கொரோனா வைரஸ்: ‘’பொறுமை இல்லாததால் புலம்பெயர் தொழிலாளர்கள் நடந்து சென்றனர்’’ - நரேந்திர சிங் தோமர்

  • ஜுகல் புரோஹித்
  • பிபிசி செய்தியாளர்
கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் புலம்பெயர் தொழிலாளர்கள் பொறுமையில்லாததால் சாலைகளில் நடந்தும், கூட்டமான ரயில்களிலும் சொந்த ஊர்களுக்கு செல்கின்றனர் என மத்திய விவசாய மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பிபிசிக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

முதல் கட்ட பொது முடக்கநிலையை அரசு திட்டமிடும் போது, புலம்பெயர் தொழிலாளர்களின் பிரச்சனையை அரசு கணித்ததா என கேட்டதற்கு,'' சிறந்த பொருளாதார வாய்ப்புகளுக்காக மக்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் புலம் பெயர்ந்து செல்கின்றனர். பொது முடக்கம் அறிவிக்கப்படும் போது புலம்பெயர் தொழிலாளர்கள் அச்சப்படுவது இயல்பானது. அவர்கள் தங்களது வீட்டுக்கு செல்ல வேண்டும் என நினைப்பார்கள். அதுதான் இங்கு நடந்துள்ளது'' என்றார்.

ஆனால், கடந்த மே 26-ம் தேதி வரை தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முயன்ற 224 புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்துள்ளனர்.

''இப்போது மோசமான சூழ்நிலையை அனைவரும் எதிர்கொள்கின்றனர். இருந்தபோதிலும், பொது முடக்கம் மற்றும் சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவது என மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியுள்ளனர். நடந்து செல்லும்போதும், ரயில் பாதைகளிலும் மக்கள் இறந்துபோனது உண்மையில் மிகவும் துரதிர்ஷ்டவசமானது'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

மார்ச் 28-ஆம் தேதியன்று டெல்லி ஆனந்த் விஹார் பகுதியில் திரண்ட புலம்பெயர் தொழிலாளர்கள்

மேலும் அவர்,'' மக்கள் அனைவரும் விரைவாக வீடு திரும்ப வேண்டும் என எண்ணுகின்றனர். இப்போது ஒரு ஊருக்கு செல்லும் ரயிலுக்காக, பத்து ஊருக்கு செல்ல வேண்டிய மக்கள் கூடுகின்றனர். எனவே அடுத்த ரயில் வரும் வரை அவர்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், பொறுமையில்லாத சில தொழிலாளர்கள் சாலைகளில் நடந்தும், சைக்கிளிலும் ஊருக்கு கிளம்பியுள்ளனர்.'' என கூறுகிறார்.

சனிக்கிழமையன்று நாட்டு மக்களுக்கு எழுதிய கடிதத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோதி,''உலகை உலுக்கி வரும் கொரோனா நம் நாட்டையும் பிடித்துள்ளது. இதுபோன்ற ஒரு மோசமான நோய் பாதிப்பு காலகட்டத்தில், எவரொருவரும் துன்பம் அடையவில்லை என்று கூறிவிடமுடியாது. புலம்பெயர் தொழிலாளர்கள், சிறு குறு தொழில் நடத்துவோர், தள்ளுவண்டி வியாபாரிகள் உள்ளிட்ட அடித்தட்டு மக்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள்" என்று கூறி உள்ளார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு போதிய உதவிகளை செய்ய மத்திய அரசும் மாநில அரசும் தவறிவிட்டதாக இந்திய உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. இந்த நிலையில், மே 28-ம் தேதி நடந்த விசாரணையில், ஒரு கோடி புலம்பெயர் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பியுள்ளதாகவும், அனைத்து தொழிலாளர்களையும் அனுப்பும்வரை தங்களது பணி நிற்காது எனவும் மத்திய அரசு கூறியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுக்க ஆறு லட்சம் புலம்பெயர் தொழிலாளர்களை தங்க வைக்க இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், இருபத்து மூன்று லட்ச தொழிலாளர்களுக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளதாகவும், புலம்பெயர் தொழிலாளர்கள் பிரச்சனை தற்போது கட்டுக்குள் இருப்பதாகவும் கடந்த மார்ச் 31-ம் தேதி மத்திய அரசு கூறியிருந்தது.

புலம்பெயர் தொழிலாளர்களுக்குப் பண உதவிகள் அல்லது அவர்கள் பாதிக்கப்படாத வகையில் பொது முடக்கத்தை ஏன் திட்டமிடவில்லை என அமைச்சர் நரேந்திர சிங் தோமரிடம் கேட்டபோது,'' அரசு உதவும் என மக்களிடம் எதிர்பார்ப்பு இருப்பது இயல்பானதே. தொழிலாளர்களுக்கு முடிந்த அளவுக்கான உதவிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் செய்துள்ளன'' என்கிறார்.

பட மூலாதாரம், AJAY AGGARWAL / HINDUSTAN TIMES VIA

படக்குறிப்பு,

நரேந்திர சிங் தோமர்

இந்தியாவில் இரண்டாவது முறையாக மோதி பிரதமராகப் பதவி ஏற்று ஓராண்டு நிறைவை முன்னிட்டு செய்தியாளர்கள் மத்தியில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா,'' பல்வேறு முகாம்களில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களைப் பார்த்துக்கொள்வதற்காக மாநில அரசுகளுக்கு 11,000 கோடி நிதியை மத்திய அரசு வழங்கியுள்ளது'' என்றார்.

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்குமிடம் வசதி வழங்குவதாக மத்திய அரசு கூறியபோதும், நடந்தே ஊருக்கு சென்ற தொழிலாளர்களை பிபிசி சந்தித்தது. அதில் பெரும்பாலோனோர் ஒரு வேளை உணவுக்காக கடும் வெயிலில் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருப்பதாகக் கூறுகின்றனர். மேலும் பலர், தங்களுக்கு தேவையான உணவு பொருட்கள் கிடைப்பதில்லை என தெரிவிக்கின்றனர்.

மத்திய அரசிடம் இருந்து தங்களுக்கு எந்த உதவிகளும் கிடைக்கவில்லை என பல புலம்பெயர் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவில் ஏழை மக்களுக்கு மத்திய அரசு நேரடியாக பணம் செலுத்துவது அவர்களுக்கு உதவியாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

பணம் செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்

ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் 500 ரூபாய் பணம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மார்ச் 26-ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. இது ஜூன் மாதத்துடன் நிறைவடைய உள்ள நிலையில், இது மேலும் நீட்டிக்கப்படுமா என அமைச்சரிடம் கேட்டோம்.

அதற்கு அவர்,'' மக்களுக்கு நேரடியாகப் பணம் செலுத்த வேண்டும் என பல அரசியல் கட்சிகள் கூறுகின்றன. காங்கிரஸ் கட்சி அவர்கள் ஆளும் மாநிலத்தில் ஏன் மக்களுக்கு பணம் வழங்கவில்லை. ஜன் தன் கணக்குகளில் மூன்றாம் தவணை செலுத்தப்பட உள்ளது. தற்போது முடக்கம் தளர்த்தப்பட்டு, பல பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் துவங்கியுள்ளன. சூழ்நிலைகளைப் பொறுத்து ஜன் தன் கணக்குகளில் பணம் செலுத்துவது குறித்து மத்திய அரசு முடிவெடுக்கும்'' என்றார்.

ஊரக பகுதிகளில் கொரோனா பரவல்

இந்தியாவில் 325 மாவட்டங்கள் கொரோனா இல்லாத மாவட்டங்கள் என ஏப்ரல் 16-ம் தேதி மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியிருந்தது. ஆனால்.தற்போது அது 168 மாவட்டமாகக் குறைந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

''கோவிட்-19 இல்லாத மாவட்டங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனால், இதற்காக அச்சப்படத்தேவையில்லை. நமது கிராமப்பகுதிகளில் 15-120 கிலோமீட்டருக்குள் ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன. மாவட்ட மருத்துவமனைகளில் அனைத்து மருத்துவ வசதிகளும் உள்ளன. கூடுதல் உதவி தேவைப்பட்டால் அரசு வழங்கும் '' என்கிறார் தோமர்.

2022-ல் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக வேண்டும் என்பது இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் கனவு திட்டம். ஆனால், கொரோனா பெருந்தொற்று காலத்தில் இதை நிறைவேற்றுவது சாத்தியமா என கேட்டதற்கு,'' இதற்கான பணிகள் நடந்து வருகின்றன. கொரோனாவால் சில தாமதம் ஏற்பட்டுள்ளது. ஆனால், இதை சரிப்படுத்தி இலக்கை அடைய முடியும்'' என்கிறார்.

வெட்டுக்கிளி பிரச்சனை செப்டம்பர் மாதம் தீரும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வெட்டுக்கிளி

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் மாநிலங்கள் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகின்றன. கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகளில் இல்லாத அளவு விவசாயிகள் கடுமையாக பதிக்கப்பட்டுள்ளனர்.

''மத்திய அரசின் 50 குழுக்கள் இந்த பிரச்சனையைச் சமாளிக்க பணியாற்றி வருகின்றன. பிரிட்டனிலிருந்து 60 தெளித்தல் இயந்திரங்களை வாங்கியுள்ளோம். கொரோனாவால் இந்த இயந்திரங்கள் இந்தியா வருவது தாமதமாகியுள்ளது.

டிரோன் மற்றும் விமானங்கள் மருந்து தெளிப்புக்காகப் பயன்படுத்தப்படும். செப்டம்பர் மாதம் இப்பிரச்சனை தீரும். கிட்டதட்ட 4 லட்ச ஏக்கர் விவசாய நிலம் வெட்டுக்கிளிகள் படையெடுப்பால் பாதிக்கப்பட்டுள்ளது'' என்கிறார்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: