுமதியாளர்கள் அண்டை நாடுகளில் தங்களது பொருட்களை சந்தைப்படுத்துவதற்கான வாய்ப்பை கடினமாக்குகிறது.

சிங்கப்பூரில் விற்பனை செய்ய வேண்டிய பொருளொன்றை நான் ஏன் இந்தியாவில் உற்பத்தி செய்ய வேண்டும்? தொழில் நிறுவனங்களுக்கு சலுகை 

அளிப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவுக்கு பிராந்திய அளவில் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் வலுவாக இருப்பதும் மிகவும் முக்கியம்" என்கிறார் தி பியூச்சர் ஏசியன் புத்தகத்தின் ஆசிரியரான பராக் கன்னா.

இந்தியாவின் நிலையற்ற அந்நிய நேரடி முதலீட்டு கொள்கைகளும், முறையற்ற ஒழுங்குமுறைகளும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு பிரச்சனை தரும் 

ஒன்றாக தொடர்ந்து இருந்து வருகிறது.

இந்தியா இல்லையென்றால் வேறெந்த நாட்டுக்கு வாய்ப்பு?

பட மூலாதாரம், Getty Images

சீனாவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவை பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு இந்தியாவுக்கு அடுத்து அதிகபட்சமாக தென் கொரியா, தைவான் உள்ளிட்ட நாடுகளுக்கும், அடுத்ததாக வியட்நாம், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கும் உள்ளதாக கூறுகிறார் ஜேக்கப்.

அதிகரித்துவரும் தொழிலாளர் மற்றும் இதர செலவுகள் காரணமாக பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து உற்பத்தியை இந்த நாடுகளுக்கு கடந்த பத்தாண்டுகளாகவே நகர்த்தத் தொடங்கிவிட்டன. இந்த இடப்பெயர்வை சமீப ஆண்டுகளாக நிலவி வரும் அமெரிக்கா சீனா வர்த்தகப்போர் தீவிரப்படுத்திவிட்டதாக தெரிகிறது.

வர்த்தகப் போர் தொடங்குவதற்கு ஒரு மாதம் முன்னர், அதாவது 2018ஜூன் மாதம் முதலே அமெரிக்காவுக்கான வியட்நாமின் ஏற்றுமதி 50 சதவீதமும், அமெரிக்காவுக்கான தைவானின் ஏற்றுமதி 30 சதவீதமும் உயர்ந்தது என்று சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்தித்தாளின்கணக்கீடுகள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் சந்தைக்கு மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒரு உற்பத்தி தளமாக தன்னை நிலைநிறுத்திக்கொள்ளும் முந்தைய வாய்ப்புகளை இந்தியா தவறவிட்டுவிட்டது. இதற்கு பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஏற்ற சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுக்காததே காரணம்.

சமீப வாரங்களில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் தொழில் புரிவதை எளிதாக்குவது தொடர்பான சில கவலைகளை நிவர்த்தி செய்ய தொடங்கியுள்ளன.

உதாரணமாக, உத்தரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் தொழிற்சாலைகளில் தூய்மை, காற்றோட்டம் மற்றும் கழிப்பறைகள் போன்ற அடிப்படைத் தேவைகளைப் பராமரிப்பதில் இருந்து விலக்கு அளித்துள்ளன. இதன் மூலம், முதலீட்டுக்கான சூழ்நிலையை மேம்படுத்தி, பன்னாட்டு நிறுவனங்களை ஈர்க்க முடியுமென்று அந்த மாநில அரசுகள் நம்புகின்றன.ஆனால் இதுபோன்ற முடிவுகள் உதவுவதைக் காட்டிலும் எதிர்மறையாகவும், பிரச்சனையை ஏற்படுத்தக்கூடியதாகவும் மாறக்கூடும் என்று ஜேக்கப் கருதுகிறார். "பன்னாட்டு நிறுவனங்கள் இதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்கும். அவை தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் பராமரிப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு உள்ளிட்டவற்றில் கடுமையான நடத்தை நெறிமுறைகளைக் கொண்டுள்ளன."

வால்மார்ட் போன்ற சில்லறை விற்பனையாளர்களுக்கு ஆடைகளை ஏற்றுமதி செய்த வங்கதேசத்தில் உள்ள ராணா பிளாசா ஆடை தொழிற்சாலை கடந்த 2013ஆம் ஆண்டு சரிவுக்கு உள்ளானது ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்த வீழ்ச்சி, வங்கதேசத்தை அதிக முதலீட்டைப் பெறுவதற்கு தொழிற்சாலை உள்கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பை கணிசமாக மேம்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உட்படுத்தியதாக அவர் எச்சரிக்கிறார். எனவே, இந்தியா சிறந்த தரக்கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது அவசியமாகிறது.

சீனாவுக்கு எதிரான வர்த்தக கட்டுப்பாடுகளை இறுதிசெய்யும் கட்டத்தை அமெரிக்கா எட்டியுள்ள நிலையில், ஜப்பான் தமது நாட்டை சேர்ந்த நிறுவனங்கள் சீனாவை விட்டு வெளியேற நிதியுதவி அளித்து வருவது, சீன தொலைத் தொடர்பு நிறுவனமான ஹுவாவே தங்களது நாட்டின் புதிய 5ஜி வலையமைப்பை உருவாக்க அனுமதிக்கும் முடிவை மறுபரிசீலனை செய்ய இங்கிலாந்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அழுத்தம் கொடுப்பது ஆகியவை உலகமெங்கும்சீனாவுக்கு எதிரான மனநிலை அதிகரித்து வருவதை காட்டுகிறது.

இந்தியா தனது கட்டமைப்பில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கும், உலகத்துடனான அதன் வர்த்தக உறவை மாற்றியமைப்பதற்கும் இந்த பரந்த புவிசார் அரசியல் மாற்றங்களைப் பயன்படுத்தி கொள்வதற்கான நேரம் கனிந்துள்ளதாக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: