தமிழக முதல்வர் கடிதம்: ’விவசாயிகளை பாதிக்கும்’ நரேந்திர மோதி அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் எதிர்ப்பு

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான சில முக்கியச் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்

தினத்தந்தி - நரேந்திர மோதி அரசின் முடிவுக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு

விவசாயிகளுக்கு வழங்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் மத்திய அரசின் யோசனையை கடுமையாக எதிர்க்கிறோம் என்று பிரதமருக்கு, தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார் என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோதிக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தில், ஐந்துவித பொருளாதார நிவாரண தொகுப்பை அறிவித்த தங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இந்திய பொருளாதாரத்தை புதுப்பிக்க இது உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமியின் கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளது என்ன?

பட மூலாதாரம், Getty Images

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டம், மாவட்ட மருத்துவமனைகளில் தொற்று நோய்கள் பிரிவுகள் ஏற்படுத்துதல், வட்டார அளவில் பொது சுகாதார பரிசோதனைக் கூடங்கள் அமைத்தல் ஆகியவற்றுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்திருப்பது, அதில் முக்கிய அம்சங்களாகும்.

இது சில பிரிவுகளுக்கு பயனுள்ளதாக அமைந்திருப்பதை வரவேற்கும் அதே நேரத்தில், மாநில அரசுகள் கூடுதலாக கடன்பெறும் வரம்பில் தேவையில்லாத கடுமையான நிபந்தனைகளை அங்கீகரித்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.

மாநில அரசுக்கு மிகப்பெரிய அளவிலான செலவுகள் உள்ளன. மாநில அரசுக்கு எதிர்காலத்தில் கிடைக்கும் வரி வருவாயை வைத்து, திரும்ப செலுத்துவதற்கு ஏற்ற கடனை பெற வேண்டியதுள்ளது. அவையெல்லாம் மத்திய அரசிடம் இருந்து வரும் மானியங்கள் அல்ல.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கூடுதல் கடன் பெற்று சீர்திருத்தங்கள் செய்யப்பட வேண்டிய நான்கு பெரிய அம்சங்களில், எந்த நிதியுதவியையும் எதிர்பார்க்காமல் மாநில அரசே சீர்திருத்தங்களை செய்திருக்கிறது. மின்சார பகிர்வுக்கான சீர்திருத்தங்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன.

மின்சார சட்டத்தில் கொண்டு வர முன்மொழியப்பட்ட மாற்றங்களில் உள்ள பிரச்சனைகள் பற்றி நான் ஏற்கனவே கருத்து கூறியிருக்கிறேன். விவசாயிகளுக்கு அளிக்கும் இலவச மின்சாரத்தை நிறுத்தும் யோசனையை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கிறது, என்று நரேந்திர மோதிக்கு எழுதிய கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

தினமணி - கொரோனா நிதிக்கு சைக்கிள் வாங்க வைத்திருந்த பணத்தை கொடுத்த சிறுமி

சைக்கிள் வாங்க வைத்திருந்த தொகையை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கிய சிறுமி மற்றும் அவரது சகோதரருக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ.செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை சைக்கிள்களை வழங்கினார்.

நாகை மாவட்டம், காமேஷ்வரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை. விபத்தில் ஒரு கையை இழந்த இவர் தற்போது நாகை மாவட்டக் காவலர் - நண்பர்கள் குழுவில் தன்னை இணைத்துக் கொண்டு கொரோனா விழிப்புணர்வுப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இவரது 10 வயது மகள் கனகா சைக்கிள் வாங்குவதற்காக தான் சேமித்து வைத்திருந்த ரூ. 2,210ஐ தமிழக முதல்வரின் கரோனா பொது நிவாரண நிதிக்கு, நாகை மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி. நாயரை அண்மையில் நேரில் சந்தித்து வழங்கினார்.

இந்நிலையில், காவல்துறை இயக்குநர் டாக்டர் பிரதீப் வி. பிலீப்( தமிழ்நாடு உணவுக் கடத்தல் தடுப்புப் பிரிவு) மற்றும் காவலர் - நண்பர்கள் குழு சார்பில் சிறுமி கனகா, அவரது சகோதரர் கோகுல் ஆகியோருக்கு நாகை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செ. செல்வநாகரத்தினம் திங்கள்கிழமை சைக்கிளை வழங்கி பாராட்டினார்.

இந்து தமிழ் திசை - விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கு

பட மூலாதாரம், NIKITA DESHPANDE

விழுப்புரம் மாணவி எரித்துக் கொல்லப்பட்ட வழக்கில் காவல் துறையின் விசாரணை திருப்தி என பெற்றோர்கள் தெரிவித்ததால் சிபிஐ விசாரணை கோரிய வழக்கு வாபஸ் பெறப்பட்டதை அடுத்து உயர் நீதிமன்றம் வழக்கை தள்ளுபடி செய்தது.

விழுப்புரத்தில் முன் பகை காரணமாக 15 வயது சிறுமி எரித்துக்கொல்லப்பட்டார். தமிழகத்தை உலுக்கிய இந்த வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர். சிறுமி குடும்பத்துக்கு தமிழக அரசு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கியது.

இந்நிலையில் சென்னை ஆவடியைச்சேர்ந்த சுமதி என்பவர் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ஆஜராகி, இந்த சம்பவம் தொடர்பாக தமிழக காவல்துறை விசாரணை திருப்திகரமாக இருப்பதாக அவரது பெற்றோர்கள் தொலைபேசி வாயிலாக தன்னிடம் தெரிவித்ததாக, தொலைபேசி எண்ணையும் குறிப்பிட்டு தெரிவித்து வழக்கை திரும்பப் பெறுவதாக குறிப்பிட்டார்.

இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: