நிர்மலா சீதாராமன் அறிவிப்புகள்: "உங்களை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள் என்கிறது மத்திய அரசு": ஜோதி சிவஞானம்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா நோய்த் தொற்றின் காரணமாக இந்தியப் பொருளாதாரம் பெரும் சவாலைச் சந்தித்திருக்கும் நிலையில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் அறிவிக்கப்பட்ட நிதிச் சலுகைகள் எத்தகையவை, தற்போதைய பிரச்சனைகளுக்கு அவை தீர்வாகுமா என்பதெல்லாம் குறித்து சென்னைப் பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறைத் தலைவர் ஜோதி சிவஞானத்திடம் பேசினார் பிபிசியின் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன். பேட்டியிலிருந்து இரண்டாம் பாகம்:

கே. இந்திய அரசு தற்போது அறிவித்துள்ள சீர்திருத்தங்கள் ஏற்கனவே நடந்துவரும் சீர்திருத்தங்களின் தொடர்ச்சிதானே?

ப. ஆமாம். இது தொடர்ந்து நடந்துவருவதுதான். 1991க்கு பிறகு, இந்தக் கொள்கைகளில் அரசுகள் ஒரே மாதிரிதான் செயல்படுகின்றன. ஆனால், ஒரு பெரிய மாற்றத்தை இந்த அரசு முன்வைத்திருக்கிறது. நிதியமைச்சர் மூன்றாவது நாளோ, நான்காவது நாளோ ஒரு கொள்கை அறிவிப்பை வெளியிட்டார். அதாவது, We will make people only empowered; no entitlements என்றார். இதுதான் பிரதமர் நரேந்திர மோதி அரசின் அடிப்படைத் தத்துவம். entitlement என்பது அமெர்தியா சென்னின் ஒரு கருதுகோள். அதாவது, கல்வி, சுகாதாரம் போன்ற அடிப்படை அம்சங்களை எல்லோருக்கும் கொடுக்க வேண்டும் என்பதுதான் இதன் மையம். ஆனால், இப்போது மத்திய அரசு மக்களுக்கு இந்த entitlements எதையும் தர மாட்டோம் என்கிறது.

இது இந்தியப் பொருளாதாரத்தில் இதுவரை இல்லாத மாற்றம். இதை யாரும் கவனிக்கவில்லை. இதை நிதியமைச்சர் முதல் நாளே சொல்லியிருந்தால், யாரும் கஷ்டப்பட்டு, அவர் அறிவித்திருந்த தொகையை பட்டியல் போட்டிருக்க மாட்டோம். 1950களில் இருந்து இந்தியப் பொருளாதாரம் எப்படி இருந்தது என்றால், 'வளர்ச்சி மற்றும் பலன்களை பரவலாக்குதல்' என்பதைத்தான் அடிப்படையாக வைத்திருந்தது. அதாவது பொருளாதாரம் வளர்ச்சி அடைய வேண்டும்; அதன் பலன் எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். இதுதான் இந்திய அரசின் அடிப்படைப் பொருளாதாரத் தத்துவமாக இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

இது ஓரளவுக்கு வெற்றியைக் கொடுத்தது. ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு பலன்கள் பரவலாகவில்லை. எல்லா மக்களுக்கும் எல்லாம் சென்று சேரவில்லை. 1991க்குப் பிறகு வளர்ச்சி விகிதம் அதிகமானாலும் பலன்கள் சென்று சேரவில்லை. "வேலைவாய்ப்பிலாத வளர்ச்சி" என்றெல்லாம்கூட சொல்லப்பட்டது.

இந்த நிலையில்தான், ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் முதல் ஆட்சிக் காலத்தில் மத்திய அரசு நேரடியாக இதில் தலையிட முடிவுசெய்தது. 100 நாள் வேலை வாய்ப்புத் திட்டம் கொண்டுவரப்பட்டது. எங்கேயுமே வேலை கிடைக்காதவர்கள், அரசிடம் பதிவுசெய்துகொண்டால், நூறு நாட்கள் வேலை என்பது குறைந்த பட்சக் கூலியுடன் தரப்படும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் அடிப்படை. வளர்ச்சியின் பலனை எல்லோருக்கும் தருவதென்பது இயலவில்லை; ஆகவே இதனை ஒரு உரிமையாக மாற்றுகிறோம் என அரசு அறிவித்தது.

இந்தியாவில் வேலை பார்க்கும் உரிமை என்பது அரசின் வழிகாட்டும் நெறிமுறைகளில் இருக்கிறது. ஆனால், அதற்காக நீதிமன்றத்திற்குச் செல்ல முடியாது. ஆனால், ஊரக வேலை வாய்ப்புத் திட்டம், இதனை எல்லா மக்களுக்கும் அடிப்படை உரிமையாக மாற்றியது.

இதே போல உணவுப் பாதுகாப்புக்கென, உணவு பாதுகாப்புச் சட்டம், கல்விக்கென சர்வ சிக்ஷா அபியான், சுகாதாரத்திற்கென நேஷனல் ரூரல் ஹெல்த் மிஷன் ஆகியவை தீட்டப்பட்டன. அந்தத் தருணத்தில் வளர்ச்சி இருந்ததால் அரசுக்கு போதுமான அளவுக்கு வரி வருவாய் இருந்தது. அந்த வரி வருவாயை வைத்து இந்த மெகா திட்டங்களை செயல்படுத்தினார்கள்.

பட மூலாதாரம், Getty Images

2014க்குப் பிறகு, இதெல்லாம் மாறியது. அந்தத் தேர்தல் பிரச்சாரத்தின்போது வளர்ச்சிதான் முக்கிய பிரச்சாரமாக இருந்தது. வளர்ச்சி விகிதம் கீழே செல்கிறது, ஊழல் அதிகரித்துவிட்டது என்றெல்லாம் பா.ஜ.க. தனது பிரச்சாரத்தை முன்வைத்தது. தாங்கள் இதையெல்லாம் மாற்றுவோம் என்றார்கள்.

ஆனால், வெற்றிபெற்று வந்த பிறகு, பொருளாதாரத்தில் கவனம் செலுத்தவில்லை. அரசியல் விவகாரங்களில் கவனம் செலுத்தினார்கள். கர் வாப்ஸி, யார் எந்த உணவைச் சாப்பிட வேண்டும் என்பனவற்றில் கவனம் செலுத்தினார்கள். 2016ல் பண மதிப்பிழப்பு நடவடிக்கையைச் செய்தார்கள். அதற்குப் பிறகு ஜி.எஸ்.டி. அறிமுகப்படுத்தப்பட்டது.

2019ஆம் ஆண்டு தேர்தலின்போது, பா.ஜ.க. அளித்த வளர்ச்சி வாக்குறுதி நிறைவேற்றப்பட்டதா என்ற விவாதம் வரவேண்டும் அல்லவா? ஆனால், அப்படி வரவில்லை. அரசியல் பிரச்சனைகளையே பேசினார்கள். பாகிஸ்தான் பற்றிப் பேசப்பட்டது. பிறகு ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரம் என்றார்கள். பிறகு 'அச்சே தின்' என்றார்கள். ஆனால், இவையெல்லாம் வளர்ச்சியை பகிர்ந்தளிப்பதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது.

பட மூலாதாரம், HINDUSTAN TIMES

ஐந்து ட்ரில்லியன் பொருளாதாரத்தால் யாருக்கு என்ன லாபம் என்பதைச் சொல்லவில்லை. பலன்களைப் பகிர்ந்தளிப்பதைப் பற்றிப் பேசவேயில்லை. இப்போது வெளிப்படையாகவே, வளர்ச்சியின் பலனை பகிர்ந்தளிக்க மாட்டோம் என சொல்லிவிட்டார்கள். நீங்களே உங்களைப் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். பசி என ஒருவர் வந்தால், மீனைக் கொடுக்க மாட்டோம்; மீன் பிடிப்பதை மட்டுமே கற்றுக்கொடுப்போம் என சொல்லிவிட்டார்கள். சாதாரண சூழலில் இதனை ஏற்கலாம். ஆனால், இன்று உள்ள நிலை ரொம்பவும் சிக்கலானது.

ஒருவர் ஆழமான சாக்கடையில் விழுந்துவிட்டார்; உதவி கேட்கிறார். அப்போது, நீங்கள்தான் எழுந்து நிற்கக் கற்றுக்கொண்டு, எழுந்து நிற்க வேண்டுமெனச் சொல்ல முடியுமா? அந்தத் தருணத்தில் கைகொடுத்துத் தூக்கிவிட வேண்டும். Entitlement என்றால் அதுதான். தவிர, இதில் நீதி என்ற அம்சமும் இருக்கிறது. அதாவது, அந்த நபரை சாக்கடையில் தள்ளிவிட்டதே நீங்கள்தான் என்றால்? அவருக்கு உதவ வேண்டிய தார்மீக கட்டாயம் இருக்கிறது.

இந்த வெளி மாநில தொழிலாளர்களை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்கள் யாரும் பணம் கேட்கவில்லை. இவர்கள் இந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதே அரசுக்குத் தெரியாது. ஆனால், அவர்கள் இந்த நிலைக்கு தள்ளப்பட்டதே அரசின் ஊரடங்கு அறிவிப்பால்தான். எந்தத் தயாரிப்பும் இல்லாமல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. மக்களுக்கு நான்கு மணி நேரம்தான் அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த நிலையில்தான் வெளிமாநில தொழிலாளர்கள் நடந்தே போக முடிவுசெய்கிறார்கள். நம்மால் ஒரு 200 கி.மீ. நடந்து போவதை கற்பனையாவது செய்ய முடிகிறதா?

அவர்கள் தங்கள் சுய மரியாதையை இழந்துவிட்டு, உணவுக்காக மற்றவர்களைச் சார்ந்திருக்க வேண்டியிருக்கிறது. இதற்கு முன்னால், அவர்கள் யாரிடமாவது உணவு கேட்டிருக்கிறார்களா? பணம், போக்குவரத்து கேட்டார்களா? அவர்களை இம்மாதிரி நிலைக்கு ஆளாக்கியதே நீங்கள்தான். இப்போது அவர்கள் தங்கள் கால்களில்தான் நிற்க வேண்டுமென்றால், எப்படி?

கடந்த 70 ஆண்டுகளாக நாம் கடைப்பிடித்துவந்த அரசியல் பொருளாதாரக் கொள்கைகளிலிருந்து நேர் எதிர்மறையான நிலைப்பாட்டை அரசு தற்போது எடுத்திருக்கிறது.

கே. இந்தத் தருணத்தில் பல மாநில அரசுகள் தங்கள் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்த ஆரம்பித்திருக்கின்றன..

ப. சர்வதேச தொழிலாளர் அமைப்பு, ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம்தான் வேலை என வகுத்துள்ளது. இப்போது அதைத் திருத்தி 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும் என்கிறார்கள். தொழிலாளர்களுக்கென இருந்த 44 சட்டங்களையும் நீக்குகிறார்கள். இந்தச் சட்டங்களில் தொழிலாளர்களின் பாதுகாப்பிற்கு சில விஷயங்களைச் சொல்லியிருக்கிறார்கள்.

இவற்றையெல்லாம் நீக்குகிறார்கள். பிரதாப் பானு மேத்தா என்ற அறிஞர் இதனைக் காட்டுமிராண்டித் தனம் என்கிறார். உழைப்பவர்களுக்கு எந்த பாதுகாப்பும் கிடையாது. 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். எப்போது வேண்டுமானாலும் வேலையைவிட்டுத் தூக்குவேன். தொழிலாளர்கள் நடுங்கிக்கொண்டு வேலை செய்வார்கள். இதையெல்லாம் ஒரு சீர்திருத்தமென இந்த நேரத்தில் கொண்டுவருகிறார்கள்.

அதேபோல, நிலச் சீர்த்திருத்தம், தொழிலாளர் நல சீர்திருத்தம் எனச் சொல்கிறார்கள். இதையெல்லாம் நாடாளுமன்றத்தில் வைத்து செய்யலாமே.. இதையெல்லாம் எதிர்க்கட்சிகளை, தொழிற்சங்கங்களை அழைத்து விவாதிக்க வேண்டாமா? சாதாரண நேரத்தில் செய்யமுடியாத சீர்திருத்தங்களை இந்த நேரத்தில் செய்துகொள்ளலாம் என அரசு நினைக்கிறதா? இந்தச் சிக்கலை, ஒரு வாய்ப்பாகக் கருதுகிறதா என்ற சந்தேகம் வருகிறது.

கே. ஒரே மாதிரியான கல்வி, ஒரே ரேஷன் கார்டு, மின்சார மானியம் ரத்துக்கு வலியுறுத்தல் என பல விஷயங்களை இந்தத் தருணத்தில் மத்திய அரசு வலியுறுத்துகிறது... இது கூட்டாட்சித் தத்துவத்திற்கு பொருத்தமானதா?

பட மூலாதாரம், Getty Images

ப. இதையெல்லாம் இவர்கள் முயற்சிக்கிறார்கள். ஆனால், வெற்றிகிடைக்காது. மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய நிதியைக் குறைத்துக் கொடுக்கிறார்கள். அவற்றில் பாதி தொகையையாவது மொத்தமாகக் கொடுங்கள் என்றால், 14 தவணைகளாகத்தான் கொடுப்போம் என்கிறார்கள். இப்போது மாநிலங்களிடம் எந்த நிதியும் இல்லை. தமிழ்நாட்டிற்கு மாதத்திற்கு 11 ஆயிரம் கோடி ரூபாய் வரி வருவாய் வர வேண்டும். எதுவும் வரவில்லை.

ஜி.எஸ்.டி. வரி வருவாயில் ஜனவரி, பிப்ரவரி, மார்ச் மாதங்களுக்கென மாநிலங்களுக்குக் கொடுக்க வேண்டிய தொகையைக் கொடுக்கவில்லை. ஜிஎஸ்டி வருவாய் குறைந்தால், அதை ஈடுகட்ட தொகை அளிப்போம் என்றார்கள். அதை இன்னும் தரவில்லை. மத்திய அரசின் வரி வருவாயே கடந்த ஆண்டு 5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு குறைந்துபோனது.

ஆக மாநிலங்களுக்கும் 42 சதவீதம் குறையும். இந்த ஆண்டு 6 லட்சம் கோடி அளவுக்கு வரி வருவாய் குறையும். இது தவிர, 12 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்குகிறார்கள். அதாவது, மத்திய அரசு தனது செலவை கடன் வாங்கி செலவழிக்கும். ஆனால், மாநிலங்களுக்கு ஏற்பட்ட இழப்பை கொடுக்க மாட்டார்கள். இது மாநிலங்களின் நிலைமையை மிக மோசமாக்கும்.

மாநிலங்கள் தங்களுடைய நிதிப் பற்றாக்குறையை 3 சதவீதம்தான் வைத்திருக்க வேண்டுமென கட்டுப்பாடு இருக்கிறது. இதனை ஐந்து சதவீதமாக்க வேண்டுமென அவை கோரிவருகின்றன. ஆனால், தானாகவே இது ஐந்து சதவீதமாகப் போகிறது. காரணம், இந்த 3 சதவீதம் என்பது மாநில உள்நாட்டு உற்பத்தியில் மூன்று சதவீதம். இப்போது மாநில உள்நாட்டு உற்பத்தி குறையும்போது, தானாகவே கடன் விகிதம் ஐந்து சதவீதமாகிவிடும். ஆகவே 3 சதவீதத்திலேயே கடன் இருக்க வேண்டுமென்றால், மாநிலங்கள் கடனை குறைத்து வாங்க வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

இதெல்லாம் தெரிந்துகொண்டுதான், மத்திய அரசு கடன் விகிதத்தை அதிகரிக்க நான்கு நிபந்தனைகளை முன்வைக்கிறது. இவர்கள் என்ன உலக வங்கி அல்லது பன்னாட்டு நிதியமா? இத்தனைக்கும் மத்திய அரசு கடன் கொடுக்கவில்லை. கடனை அதிகப் படுத்த அனுமதி மட்டுமே அளிக்கிறார்கள். அதற்கே இந்த 4 நிபந்தனை. இதில் ஒரு நிபந்தனைதான் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் அளிக்கக்கூடாது என்பது. ஆனால், மாநிலங்கள் இவற்றை ஏற்கின்றனவோ இல்லையோ, கடன் ஐந்து சதவீதத்திற்கு மேல் போகப்போவது உறுதி.

இன்றைக்கு கொரோனாவைக் கட்டுப்படுத்தும் பணியில் முன்னணியில் நின்று போராடுபவை மாநிலங்கள்தான். இதற்கென சிறப்பு நிதியாக மத்திய அரசு எதையும் தரவில்லை. பேரிடர் மேலாண்மை நிதி என்பது, நிதிக் குழு கொடுத்தது. மாநிலங்கள் எல்லா வருவாயையும் இந்த நோயை எதிர்ப்பதில் செலவழித்துக்கொண்டிருக்கின்றன. வருவாய் குறைந்துவிட்டது. செலவு அதிகரித்துவருகிறது. ஆனால், உதவி ஏதும் செய்யாமல் தினமும் கட்டுப்பாடுகளை மட்டும் விதித்துவருகிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: