அரசுச் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க தமிழக அரசு உத்தரவு - முக்கிய அறிவிப்புகள் என்ன?

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக மாநில அரசின் வரி வருவாய் கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதால், அரசின் செலவினங்களைக் கடுமையாகக் குறைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசாணைகளும் வெளியிடப்பட்டுள்ளன.

கொரோனாவின் காரணமாக மாநிலத்தின் வரி வருவாய் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதம் மேற்கொள்ளப்பட்ட நிதிநிலை அறிக்கையை அப்படியே நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

அதே சமயம் நோயைத் தடுப்பது, சிகிச்சை அளிப்பது போன்றவற்றுக்கான செலவுகள் வெகுவாக அதிகரித்துள்ளன. இந்த நிலையில், சூழலை ஆராய்ந்து நிதிச் சிக்கலை முடிந்த அளவுக்கு குறைக்கப் பார்ப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதன் மூலம் நலத் திட்டங்கள், முதலீட்டுச் செலவுகள் ஆகியவற்றின் மூலம் பொருளாதாரம் மேம்படுமென நம்புவதாகவும் மாநில அரசு தெரிவித்திருக்கிறது.

இதன் ஒரு பகுதியாக, எந்தச் செலவுகளையெல்லாம் குறைக்கலாமோ அவற்றைக் குறைப்பதற்கு மாநில அரசு முடிவெடுத்துள்ளது. இதன்படி ஒவ்வொரு துறையிலும் எவ்வளவு நிதி குறைப்பு இருக்குமென தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், WIKI

1. அலுவலகச் செலவுகள் மற்றும் இதர அவசரச் செலவுகள்: ஒட்டுமொத்தமாக 20 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்படும்.

2. அலுவலகங்களுக்கான ஃபர்னிச்சர்களை வாங்குவது: இதில் 50 சதவீதம் குறைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. புதிய அலுவலகங்கள் அமைப்பது போன்ற அத்தியாவசிய செலவுகளைத் தவிர பிற செலவுகளைச் செய்யக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது.

3. விளம்பரச் செலவுகள், அச்சகச் செலவு: 25 சதவீதம் அளவுக்குக் குறைக்கப்படும்.

4. உபசாரச் செலவுகள்: அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் அலுவல்பூர்வமான மதிய விருந்து, இரவு விருந்து ஆகியவை ரத்துசெய்யப்படுகின்றன. இந்தப் பிரிவில் 50 சதவீதம் அளவுக்கு செலவுகளைக் கட்டுப்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

5. வாகனங்கள் வாங்குவது: புதிதாக வாகனங்களை வாங்கத் தடை விதிக்கப்படுகிறது. ஆம்புலன்ஸ்கள், போலீஸ் வாகனங்கள், தீயணைப்பு வாகனங்கள், விவிஐபிகளுக்கான வாகனங்களுக்கு விதிவிலக்கு உண்டு. இந்த ஆண்டில் இந்தச் செலவினங்களில் 50 சதவீதம் குறைக்கப்படும்.

6. பயிற்சிகள்: கொரோனாவுக்குத் தேவையான பயிற்சிகள் தவிர, பிற பயிற்சிகள் அனைத்தும் கைவிடப்பட வேண்டும். இதில் 50 சதவீதம் சேமிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

7. கம்ப்யூட்டர்கள் வாங்குவது: புதிதாக கம்ப்யூட்டர்கள் வாங்குவது அனுமதிக்கப்படமாட்டாது. உடைந்த கம்ப்யூட்டர்களுக்குப் பதிலாக மட்டும் புதிதாக வாங்கலாம். இந்தப் பிரிவில் 25 சதவீதம் சேமிக்க உத்தரவு.

8. பயணப் படி, தினசரிப் படி: அரசு அதிகாரிகள் தேவையான செலவுகளை மட்டுமே செய்ய வேண்டும். வெளிநாட்டுப் பயணங்களுக்கு அனுமதி இல்லை. வழக்கமான கூட்டங்களை வீடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்தலாம். மாநிலத்திற்குள் அதிகாரிகள் விமானப் பயணங்களை மேற்கொள்ளக்கூடாது. மாநிலங்களுக்கு வெளியிலும் விமானப் பயணங்களை மேற்கொள்ளக்கூடாது. புதுதில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் உறைவிட ஆணயரே அங்கு நடக்கும் கூட்டங்களில் கலந்துகொள்ள வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது. எந்த அதிகாரியும் விமானங்களில் எக்ஸிக்யூட்டிவ் வகுப்பில் பயணிக்கக்கூடாது.

தினசரிப் படியில் 25 சதவீதம் குறைக்கப்படுகிறது. பொதுவான இடமாறுதல்கள் நிறுத்திவைக்கப்படுகின்றன.

9. பயணங்கள்: எல்லாவிதமான பயணங்களும் நிறுத்தப்பட வேண்டும்.

மேலும், விழாக்களில் பரிசுப் பொருட்கள், பூக்கொத்துகள் கொடுப்பது நிறுத்தப்படும். 20 பேருக்கு மேல் கலந்துகொள்ளும் எல்லாவிதமான அரசு விழாக்களும் ரத்துசெய்யப்படும். அரசு விருந்துகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும்.

இந்தச் செலவினக் குறைப்பைச் செயல்படுத்தும் பொறுப்பு, அந்தந்தத் துறைகளின் செயலர்களைச் சாருமென தமிழக அரசின் அரசாணை தெரிவிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: