ஜார்ஜ் ப்ளாய்ட், இந்தியா-சீனா எல்லை பதற்றம், கொரோனா வைரஸ்: நரேந்திர மோதி, டிரம்ப் உரையாடல்

'அமெரிக்கா வாருங்கள்': நரேந்திர மோதிக்கு டிரம்ப் அழைப்பு

பட மூலாதாரம், Hindustan Times / Getty

இந்திய பிரதமர் நரேந்திர மோதி, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உடன் நேற்று புதன்கிழமை தொலைபேசி மூலம் உரையாடினார் என்று இந்திய வெளியுறவுத் துறை தெரிவித்துள்ளது.

இந்த தொலைபேசி உரையாடலின்போது உலகின் சக்தி வாய்ந்த நாடுகளின் குழுவாக கருதப்படும் ஜி-7 நாடுகளின் குழுவில் இந்தியா உள்ளிட்ட நாடுகளையும் இணைப்பது உள்ளிட்டவை குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப், மோதியிடம் உரையாடியதாக இந்திய வெளியுறவுத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் நடைபெற உள்ள ஜி-7 உச்சி மாநாட்டிலும் கலந்து கொள்ள வேண்டும் என்று அதிபர் டிரம்ப் பிரதமர் நரேந்திர மோதிக்கு அழைப்பு விடுத்தார் என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஜார்ஜ் ஃப்ளாயிட் மரணம் குறித்து பேச்சு

கறுப்பினத்தவரான ஜார்ஜ் ஃப்ளாயிட் அமெரிக்காவில் போலீஸ் காவலில் உயிரிழந்ததை தொடர்ந்து அமெரிக்கா முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பு ஊரடங்கையும் மீறி போராட்டங்கள் நடந்து வருகின்றன.

அவர் இறந்த மே 25ஆம் தேதி முதல் அமெரிக்காவில் போராட்டங்களால் அசாதாரணமான சூழல் நிலவுகிறது.

அங்கு நிலவும் சூழல் குறித்து நரேந்திர மோதி அதிபரிடம் கவலை தெரிவித்ததாகவும் தற்போதைய சூழல் விரைவில் முடிவுக்கு வர வேண்டும் என்று தன் விருப்பத்தை தெரிவித்ததாகவும் இந்திய வெளியுறவுத்துறை தெரிவிக்கிறது.

நரேந்திர மோதி ஜி-7 உச்சி மாநாட்டுக்கு வர அழைப்பு விடுத்த டிரம்ப்

ஜூன் மாதம் பத்தாம் தேதி முதல் 12ம் தேதி வரை அமெரிக்காவின் கேம்ப் டேவிட்டில் ஜி-7 உச்சி மாநாடு நடைபெறும் என்று முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது.

பின்னர் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் காரணமாக இந்த உச்சி மாநாடு ரத்து செய்யப்பட்டு காணொலிக் காட்சி வாயிலாக ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்பார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும் அந்த முடிவையும் மாற்றி ஜூன் மாதம் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இந்த உச்சி மாநாடு நடைபெறும் என்று இதை நடத்தும் நாடான அமெரிக்கா அறிவித்தது.

நேரில் வந்து கலந்துகொள்ள வேண்டும் எனும் அழைப்பை கொரோனா பரவலைக் காரணம் காட்டி ஜெர்மன் சான்செலர் ஏங்கலா மெர்கல் மறுத்திருந்தார்.

பட மூலாதாரம், SERGIO FLORES/GETTY IMAGES

பின்னர் ஜி-7 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பு நாடுகளாக அல்ல இல்லாத ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்களும் பங்கேற்கும் வகையில் இந்த உச்சிமாநாடு வரும் செப்டம்பர் மாதம் நடத்தப்படும் என்று சனிக்கிழமையன்று டிரம்ப் அறிவித்திருந்தார்.

டிரம்ப் மற்றும் நரேந்திர மோதி வேறு என்னவெல்லாம் பேசினார்கள்?

உலகெங்கும் ஏற்பட்டுள்ள கோவிட்-19 நோய்த்தொற்று, இந்தியா மற்றும் சீனா இடையே எல்லையில் நிலவும் பதற்றம், உலக சுகாதார நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து இரு நாடுகளின் தலைவர்களும் விவாதித்ததாக இந்திய வெளியுறவுத் துறை தெரிவிக்கிறது.

பிப்ரவரி மாதம் டிரம்ப் இந்தியாவுக்கு மேற்கொண்ட பயணம் குறித்து மோதியிடம் பேசியதாகவும் பல்வேறு வகைகளில் அந்த பயணம் வரலாற்றுச் சிறப்புமிக்கது என்று அவரிடம் நரேந்திர மோதி கூறியதாகவும் அந்த செய்திக்குறிப்பு கூறுகிறது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் என்று கூறப்படும் அகமதாபாத்தில் மொடேரா மைதானத்தின் தொடக்க நிகழ்வில் டிரம்ப் மற்றும் மோதி கலந்துகொண்டனர்.

வெளிநாட்டு தலைவர் ஒருவரின் கூட்டத்திற்காக கலந்து கொண்ட அகமதாபாத் நிகழ்வுக்காக மக்கள் வரிப்பணம் 100 கோடி ரூபாய்க்கும் மேல் செலவிடப்பட்டது இன்று இந்திய எதிர்க்கட்சிகள் பிப்ரவரி மாத நிகழ்ச்சியை கடுமையாக விமர்சித்தன.

இந்தியாவிலேயே கொரோனா வைரஸ் தொற்று அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் ஒன்றாக குஜராத் உள்ளது.

குஜராத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் மரணம் அடைந்தவர்கள் அதிகமாக இருக்கும் நகரமாக அகமதாபாத் இருக்கிறது.

இந்தியாவில் முதல் கொரோனா தொற்றாளர் ஜனவரி மாத இறுதியிலேயே கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் பல்லாயிரம் பேர் ஒரே இடத்தில் அகமதாபாத்தில் கூடியது கொரோனா வைரஸ் பரவலுக்கு சாதகமாக அமைந்தது என்றும் அந்த நிகழ்ச்சி குறித்து கடுமையான விமர்சனங்கள் நிலவி வருகின்றன.

இதை குஜராத் மாநில அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: