கொரோனா ஊரடங்கு: வாடகை தாய் மூலம் பெற்ற குழந்தை- இந்திய பெற்றோரின் நெடுந்தூர பயணம்

  • சௌதிக் பிஸ்வாஸ்
  • பிபிசி
(கோப்புப்படம்)

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

புதிதாகப் பிறந்துள்ள குழந்தையைக் காண முதல்முறையாக ஒரு இந்திய பெற்றோர் காலியான நெடுஞ்சாலைகளின் வழியாகப் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

ஏப்ரல் மாத மத்தியில், உலகின் மிக மோசமான கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்கான முடக்கநிலை அமலால் நாடு முழுக்க சிரமங்கள் ஏற்பட்டன. ஏறத்தாழ எல்லாமே முடங்கிவிட்டன.

சோதனைச் சாவடிகளில், தம்பதியினரை காவல் துறையினர் தடுத்து நிறுத்தி, அவர்களுடைய ஆவணங்களை ஆய்வு செய்து, ஏன் சாலை வழியாக வருகிறீர்கள் என கேட்டனர்.

``எங்களின் முதலாவது குழந்தையைப் பார்க்கச் செல்கிறோம்'' என்று பதில் அளித்தனர்.

வண்டியில் இருந்த பெண்ணை ஏறிட்டுப் பார்த்த காவலர் நம்பிக்கை இல்லாமல், ``உங்களுடைய குழந்தையைப் பாக்கச் செல்கிறீர்களா? குழந்தை எங்கே இருக்கிறது'' என்று கேட்டவாறு, காரின் உள்ளே பார்வையைச் செலுத்தினார்.

குஜராத் மாநிலம் அனந்த் நகரில் தங்களுடைய வாடகைத் தாய்க்கு ஒரு வாரத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்துள்ளதாக அவர்கள் விளக்கினர். தங்கள் மகளை அழைத்துச் செல்வதற்கு, தங்களுடைய சொந்த ஊரான பெங்களூரில் இருந்து சுமார் 1,600 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த நகரை நோக்கி தாங்கள் பயணம் மேற்கொண்டிருப்பதாகத் தெரிவித்தனர்.

``அப்போதும் நிறைய குழப்பங்கள் இருந்தன. ஆனால், எங்கள் ஆவணங்களை ஆய்வு செய்த பிறகு அவர்கள் எங்களை அனுமதிக்க வேண்டியதாயிற்று'' என்று குழந்தையின் தந்தை ராகேஷ் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்னிடம் தெரிவித்தார்.

முடக்கநிலை காரணமாக இந்தியா முழுக்க பல மருத்துவமனைகளில் காத்திருக்கும் வாடகைத் தாய்மார்களின் குழந்தைகளில் இவர்களுடைய குழந்தையும் ஒன்று. கடந்த மார்ச் மாதம் முடக்கநிலை அமலுக்கு வந்த பிறகு, அனந்த் நகரில் அகன்ஸ்கா மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் பிறந்துள்ள 28 குழந்தைகளில் இந்தக் குழந்தையும் ஒன்று. 50-க்கும் மேற்பட்ட நாட்கள் முடிந்துவிட்ட நிலையில், தங்களுடைய பெற்றோரின் வருகைக்காக, குறைந்தது 10 குழந்தைகள் இன்னும் காத்திருக்கின்றனர்.

`வாடகைத் தாய் மையம்'

இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுதல் அதிக அளவில் உள்ளது. சராசரியாக ஆண்டுக்கு 1,500 குழந்தைகள் வாடகைத் தாய்கள் மூலம் பிறக்கின்றன.

உலகின் ``வாடகைத் தாய்களின் மையம்'' என்று இந்தியா குறிப்பிடப் படுகிறது. கருத்தரிக்க வாய்ப்பில்லாமல் போகும் தம்பதியினர், இங்குள்ள பெண்களுக்கு பணம் கொடுத்து, தங்களின் கருவை சுமந்து பிரசவித்து தருமாறு கேட்டுக் கொள்கிறார்கள். வெளிநாடுகளில் இருந்தும் நிறைய பேர் இதற்காக வருகிறார்கள்.

ஆனால் ஒழுங்குபடுத்தப்படாத இந்த தொழிலில் கவலை தரும் விஷயங்களும் அதிகரித்து வருகின்றன.

வணிக ரீதியில் வாடகைத் தாய் வசதியைப் பயன்படுத்துவதைத் தடை செய்து 2018ல் இந்தியாவில் சட்ட வரைவு வெளியானது. கருத்தரிக்க வாய்ப்பில்லாத தம்பதியினர், தங்கள் உறவினர்களில் இருந்தே வாடகைத் தாயைத் தேர்வு செய்ய வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. அதற்கு இன்னும் நாடாளுமன்ற ஒப்புதல் கிடைக்கவில்லை.

இப்போது பெங்களூரைச் சேர்ந்த தம்பதியினர், தங்களுடைய மகளைக் காண துன்பம் மிகுந்த சாலைவழி பயணத்தை மேற்கொண்டுள்ளனர்.

47 வயதான ராகேஷ் நிர்வாகவியல் ஆலோசகராக உள்ளார். அவருடைய மனைவி 41 வயதான அனிதா கற்பித்தல் திட்டங்களை வடிவமைப்பவராக இருக்கிறார். அவர்களுக்கு 2003ல் திருமணம் நடந்தது. ஒரு தசாப்த காலத்துக்கும் மேலாக, ஒரு குழந்தைக்காக சோதனைக் குழாய், ஐ.யூ.ஐ. உள்ளிட்ட அனைத்து அறிவியல் நுட்பங்களையும் பயன்படுத்திப் பார்த்துவிட்டனர். அனிதா ஐந்து முறை கருவுற்று, கரு நிற்காமல் போய்விட்டது. வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று கடந்த ஆண்டு அவர்கள் முடிவு செய்தனர். குஜராத் மருத்துவ மையம் ஒன்றில், இதற்கு முன்வந்த 30 வயதைக் கடந்த ஒரு பெண்ணை அவர்கள் கண்டறிந்தனர். அந்தப் பெண்ணுக்கு ஏற்கெனவே 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர்களுடைய மகள் ஏப்ரல் 6 ஆம் தேதி பிறந்திருக்கிறாள். 2.9 கிலோ எடையுடன் ஆரோக்கியமாக இருக்கிறாள். அவளுடைய பெற்றோர் நாட்டின் வேறொரு மூலையில் சிக்கியுள்ளனர். மருத்துவமனையில் இருந்து அனுப்பிய படங்கள் மற்றும் செல்போன் வீடியோக்கள் மூலம் குழந்தையை அவர்கள் பார்த்துள்ளனர். வெளிச்சம் மற்றும் சப்தத்துக்கு குழந்தை அசைவதைப் பார்த்து மகிழ்ந்துள்ளனர். ``ஆனந்தத்தின் குவியல் '' என்று அந்தத் தருணத்தை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

``அமைதி கொள்வதற்கு சிறிது அவகாசம் தேவைப்பட்டது. பிறகு என் மனைவி அழத் தொடங்கிவிட்டாள். அது உணர்ச்சிபூர்வமான தருணம். எங்களுடைய துன்பங்கள் இனிமேல் தான் தொடங்கப் போகின்றன என்பது பற்றி அப்போது எங்களுக்கு எதுவும் தெரியவில்லை'' என்று என்னிடம் ராகேஷ் கூறினார்.

சாலை, ரயில், விமானப் போக்குவரத்து எல்லாமே நிறுத்தப் பட்டுள்ளன. அவசர பயணத்துக்காக பாஸ்கள் வழங்கப்படுகின்றன. இந்த பாஸ்கள் பெறுவதற்கு ஒரு டஜனுக்கும் மேற்பட்ட அதிகாரிகளை இந்தத் தம்பதியினர் அணுக வேண்டியிருந்தது. இவர்களுடைய அவசரத்தை பலரால் புரிந்து கொள்ள முடியவில்லை.

``ஓ... உங்கள் மனைவி குஜராத்தில் பிரசவித்திருக்கிறார், நீங்கள் அவரைப் பார்க்கச் செல்ல வேண்டுமா'' என்று அவர்களிடம் ஓர் அதிகாரி கேட்டுள்ளார்.

``உங்கள் மனைவி இங்கே இருக்கிறார். வேறு யாரோ கர்ப்பமாக இருக்கிறாரா? இங்கே வருமாறு அவரை ஏன் நீங்கள் கேட்டுக் கொள்ளக் கூடாது'' என்று இன்னொருவர் கேட்டிருக்கிறார்.

``இது சோதனைக் குழாய் குழந்தையா. அப்படியானால் என்ன அவசரம்? குழந்தை அங்கேயே இருக்கட்டுமே'' என்று வேறொரு அதிகாரி கேட்டிருக்கிறார்.

``இங்கே வர வேண்டிய அவசரம் என்ன'' என்று கேட்டுள்ளார்.

வாடகைத் தாய் மூலம் பெற்ற குழந்தையை பெற்றோர்கள் ஏன் அவசரமாக அழைத்துச் செல்ல வேண்டும் என்பதை விளக்கி குஜராத் மருத்துவமனையில் இருந்து அதிகாரிகளுக்கு ஒரு டாக்டர் இமெயில் அனுப்பியுள்ளார். ``இது விநோதமான ஒரு சூழ்நிலை. உரிய காலத்திற்குள் பெற்றோரிடம் எங்களால் குழந்தையை ஒப்படைக்க முடியாமல் உள்ளது. எங்களுக்கு நெருக்கடியாக உள்ளது'' என்று மருத்துவமனையின் தலைமை அதிகாரி டாக்டர் நய்னா பட்டேல் என்னிடம் தெரிவித்தார். ``இந்த மருத்துவமனையில் 39 வாடகைத் தாய்மார்கள் கருவுற்றிருக்கிறார்கள்'' என்று அவர் குறிப்பிட்டார்.

கடைசியாக ஏப்ரல் 14 ஆம் தேதி, அவர்கள் இருவருக்கும், டிரைவருக்கும் என மூன்று பேருக்கு பாஸ்கள் கிடைத்தது.

நீண்ட தூரத்துக்கான அந்தப் பயணத்துக்கு, கிருமிநீக்க வசதிகளுடன் வருவதற்கு டொயோட்டா SUV வாகன சேவையாளர் ஒருவர் ஒப்புக்கொண்டார். 30 நிமிடங்களுக்கு ஏ.சி. போட்டால், ஒரு மணி நேரத்துக்கு கண்ணாடிகளை இறக்கிவிட்டு வெளியில் இருந்து காற்று வரும் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தங்களுக்குச் சொல்லப் பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அடுத்த இரண்டு பகல்கள் மற்றும் இரவுகளில் அவர்கள் காலியாகக் கிடந்த நெடுஞ்சாலைகளில் பயணித்துள்ளனர். இரவு வரும் போது பெட்ரோல் நிலையங்களில் நிறுத்திவிடுவார்கள். அங்கு டீசல் போட்டுக் கொண்டு, செல்போன்களுக்கு சார்ஜ் செய்து கொண்டு, இரவு உணவை முடித்துக் கொள்வார்கள். வேண்டிய அளவுக்கு சமைத்த உணவு, 10 லிட்டர் தண்ணீர், பிஸ்கட்கள், ஜாம் மற்றும் ரொட்டியும் வாங்கிக் கொள்வார்கள். இரவு சாப்பிட்ட பிறகு ஓட்டுநர் மூன்று மணி நேரம் தூங்குவார்.

பட மூலாதாரம், Getty Images

``வெப்பம் அதிகமாகிக் கொண்டே இருந்தது. எங்களால் தூங்க முடியவில்லை. எத்தனை சோதனைச் சாவடிகளைக் கடந்தோம் என்பது கூட நினைவில் இல்லை. ஆனால் அவற்றைக் கடந்ததும் எங்கள் பயணத்தின் வேகம் அதிகமானதாக இருந்தது'' என்று ராகேஷ் கூறினார்.

``அதிக சோர்வை ஏற்படுத்துவதாக பயணம் இருந்தது. ஒவ்வொரு இடத்திலும் நாங்கள் இறங்கி, பாஸ்களை காட்ட வேண்டியிருந்தது. உடல் வெப்பத்தை பரிசோதித்து, எங்களைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் பதிவு செய்து, குழந்தை பற்றிய குழப்பமான அனைத்து கேள்விகளுக்கும் பதில் அளித்துவிட்டு, பயணத்தைத் தொடர வேண்டியிருந்தது'' என்றார் ராகேஷ்.

அனந்த் நகரை அடைய ஓரிரு மணி நேர பயண தொலைவில் இருந்தபோது, நகருக்கான கடைசி சோதனைச்சாவடியை அடைந்தனர்.

குஜராத்தில் நோய்த் தாக்குதல் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால் யாரையும் நகருக்குள் அனுமதிக்க முடியாது என்று அங்கு காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். வெளியாட்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள் இருப்பதாகத் தெரிவித்தனர். (அங்கு இதுவரையில், 14,000க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு, 850க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன.)

பதற்றம் அதிகமானது. கார்களில் வந்தவர்களில் பாஸ் வைத்திருந்தவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அனைத்து நிகழ்வுகளையும் ஒரு காவலர் விடியோ பதிவு செய்து கொண்டிருந்தார்.

தங்கள் சிறுவயது குழந்தையுடன் வந்த தம்பதியினர் 1000 கிலோ மீட்டருக்கும் அதிகமான தொலைவில் உள்ள டெல்லிக்கு சென்று கொண்டிருந்தனர். அந்த ஆணின் தாயார் காலமாகிவிட்டதால் அவர்கள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

``என் தாயார் இறந்துவிட்டார். ஏன் என்னை துன்புறுத்துகிறீர்கள்'' என காவலரிடம் அவர் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டிருந்தார்.

கடைசியாக நான்கு மணி நேரம் கழித்து வாகனங்களை காவலர்கள் அனுமதித்தனர். வந்தவர்கள் மீண்டும் அனைத்து ஆவணங்களையும் காட்ட வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

பெற்றோர்கள் தங்கள் குழந்தையைப் பார்ப்பதற்கு முன்னதாக 14 நாட்கள் தனிமைப்படுத்தல் நிலையில் இருப்பதற்காக, காவலர்கள் வசதியுடன் கூடிய ஒரு வீட்டை மருத்துவமனை நிர்வாகம் ஏற்பாடு செய்து வைத்திருந்தது. பதற்றமடைந்த அந்தப் பகுதி மக்கள் ஆட்சேபம் தெரிவித்ததால், அவர்கள் மருத்துவமனைக்கே சென்றுவிட்டனர். அங்கு ஓர் அறையில் சுமார் ஒரு வாரம் அவர்கள் தங்கியிருந்தனர்.

மே 1 ஆம் தேதி அவர்களுடைய தனிமைப்படுத்தல் கெடு முடிந்தது. அதன் பிறகு தங்கள் குழந்தையை அவர்கள் பார்க்க முடிந்தது. பிறந்து மூன்று வாரங்களுக்கும் மேல் ஆகிவிட்ட பிறகு குழந்தையை அவர்கள் பார்த்தனர்.

ராகேஷ், அனிதா குளித்துவிட்டு, அறையில் கிருமிநீக்கம் செய்து, கையுறைகளை அணிந்து கொண்டு, முகக் கவச உறைகள் அணிந்து கொண்டு காத்திருந்தனர்.

பிற்பகலில் குழந்தையை நர்ஸ்கள் கொண்டு வந்தனர். அந்தத் தருணத்தை அப்படியே நினைவுகூர்ந்தார் ராகேஷ்.

``அனிதா அழத் தொடங்கி விட்டாள். 2 நிமிடம் என்னிடம் கொடுங்கள். பிடித்துக் கொள்கிறேன் என்று கூறினாள். கையுறைகளை அகற்றிவிட்டு அவளைப் பிடித்துக் கொண்டோம்'' என்றார் அவர்.

``குழந்தைக்கு முத்தம் தரலாமா என்று நாங்கள் கேட்டோம். தரக்கூடாது என டாக்டர் கூறிவிட்டார். குழந்தைக்காக நீல நிற ஆடை வாங்கி வந்திருந்தோம். அதைப் போடுவதற்கு அவர்கள் அனுமதி தந்தார்கள்.''

``எனக்கு உணர்வுகள் மேலிட்டது. கடைசியில் அது நடந்துவிட்டது. எங்கள் மடியில் குழந்தை வந்துவிட்டது. அது வலிகள் மிகுந்த நீண்ட கால காத்திருப்பு. அந்தத் தருணத்தை என்னால் மறக்கவே முடியாது.''

``நாங்கள் எடுத்த போது குழந்தை அழவே இல்லை தெரியுமா? புதிதாகப் பார்த்த முகங்களை குழந்தை அதிசயமாகப் பார்த்துக் கொண்டிருந்தது'' என்று விவரித்தார் ராகேஷ்.

பட மூலாதாரம், Getty Images

ஆனால் இப்போது குழந்தையை எப்போது வீட்டுக்கு அழைத்துச் செல்வது என்று அவர்களுக்குத் தெரியவில்லை. நீட்டிக்கப்பட்டு வந்த முடக்கநிலை இப்போது சிறிது தளர்த்தப் பட்டுள்ளது. ஆனால் பயணிகள் ரயில் மற்றும் விமானப் போக்குவரத்து இன்னும் தொடங்கவில்லை. திரும்பவும் பெங்களூருக்கு சாலை வழியாகத்தான் பயணம் செய்ய வேண்டியிருக்கும். அதற்கு டாக்டர்கள் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.

எனவே கிருமிநாசினிகள், பாலூட்டும் பாட்டில்கள், மின்சார கிருமிநீக்க சாதனங்கள், சுடுநீர் வைக்க பிளாஸ்க்குகள், குழந்தையின் உணவுக்கான 10 பாக்கெட்கள், இரண்டு டஜன் டயாபர்கள் எல்லாம் வாங்கி வைத்துள்ளனர். ``இந்தப் பயணம் மாறுபட்டதாக இருக்கப் போகிறது'' என்று ராகேஷ் கூறினார்.

மகளை வீட்டுக்கு அழைத்துச் செல்வதற்கு ஒரு வாகனத்துக்காக அவர்கள் காத்திருக்கிறார்கள்.

``பொறுமை மற்றும் தளராத முயற்சிக்கான பரிசோதனையாக இது இருக்கிறது. ஒரு குழந்தைக்கான பயணத்தில் நிறைய ஏற்றங்களும், இறக்கங்களும் இருக்கின்றன'' என்று என்னிடம் அனிதா தெரிவித்தார்.

``என் மகளைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த நேரம், இந்த சோதனையின் உச்சகட்டமாக இருந்தது. அந்த சோதனை என்னை இன்னும் சிறந்தவளாக, அதிக பொறுமையுள்ள தாயாக ஆக்கியுள்ளது'' என்று அவர் கூறினார்.

``கடைசியில், எல்லாவற்றுக்குமே அர்த்தம் உள்ளது'' என்றார் அனிதா.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: