மோதி, காஷ்மீர் குறித்த அஃப்ரிடியின் கருத்து: பதிலடி தந்த இந்திய வீரர்கள்

நரேந்திர மோடி

பட மூலாதாரம், Getty Images

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி சமீபத்தில் ஒரு காணொளியில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மதக் காரணங்களுக்காக காஷ்மீரை சரியாக கையாளவில்லை என கூறியிருந்தார். இந்த காணொளி வைரலானது.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் தங்களது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

இந்திய அணியின் முன்னாள் வீரர் மற்றும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினரான கெளதம் கம்பீர், அஃப்ரிடியின் இந்த கருத்துக்கு பதிலளிக்கும் விதமாக, "பாகிஸ்தானில் 20 கோடி மக்கள் ஆதரவுடன் 7 லட்சம் படை வீரர்கள் இருக்கின்றனர் என்கிறார் அஃப்ரிடி. ஆனால் 70 ஆண்டுகளாக காஷ்மீரைக் கேட்டு கொண்டேதான் உள்ளனர். இம்ரான்,அஃப்ரிடி பேஜ்வா போன்றவர்கள் இந்தியா மற்றும் இந்திய பிரதமர் மோதிக்கு எதிராக பாகிஸ்தான் மக்களை ஏமாற்ற அவர்கள் மனதில் விஷத்தை விதைக்கலாம். ஆனால் இதற்கு நிரந்தர தீர்ப்பு நாள் வரும் வரை காஷ்மீரை கைப்பற்ற முடியாது. வங்க தேசம் குறித்து நினைவுள்ளதா?" என டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதேபோல் இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங், "இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் மீதான அஃப்ரிடியின் இந்த கருத்து வருத்தத்தைத் தருகிறது. நாட்டிற்காக விளையாடிய வீரர் என்ற முறையில் இந்த கருத்தை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் மனிதாபிமானத்தை கருதி இப்போது பொறுத்து கொள்கிறேன். இன்னொரு முறை இது தொடர வேண்டாம்" என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

யுவராஜ் சிங்கின் கருத்தை ரீடிவீட் செய்து ஆமாம் என்ன ஆனாலும் மறுபடி இதை மீண்டும் செய்யாதே என பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங்.

இதைத் தொடர்ந்து ஷிகார் தவான் மற்றும் சுரேஷ் ரெய்னாவும் டிவிட்டரில் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளனர்.

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகார் தவான், "உலகம் தற்போது கொரோனா வைரஸுடன் போராடி வருகிறது. இப்போது உங்களுக்கு காஷ்மீர் முக்கியமாகபடுகிறதா? காஷ்மீர் எங்களுடையதாக இருந்தது, இருக்கிறது, இனியும் இருக்கும். 22 கோடி பேரை அழைத்து வருவதென்றாலும் அழைத்து வா. எங்களில் ஒருவர் 15 லட்சம் பேருக்கு சமம். மிச்சத்தை நீயே கணித்துக்கொள்" என தனது டிவிட்டர் பக்கத்தில் அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலளித்திருந்தார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா " அவரவர் வேலையை அவரவர் பார்க்க வேண்டும். அதுவும் கொடை தேவைப்படும் நாட்டில் முக்கியமாக அப்படி இருக்க வேண்டும். அதனால் உங்கள் தோல்வியடைந்த நாட்டுக்கு உங்களால் செய்ய முடிந்ததை செய்யுங்கள் காஷ்மீரை விட்டுவிடுங்கள். நானும் ஒரு காஷ்மீரி என்று பெருமையாக கூறுகிறேன் மேலும் காஷ்மீர் இந்திய நாட்டின் ஒரு முக்கிய அங்கமாக இருக்கிறது,இருக்கும்" என அஃப்ரிடியின் கருத்துக்கு பதிலளித்துள்ளார்.

ஆனால் காஷ்மீரைப் பற்றி அஃப்ரிடி பேசுவது இது முதல் முறையல்ல.

கடந்த வருடம் அவர் எல்லைக் கட்டுபாட்டு பகுதியை சென்று பார்த்தபோதும் இந்தியா காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்த்தை நீக்கப்பட்டது குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: