கொரோனா வைரஸ்: ஏழைகளுக்கு பணமளிக்கும் மத்திய அரசின் திட்டம் தொடருமா?

  • ஜுகல் புரோகித்
  • பிபிசி
கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்

ஏழை மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக பணம் செலுத்தும் திட்டத்தை அரசு கட்டாயம் தொடர வேண்டும் என இந்திய அரசின் தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன் பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்ட பிறகு மக்களின் வங்கிக் கணக்குக்கு நேரடியாகப் பணம் செலுத்தும் திட்டம் துவங்கப்பட்டது. இத்திட்டம் இந்த மாதத்துடன் முடிவடைகிறது.

இந்த பணம் செலுத்தும் திட்டம் தொடர்வதற்கான தேவை உள்ளதா? இத்திட்டம் இந்த மாதத்துடன் நிறுத்தப்படுமா அல்லது நீட்டிக்கப்படுமா? என கேட்டதற்கு, ''ஜன் தன் - ஆதார் - அலைபேசி என்ற ஒருங்கிணைந்த அமைப்புமுறை நம்மிடம் உள்ளது. இது நாட்டிற்குப் பயனளித்துள்ளது. பணம் செலுத்தும் திட்டம் இப்போது முடிவடைகிறது. ஆனால், அது தொடர வேண்டும் என்பது எனது கருத்து'' என்கிறார் கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியன்.

கடந்த மார்ச் 26-ம் தேதி செய்தியாளர்களை சந்தித்த இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏழை மக்களுக்கு மத்திய அரசு வழங்கி வரும் உதவிகள் குறித்து விவரித்தார். அதில் ஜன் தன் கணக்கு வைத்துள்ள 20 கோடி பெண்களுக்கு மாதம் 500 ரூபாய் வீதம் மூன்று மாதங்களுக்கு வழங்குவது, எட்டு கோடி ஏழை குடும்பங்களுக்கு மூன்று மாதங்கள் இலவச சமையல் எரிவாயு, மூன்று கோடி விதவை பெண்களுக்கு மூன்று மாதங்களுக்கு மாதம் 1,000 வழங்குவது போன்ற திட்டங்களை நிதியமைச்சர் அறிவித்தார்.

ஆனால், இந்த திட்டங்களை நீட்டிப்பதா அல்லது இல்லையா என்பது குறித்த முடிவை அரசு எப்போது வெளியிடும் என்று தெரியவில்லை.

சுயச்சார்பு இந்தியா - "இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை"

கடந்த மாதம் மத்திய அரசு அறிவித்த சுயசார்பு இந்தியா தொகுப்புதவி திட்டத்தை ஆய்வு செய்த சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல். நிறுவனம், அதன் வாயிலாக வழங்கப்படும் கடன் மற்றும் உத்தரவாதங்களின் மதிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஐந்து சதவீதமோ அல்லது மொத்த தொகுப்புதவியில் பாதி அளவோ இருக்குமென மதிப்பிட்டது.

'போதிய வலுவற்ற தொகுப்புதவி திட்டம்' என இதை குறிப்பிட்ட சி.ஆர்.ஐ.எஸ்.ஐ.எல், கடன் வழங்க வங்கிகள் தெரிவிக்கும் விருப்பத்தை வைத்தே அதன் வெற்றி அமையும் என்றது. மேலும், வாரா கடன்களின் உயர்வால் வங்கிகள் தொடர்ந்து கவலையில் இருப்பதால், இதுபோன்ற ஆபத்தான கடனுதவி வழங்குவதில் இருந்து வங்கிகள் தொடர்ந்து விலகியிருக்க வேண்டும், மேலும், அத்தகைய கடன், மேலதிக சரிவுக்கு வழிவகுக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்தது.

இதற்கு பதிலளித்த சுப்ரமணியன், தொகுப்புதவி திட்டத்தின் முக்கிய அம்சமே மூன்று லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்குவதுதான் என்றும் நூறு சதவீத உத்தரவாதம் என்பது ஆபத்து ஏதுமில்லை, இழப்பை அரசு சரிசெய்யும் என்று வங்கிகளுக்கு தெரிவிப்பதுதான் என்றும் கூறினார்.

"இதற்கு மத்தியில், நிறுவனங்கள் இந்த ஆண்டு கடன் தொகையை செலுத்தத் தேவையில்லை. முதலாவது ஆண்டிலிருந்து அவை விடுவிக்கப்படுவதால் கடனை செலுத்த அவற்றுக்கு மேலும் நான்கு ஆண்டுகள் கிடைக்கும். அடுத்த ஆண்டு மீண்டும் நாம் 8 - 8.5 சதவீத வளர்ச்சியை எட்டுவோம் என நம்புகிறோம். அப்போது சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள், கடனை செலுத்தக்கூடிய நிலையில் மேம்பட்டிருக்கும். வெவ்வேறு அளவில் வங்கிகள் தங்களின் நிலையை எட்டுவதற்கு மற்ற நடவடிக்கைகள் உள்ளன'' என்று சுப்ரமணியன் கூறினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

நிர்மலா சீதாராமன்

மேலும் அவர், இந்த திட்டத்தின் அமலாக்கம் தொடர்பாக வங்கிகளுடன் இந்திய நிதியமைச்சர் பேசி வருவதாகவும், வங்கிகளின் கடன் வழங்கும் நடவடிக்கைகள் உன்னிப்பதாக கவனிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தி வயர் இதழிடம் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேசுகையில், கடன் வழங்குவதை மட்டுமே தொகுப்புதவி திட்டம் சார்ந்திருப்பது குறித்த கவலைகளை வெளியிட்டிருந்தார். மேலும், இந்திய பொருளாதாரம் மீது இப்போதிலிருந்து அடுத்த ஓராண்டுக்கு அதன் முந்தைய சுமை ஒரு நிழல் போலத் தொடரும் என்றும் அவர் கூறியிருந்தார்.

இதற்கு பதில் அளித்த சுப்ரமணியன், இத்தகைய விஷயங்களில் சாதகமான மற்றும் எதிர்மறையான கருத்துகள் இருக்கவே செய்யும் என்றார்.

இதற்கிடையே, ரகுராம் ராஜனின் விமர்சனங்களுக்குப் பதில் அளித்த அவர், ''நாம் தொடர்ந்து முன்னோக்கி செல்வோம் என்று தெரிவித்தது நிதியமைச்சரே தவிர, நான் இல்லை. இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்துள்ள நிலையில், இன்னும் பத்து மாதங்களை நாம் கடக்க வேண்டும். ரகுராம் ராஜன் எனது வழிகாட்டி, அவரை வெகுவாக மதிப்பவன் நான்'' என்று சுப்ரமணியன் கூறினார்.

இந்த விவகாரத்தில் பிபிசி கேள்வி எழுப்பியபோது, பிரச்சனைகளை பற்றி பேசலாமே தவிர தனி நபர்கள் பற்றி வேண்டாம் என்றும் சுப்ரமணியன் கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசு அறிவித்த சுயச்சார்பு இந்தியா தொகுப்பு நிதியுதவி திட்டத்தை உள்நாட்டு உற்பத்திக்கான ஆதரவாகவும், வெளிநாட்டுப் பொருட்களுக்கான புறக்கணிப்பாகவும் பார்க்கப்படுவது குறித்து பேசிய அவர், "இந்திய உள்நாட்டுச் சந்தையிலும், ஏற்றுமதியிலும் இந்திய நிறுவனங்களும், வெளிநாட்டு நிறுவனங்களும் ஈடுபட வேண்டும். நாம் திறந்த மனதுடன் போட்டிகளை அனுமதித்தால் மட்டுமே, நமது திறன் மேம்படும். ஆனால், இங்கே ஒரு முக்கியமான கருத்தை பற்றி நாம் பேச வேண்டும். நமது எதிரி நாட்டிடம் அல்லது நம்மிடம் பிரச்சனையில் உள்ள நாட்டிடம் இருந்து பொருட்களை வாங்க வேண்டுமா என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. இதை எங்களால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே சமயம் நம்மிடம் நல்ல உறவில் இருக்கும் நாடுகளிலிருந்து நாம் பொருட்களை வாங்குவதன் மூலம் இரு நாடுகளுக்கு நல்ல பலன் கிடைக்கிறது'' என்கிறார்.

பட மூலாதாரம், Getty Images

புலம்பெயர் தொழிலாளர் பிரச்சனையும் சம்பள உயர்வும்

புலம்பெயர் தொழிலாளர்கள் ஊர் திரும்புவது நாட்டின் பொருளாதாரத்தில் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தும் என கேட்டதற்கு, "குறைந்த காலத்திற்கு தொழிலாளர்களின் ஊதியம் அதிகரிக்கும். ஊழியர்களின் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், தொழிற்சாலைகள் மீண்டும் திறக்கப்படுகின்றன. அங்கு ஊழியர்களுக்கான தட்டுப்பாடு உள்ளது. இதனால் அதிகரிக்கும் சம்பளம், ஊர் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்களை மீண்டும் நகரத்திற்கு வரத் தூண்டும். இது ஒரு சுழற்சியான விஷயம். அதிக தொழிலாளர்கள் வேலைக்கு வரும்போது ஊதியமும் நிலையாகும்'' என்கிறார் சுப்ரமணியன்.

அரசுக்கும் சில எல்லைகள் உள்ளன

இந்தியாவின் கிராமப்புற பகுதிகளில் மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளைத் துவங்குவதற்கு ஏப்ரல் 20-ம் தேதி முதல் சில தளர்வுகள் வழங்கப்பட்டது. இது எந்த அளவுக்கு பலன் அளித்துள்ளது?

''தற்போது ரேஷன், காய்கறி, தினசரி பயன்படுத்தும் பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களின் விற்பனை கிட்டதட்ட கடந்த ஆண்டை போல அதே அளவில் உள்ளது. பொது முடக்கத்தின் போது இந்த பொருட்களின் விற்பனை பாதிக்கப்பட்டிருந்தது. கார், வீடு, நகை போன்ற விலையுயர்ந்த பொருட்களை வாங்குவதற்கு மக்கள் யோசிக்கின்றனர். பொது முடக்கக் காலத்தில் தேவையான பணம் கையில் இருக்க வேண்டும் என மக்கள் நினைக்கிறார்கள்'' என்கிறார் அவர்.

"பொருளாதார நெருக்கடியால் ஏற்படும் நிச்சயமற்ற தன்மையை அரசால் சமாளிக்க முடியும். ஆனால், தற்போது ஏற்பட்டிருப்பது சுகாதார பிரச்சனை. தடுப்பூசி கண்டுபிடிக்கும் வரை அரசால் எவ்வளவுதான் சமாளிக்க முடியும் என்பதில் சில வரம்புகள் உள்ளன. இதற்கான தீர்வு உலகில் எந்த அரசிடமும் இல்லை. சில துறைகளில் ஏற்பட்ட இழப்பை சரி செய்வது மிக கடினம். இந்த நிலையற்ற தன்மை நீடிக்கும் வரை, இதன் தாக்கம் இருக்கும்'' என விளக்கினார் சுப்ரமணியன்

பட மூலாதாரம், Getty Images

மத்திய- மாநில அரசுகளின் ஒருங்கிணைப்பு

மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து நடத்திய பேச்சுவார்த்தையின் முடிவாக மே 25ஆம் தேதி முதல் இந்தியாவில் உள்நாட்டு விமானங்களின் சேவை துவங்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் இதுபோன்ற ஒருங்கிணைப்பு இருக்குமா?

"'பல விஷயங்களில் மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து செயல்படுகின்றன. உதாரணமாகத் தொழிலாளர் சீர்திருத்தங்களை எடுத்துக்கொண்டால், 17-18 மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்படுகின்றன. இப்போது ஒருங்கிணைந்து எடுக்கும் முடிவுகளுக்கான பலன்கள் உடனடியாக கிடைக்காது. அதற்கு பத்தாண்டுகள் பிடிக்கும். சுயச்சார்பு இந்தியா திட்டத்தை எடுத்துக்கொண்டால், அதில் விவசாயம், தொழிலாளர், நிலம் உள்ளிட்டவற்றில் பல சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலானவை மாநில பட்டியல் அல்லது பொது பட்டியலில் உள்ளது. மாநில அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டால் மட்டுமே, இந்த சீர்திருத்தங்கள் சாத்தியமாகும்'' என்றார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: