கொரோனா வைரஸ்: காங்கிரஸின் உதவிக்கு உ.பி. அரசு மறுப்பு: ராஜஸ்தான் திரும்பிய பேருந்துகள்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அமல்படுத்தப்பட்ட முடக்க நிலையின் காரணமாக உத்தரப்பிரதேசத்தில் சிக்கி தவித்து வரும் புலம்பெயர் தொழிலாளர்களை மீட்க காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்த பேருந்துகளுக்கு உத்தரப்பிரதேச அரசு அனுமதி மறுத்ததால் அவை மீண்டும் ராஜஸ்தானுக்கு திரும்பின.

"உத்தரப்பிரதேசத்தின் எல்லைகளில் காத்திருந்த பேருந்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. எனவே, அவை மீண்டும் திரும்புகின்றன” என்று ராஜஸ்தானில் உள்ள சிக்சனா காவல்நிலையத்தின் காவலர் சர்வன் பதக் நேற்று மாலை கூறியதாக பிடிஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

பின்னணி என்ன?

உத்தரப்பிரதேசத்தில் ஆங்காங்கே சிக்கியிருக்கும் வெளிமாநிலத் தொழிலாளர்களை அவர்களது ஊர்களுக்குக் கொண்டுசேர்க்க ஆயிரம் பேருந்துகளைத் தருவதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி மூன்று நாட்களுக்கு முன்பாக அறிவித்தார்.

இதனை ஏற்றுக்கொண்ட உ.பி. அரசு, ஆயிரம் பேருந்துகள் பற்றிய விவரங்களைத் தரும்படி சொன்னது. பிறகு, அந்தத் தகவலை காங்கிரஸ் தங்களுக்குத் தரவில்லை என அரசு குற்றம்சாட்டியது. ஆனால், பேருந்து, அதன் ஓட்டுநர் உள்ளிட்ட விவரங்கள் திங்கட்கிழமை இரவே உ.பி. அரசிடம் தரப்பட்டுவிட்டதாக பிரியங்காவின் செயலர் சந்தீப் சிங் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

பிபிசியிடம் பேசிய காங்கிரஸ் சட்டப்பேரவை உறுப்பினர் மிஸ்ரா, “நாங்கள் பேருந்துகளை அனுப்பிவிட்டோம். பேருந்துகள் அனுமதிக்காக ஆக்ராவில் காத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால், ஆக்ரா நிர்வாகம் மேலிடத்திலிருந்து இன்னும் உத்தரவு வரவில்லை என்கிறது,” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில்தான் பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்பும்படி உத்தரப் பிரதேச அரசு கூறியது. ஆனால், சம்பந்தமே இல்லாமல் பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்ப காங்கிரஸ் மறுத்துவிட்டது. மேலும், தேவையில்லாமல் பேருந்துகளை லக்னோவுக்கு அனுப்பச் சொல்லாதீர்கள் என கண்டனம் தெரிவித்து கடிதம் ஒன்றும் மாநில கூடுதல் தலைமைச் செயலருக்கு அனுப்பப்பட்டது.

பாரதிய ஜனதா கட்சி இந்த விவகாரத்தில் அரசியல் செய்வதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது. இதையடுத்து, காசியாபாதுக்கும் நொய்டாவுக்கும் 500 பேருந்துகளை அனுமதிப்பதாக கூடுதல் தலைமைச் செயலர் அவினேஷ் அவஸ்தி கூறினார்.

பேருந்துகளை சோதனை செய்தே பிறகே, அதாவது பேருந்தில் ஆர்.சி, இன்சுரன்ஸ் ஆகிய அனைத்தையும் சோதனை செய்த பிறகே அனுமதிப்போம் எனக் கூறியது.

இந்த சூழலில், காங்கிரஸ் மீது ஒரு குற்றச்சாட்டை சுமத்தியது பாரதிய ஜனதா கட்சி. பேருந்தின் எண்கள் போலியானவை. சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களுடையவை என்று கூறியது.

அமைச்சர் சித்தார்த்நாத் சிங், “ஒரு அதிர்ச்சிகரமான விஷயத்தை நாங்கள் கண்டுபிடித்தோம். காங்கிரஸ் அனுப்பிய பல வாகனங்களின் எண்கள் போலியானவை,” என்றார்.

சில பேருந்துகளில் இதுபோல மாறுபாடுகள் இருக்கலாம் என்பதால்தான் ஆயிரம் பேருந்துகளுக்குப் பதிலாக 1,100 பேருந்துகளை தாங்கள் அனுப்புவதாகவும் வேண்டுமென்றே பா.ஜ.க. இதில் அரசியல் செய்வதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

நேற்று முன்தினம் இது தொடர்பாக பிரியங்கா காந்தி வெளியிட்டிருக்கும் ட்விட்டர் குறிப்பில், "காங்கிரஸ் ஏற்பாடு செய்த 1049 பேருந்துகளில் 879 பேருந்துகளின் சான்றிதழ்கள் சரியானவை எனத் தெரியவந்துள்ளது. இருந்தபோதும் உ.பி. நிர்வாகம் ஐநூறுக்கும் மேற்பட்ட பேருந்துகளை ஆக்ரா எல்லையில் நிறுத்தியுள்ளது. சான்றிதழ் சரியாக உள்ள 879 பேருந்துகளை உள்ளே அனுமதியுங்கள். மேலும் 200 பேருந்துகளையும் சான்றிதழ்களையும் நாளை அனுப்புகிறோம்" என்று கூறியிருந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :