கொரோனா ஊரடங்கும், ஒரு மாற்றுத்திறனாளியும்: சிதம்பரத்தில் இருந்து சென்னை வரை

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
கொரோனா ஊரடங்கு

சித்தாள் வேலை தேடி சென்னையில் இருந்து சிதம்பரம் சென்ற மாற்றுத்திறனாளி பெண் ஒருவர், ஊரடங்கு காரணமாக வேலையும் கிடைக்காமல், செலவுக்கும் கையில் பணம் இல்லாமல் சென்னைக்கு மீண்டும் நடந்தே திரும்ப முயன்றுள்ளார்.

ஊர் திரும்பும் வழியில் புதுச்சேரி அருகே இதனை அறிந்து காவல்துறையினர் அந்த பெண்ணிற்கு உதவி செய்து, பாதுகாப்பாக லாரி மூலம் வழியனுப்பி வைத்தனர்.

சென்னை சைதாப்பேட்டையில் பகுதியில் வசித்து வருபவர் 35 வயதாகும் சிவராணி. இவருக்கு செவித்திறன் மற்றும் பேச்சுத்திறன் இல்லாத மாற்றுத்திறனாளி இவர்.

மே 18ஆம் தேதி சென்னையில் இருந்து சொந்த ஊரான சிதம்பரத்திற்கு வந்த இவர், தனது குடும்பத்தினருக்கு உதவியாக இருக்கலாம் என்று சித்தாள் வேலை தேடி அலைந்துள்ளார்.

ஆனால், கடலூர் மாவட்டத்தில் முழுவதுமாக ஊரடங்கு தளர்வு செய்யப்படாத காரணத்தினால், அவருக்கான வேலை சிதம்பரத்தில் கிடைக்கவில்லை. தொடர்ந்து இரண்டு நாட்கள் முயற்சித்தும் அவருக்கு தகுந்த வேலை கிடைக்கவில்லை.

இதனைத் தொடர்ந்து சிவராணி மீண்டும் சென்னைக்குத் திரும்பிச் செல்ல முடிவு செய்தார். பின்னர், அவரது தாய் தந்தையருக்குத் தெரிந்தால் தன்னை சென்னைக்குச் செல்ல அனுமதி மறுத்துவிடுவார்கள் என்ற காரணத்திற்காக, யாரிடமும் சொல்லாமல் வீட்டைவிட்டு வெளியேறினார்.

செலவிற்கு கையிருப்பில் பணமில்லாமல், நடந்தே சென்னைக்குச் செல்லத் தொடங்கினார் சிவராணி.

தொடர்ந்து மூன்று நாட்களாக மெல்ல நடந்துவந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை புதுச்சேரிக்கு வந்தடைந்தார். புதுச்சேரிப் பகுதியை முழுவதுமாக அவர் கடந்த சூழலில், எல்லைப் பகுதியான கிழக்கு கடற்கரைச் சாலை அரு[கே பாதுகாப்புப் பணியிலிருந்த புதுச்சேரி காவலர்கள், அவர் தனியாக நடந்து செல்வதைக் கண்டு விசாரித்தனர். அப்போது அவர் வாய்பேச முடியாதவர் என காவல்துறையினர் அறிந்து கொண்டனர்.

அந்த பெண்மணி கைகள் மூலமாகக் காட்டும் சைகையை வைத்து, அவர் இன்னும் சாப்பிடவில்லை என்று அறிந்த காவல்துறையினர், உடனே சிவராணிக்கு உணவு வாங்கி கொடுத்துள்ளனர்.

பின்னர், அவர் கையில் வைத்திருந்த தொலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்தபோது, அந்த பெண் சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்தவர் என்றும், அவரது சகோதரி வீட்டில் தங்கியிருந்தும் தெரியவந்தது. மேலும், கடந்த 4 நாட்களாக அவர் எங்கு இருக்கிறார் என்று அறியாமல் உறவினர்கள் தேடியுள்ளதாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து, அவரை சென்னைக்கு அனுப்ப முயற்சி‌ மேற்கொண்டனர். புதுச்சேரியில் இருந்து சென்னைக்குப் பேருந்து சேவை இல்லாத காரணத்தினால், லாரி ஓட்டுநர் ஒருவரின் உதவியுடன் அவரை சென்னை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். பிறகு, காவல்துறையினர் அந்த பெண்ணின் செலவிற்குப் பணம் கொடுத்து, அவர் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்துப் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.

"நெடுஞ்சாலைகளில் வடமாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்குச் சமீப காலமாக நடந்தே செல்கின்றனர். இந்நிலையில், புதுச்சேரியில் இருந்து வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நெடுஞ்சாலைகளில் நடந்து செல்வது குறித்து ஆய்வு செய்வதற்காகக் காவலர்கள் கிழக்கு கடற்கரைச் சாலை அருகே பணியில் ஈடுபட்டிருந்தனர்," என்கிறார் புதுச்சேரி உதவி காவல் ஆய்வாளர் கீர்த்தி.

"அவரை பாதுகாப்புடன் லாரி மூலம் சென்னைக்கு அனுப்பிவைக்க, அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த சுமார் 30க்கும் மேற்பட்ட வாகனம் மற்றும் லாரிகள் உதவியை நாடினோம். ஆனால் அனைவரும் அவரை அழைத்துச் செல்ல மறுத்துவிட்டனர். பின்னர், தமிழ் என்ற லாரி ஓட்டுநர் அவரை அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார். இதனைத் தொடர்ந்து, அவரை பத்திரமாக வீட்டிற்கும் அனுப்பி வைத்தோம்," எனத் தெரிவித்தார் கீர்த்தி.

அந்த பாதுகாப்பாகச் சென்னை சென்றடைந்தது குறித்து உறுதி செய்ய, பிபிசி தமிழ் செய்திக் குழுமம் சிவராணியின் குடும்பத்தினரைத் தொடர்பு பேசினோம். அப்போது, லாரி ஓட்டுநர் உதவியால் பாதுகாப்பாக வீடு வந்தடைந்ததை உறுதிப்படுத்தினார் அந்த பெண்ணின் இளைய சகோதரி ரேவதி.

"அவருக்குப் பிறந்ததிலிருந்தே செவி மற்றும் பேச்சு மாற்றுத்திறன் கொண்டவர். திருமணமாகி கணவரை இழந்த அவருக்குப் பிள்ளைகள் யாரும் கிடையாது. எனது மூத்த சகோதரியான அவரை என்னுடனே வைத்துப் கவனித்து வருகிறேன். கடந்த வாரம் முன்பு வரை அவர் சென்னையில்தான் இருந்தார், இங்கே கிடைக்கும் வேலையைச் செய்து கொண்டு எங்களுக்கு உதவியாக இருந்தார்.

பிறகு சொந்த ஊரான சிதம்பரத்தில் சித்தாள் வேலை செய்து அங்கிருக்கும் தாய், தந்தையருக்கு உதவியாக இருக்கலாம் என்று சென்றிருந்தார். ஆனால், சிதம்பரத்தில் ஊரடங்கு காரணமாக அவருக்கான வேலை கிடைக்கவில்லை. ஆகவே, பழையபடி சென்னை சென்றால் மட்டுமே எதாவது வேலை கிடைக்கும் என்று இங்கே வர முயற்சித்துள்ளார்," என்கிறார் சிவராணியின் இளைய சகோதரி ரேவதி.

குடும்பத்தினர் வறுமையில் இருக்கிறோம் இதற்கு தன்னால் முடிந்த உதவியைச் செய்ய வேண்டும் என்பதற்காக, அவரது முடியாத உடல்நிலையைப் பொருட்படுத்தாமலும் வேலை செய்வதாக வருத்தப்படுகிறார் அவரது இளைய சகோதரி.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: