கொரோனா வைரஸ் எதிரொலி: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்?

கொரோனா: எதிர்காலத்தில் பயணம் என்பது எப்படி இருக்கும்?

ஷாம்சுதீன் கடந்த 40 வருடங்களாக சுற்றுலா வழிகாட்டியாக உள்ளார். மறைந்த பிரிட்டன் இளவரசி டயானா உள்பட நாற்பதுக்கும் மேற்பட்ட பிரபலங்களுக்கு ஆக்ராவில் உள்ள தாஜ்மகாலை இவர் சுற்றிக் காண்பித்துள்ளார். மக்கள் கொரோனா வைரஸ் உடன் வாழ பழகிக்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் தெளிவாகக் கூறிவிட்ட நிலையில், சுற்றுலாத் துறையே முற்றிலும் மாற்றம் காணலாம் என ஷாம்சுதின் நம்புகிறார்.

பொது முடக்கம் நீக்கப்பட்டாலும் வரும் காலங்களில் சுற்றுலாத்துறை முன்பு இருந்தது போல இருக்காது என அவர் கூறுகிறார். மக்கள் சுற்றுலா சென்றாலும் குழுவாகச் செல்லாமல் தனித்தனியாகவே செல்வார்கள் என்கிறார் அவர்.

‘’எதிர்காலத்தில் தாஜ்மகால் முன்பு மாஸ்க் அணிந்தபடி மக்கள் புகைப்படம் எடுத்துக்கொள்ளும் காட்சியைக் கற்பனை செய்து பாருங்கள்’’ என்கிறார் ஷாம்சுதீன்.

உலகம் முழுக்க உள்ள சுற்றுலா தலங்களில் இந்த விதி அமலில் இருக்கும். சமூக இடைவெளி கட்டாயமாக்கப்படும் இதனால் குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வருவார்கள்.

விமான பயணம்

சர்வதேச விமான போக்குவரத்து சங்கம் (IATA), விமான போக்குவரத்தை மீண்டும் துவங்குவதற்கான வழிகாட்டுதல்களை ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அதில் சர்வதேச விமானங்களில் பயணிக்கும் விமானிகளுக்கு உட்சபட்ச பாதுகாப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் விமான போக்குவரத்து நிபுணர் அஷ்வினி பட்னிஸ்.

வெளிநாட்டு விமான நிலையங்களில் பயணிகளை சோதிக்கக் கணினிகள் பயன்படுத்துவதைப் போல, இந்தியாவிலும் பயணிகளுக்கும் விமான நிலைய ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைப்பதற்கான செயல்முறைகளை அமல்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவில் உள்நாட்டு விமானங்களில் பயணிக்கும் பயணிகள் கட்டாயம் ’வெப்-செக்கிங்’ செய்திருக்க வேண்டும். மேலும் பிரிண்ட் செய்யப்பட்ட போர்டிங் பாஸை கையில் வைத்திருக்க வேண்டும் போன்ற விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.

’’விமானங்களில் சிரித்த படி பயணிகளை வரவேற்கும் விமானப்பணிப் பெண்களைப் பார்க்க முடியாது. அவர்கள் கட்டாயம் பாதுகாப்பு உடைகளை அணிந்திருக்க வேண்டும் என விமான நிறுவனங்கள் தெரிவித்துள்ளன’’ என்கிறார் அஷ்வினி

தற்போது இயங்கும் விமானங்களில் நடுப்பகுதி இருக்கையிலும் பயணிகள் பயணிப்பதைக் காண முடிகிறது. நடுப்பகுதியில் உள்ள இருக்கைகளை காலியாக விடுவது என முன்பு முடிவு செய்யப்பட்டது. சர்வதேச விமான நிறுவனங்களான எமிரேட்ஸ், ஏர் கத்தார் போன்ற நிறுவனங்கள் இந்த வழிமுறையை இன்னும் பின்பற்றி வருகின்றன.

’’விமானப் போக்குவரத்து வழிமுறைகள் மாறிக்கொண்டே இருக்கும். இன்னும் சில வாரம் அல்லது மாதங்களில் புதிய வழிமுறைகளை நாம் காணப்போகிறோம்’’ என்கிறார் அவர்.

உள்நாட்டு விமானப் பயணத்தை பொருத்தவரை ஒவ்வொரு மாநிலமும் தங்களுக்கென தனித்தனி வழிமுறைகளை வைத்துள்ளன. எடுத்துக்காட்டாக பொது முடக்கம் நீக்கப்பட்டுப் பல மாதங்களுக்குப் பின்னர் டெல்லியிலிருந்து கொரோனா குறைவாக உள்ள ஒரு நகரத்திற்குப் பயணிக்கும் ஒருவர் 14 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படலாம்.

வருங்காலத்தில் சர்வதேச விமானத்தில் பயணிக்கும் பயணிகள், மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படும். பயணிகளுக்கும், விமான ஊழியர்களுக்கும் இடையிலான தொடர்பைக் குறைக்க முன்பே தயாரிக்கப்பட்டு பேக் செய்யப்பட்ட உணவுகள் வழங்கப்படும்.

விமானம் கிளம்புவதற்கு முன்பு புற ஊதா தொழில்நுட்பம் மூலம் சுத்தப்படுத்த வேண்டும் என இந்திய விமான போக்குவரத்துத்துறை கூறியுள்ளது என்கிறார் அஷ்வினி.

மேலும் பயணிகளும், விமான ஊழியர்களும் முகக் கவசம் அணிவதைக் கட்டாமாக்க அரசு திட்டமிட்டுள்ளது எனவும் கூறப்படுகிறது.

ரயில் பயணம்

இந்தியாவில் ரயில் பயணத்தைப் பாதுகாப்பானதாக மாற்றுவது மிகப்பெரிய சவாலாக இருக்கும். சமூக இடைவெளியை உறுதிப்படுத்த ஒவ்வொரு ரயில் பெட்டிகளிலும் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளே அனுமதிக்கப்படுவார்கள் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கழிவறை பகுதிகளில் வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க, கழிவறையின் உள்ளே ஆட்கள் இருக்கிறார்களா அல்லது இல்லையா என தெரியப்படுத்த சில மாற்றங்களை அதிகாரிகள் செய்ய உள்ளனர்.

ரயிலில் வழக்கம் போல உணவு வழங்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அப்படி வழங்கப்பட்டாலும் முன்பே பேக் செய்யப்பட்ட உணவு மட்டுமே வழங்கப்படலாம். அந்த காலத்திலிருந்தது போல, பயணிகள் தங்களுக்கான போர்வை, தலையணைகளை இனி கொண்டு வர வேண்டியிருக்கும்.

‘’விமான நிலையத்தில் இருப்பது போன்ற வழிமுறைகள் இனி ரயில் நிலையங்களிலும் இருக்கும். ரயில் புறப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே பயணிகள் வர வேண்டும். விமான நிலையத்தில் இருப்பது போல, பயணிகள் சோதிக்கப்படுவார்கள்’’ என்கிறார் அஷ்வினி.

ரயில் பெட்டிகளில் உள்ள கழிவறைக்கு வெளியே சானிடைசர் வைக்கப்படும். பயணிகளும் சானிடைசர் கொண்டுவருவது கட்டாயமாக்கப்படும்.

நெடுஞ்சாலை பயணம்

இந்தியாவில் ஒரு மாநிலத்திலிருந்து இன்னொரு மாநிலத்திற்குச் செல்ல நெடுஞ்சாலைகள் மிக முக்கியமானவை. நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் உணவகங்களும், தாபாக்களும் இனி வித்தியாசமானதாக இருக்கும்.

’’வருங்காலத்தில் நெடுஞ்சாலைகளில் பயணிப்பவர்கள் உணவகங்களில் நின்று உணவுகளை வாங்கிச்செல்ல மட்டுமே அனுமதிக்கப்படும்’’ என்கிறார் சாலை போக்குவரத்து சங்கத்தின் உறுப்பினர் ராஜிவ் அரோரா.

’நெடுஞ்சாலை உணவகங்களில் சமூக இடைவெளியை விட்டு உணவுகளை வாங்கிச்செல்ல வேண்டும். லாரி ஓட்டுநர்கள் மற்றும் பயணிகளுக்கு ஏற்றவாறு தனித்தனி ஏற்பாடுகளை உணவகங்கள் செய்யலாம்’’ என்கிறார் அவர்.

நெடுஞ்சாலைகள் பல மாநிலங்களைக் கடந்து செல்வதால், உணவகங்கள் எப்படி இயங்க வேண்டும் என்பது குறித்து ஒவ்வொரு மாநிலமும் தனித்தனி வழிமுறைகளை வெளியிடும்.

மெட்ரோ பயணம்

டெல்லி மெட்ரோ சேவை தொடங்கப்பட்டால் எதிரெதிர் இருக்கையில் அமரும்படி பயணிகள் அறிவுறுத்தப்படுவார்கள். வெகு சிலர் மட்டுமே நின்று பயணிக்க அனுமதிக்கப்படுவர் என டெல்லி மெட்ரோ செய்தி தொடர்பாளர் அனுஜ் தயால் கூறியுள்ளார்.

அலுவலகத்திற்கு வேலைக்குச் செல்லும் காலை நேரத்தில் இது மிகப்பெரிய சிக்கலாக அமையும். விமான நிலையத்தில் கடைப்பிடிக்கப்படும் அதே விதிமுறைகளே மெட்ரோ நிலையத்தின் வாயிலிலும் கடைப்பிடிக்கப்படும்.

வரிசையில் நிற்கும் போது சமூக இடைவெளியை கடைப்பிடிக்க ஏதுவாக தரையில் வட்டம் வரையப்பட்டு இருக்கும். தெர்மல் ஸ்கிரீனிங் மற்றும் பைகளை சோதனையிடும் எக்ஸ்ரே பேக்கேஜ் ஸ்கிரீனிங் ஆகியவை தொடரும்.

ஆனால் இவ்வாறு செய்ய வேண்டுமானால் அதிக மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட வேண்டும். ரயில் பெட்டிகளில் அதிகம் பேர் ஏறாமல் பார்த்துக்கொள்ள பிளாட்ஃபாரத்தில் ஒவ்வொரு பெட்டிக்கும் ஒன்று அல்லது இரண்டு பாதுகாவலர்கள் நியமிக்கப்படுவர்.

ராஜீவ் சௌக் போன்ற பெரிய மெட்ரோ நிலையங்களில் மக்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்த ஏற்கனவே இது போன்ற பாதுகாவலர்கள் இருப்பார்கள். ஆனால் இது போன்ற ஒரு நிலையில் மக்களைக் கட்டுப்படுத்துவது என்பது மிகப் பெரிய வேலை என்கிறார் மெட்ரோ கார்பரேஷன் அதிகாரி. இது குறித்து தற்போது ஆலோசனை நடந்து வருகிறது.

காப்பீடு

அனைத்து பயணத்திற்காகவும் காப்பீடு எடுக்கும் நிலை எதிர்காலத்தில் வரும் என்கிறார் துபாயைச் சேர்ந்த இன்சூரன்ஸ் வணிக குழுவின் தலைமைச் செயலாளரான அஃப்தாப் ஹாசன்.

கோவிட்-19க்கு பிறகு உலகம் வேறு மாதிரி இருக்கும். பொதுவாக இளைஞர்கள் விமான பயணச்சீட்டு புக் செய்யும்போது அல்லது சுற்றுலாவுக்கு செல்லும்போதும் பணத்தை சேமிப்பதற்காக இன்சூரன்ஸ் திட்டத்தை எடுக்க மாட்டார்கள். ஆனால் உலகம் தற்போது மாறிவிட்டது. ஒருவர் வேலை நிமித்தமாக வெளிநாடு சென்றாலும் சரி இல்லை சுற்றுலாவுக்குச் சென்றாலும் சரி இன்சுரன்ஸ் எடுப்பது மிக அவசியமானதாகப் போகிறது.

பெருந்தொற்று என்பது பொதுவாகப் பயண இன்சூரன்ஸின் கீழ் வராது. அதற்கு தனியாக கூடுதல் பிரீமியம் செலுத்த வேண்டும். ஆனால் எதிர்கால பயண இன்சூரன்ஸில் இந்த பெருந்தொற்று முக்கிய ஒன்றாக மாறும் என்கிறார் ஹாசன்.

எதிர்காலத்தில் நாம் பார்க்கப்போவது யாரும் எதிர்பார்க்காத ஒன்று என்கிறார் சுற்றுலா வழிகாட்டியான ஷாம்சுதீன்

’’சரியான நேரத்தில் தடுப்பு மருந்து கண்டறியப்படவில்லையென்றால் பயணிகள் பயணிக்கும் விதம் அனைத்தும் மாறிவிடும் என கூறும் அவர், தடுப்பு மருந்துகள் விரைவில் வந்துவிட்டால் பழைய நிலைக்குத் திரும்பி விடலாம் என்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: