கொரோனாவுக்கான மருந்தைச் செயற்கை நுண்ணறிவு முதலில் கண்டுபிடிக்குமா?

  • ஜுபைர் அகமது
  • பிபிசி
கொரோனாவுக்கான மருந்தைச் செயற்கை நுண்ணறிவு முதலில் கண்டுபிடிக்குமா?

பட மூலாதாரம், Getty Images

கொரோனா பெருந்தொற்றுக்கு மருந்து கண்டுபிடிப்பதில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் தீவிர போட்டியில் உள்ளன. கொரோனாவுக்கான மருந்தை கண்டறியும் முயற்சியில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்ப நிபுணர்களுடன் இணைந்து விஞ்ஞானிகள் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு முந்தைய காலத்தில் ஒரு தடுப்பூசியையோ அல்லது மருந்தையோ கண்டுபிடிக்கப் பல ஆண்டுகள் ஆனது.

''பல்வேறு வகையான வேதியல் கலவைகளை சேர்த்து மருந்துகளின் மூலக்கூறுகளைக் கண்டுபிடிக்க முன்பெல்லாம் பல ஆண்டுகள் ஆகின. பின்னர் அது விலங்குகள் மீது சோதிக்கப்படும். இது நேரம் எடுக்கும் செயல்முறை. ஆனால், இப்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பத்தால் சில நாட்களில் மருந்துகளின் மூலக்கூறுகளை உருவாக்க முடியும்'' என்கிறார் நியூயார்க்கில் வசிக்கும் மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவு குறித்த நிபுணரான யோகேஷ் சர்மா.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள பிரிட்டனைச் சேர்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனமான போஸ்ட்எரா, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. உலகின் வேதியியலாளர்களின் கூட்டு அறிவை, தங்கள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு வழிமுறைகளுடன் இணைத்து மருந்தை கண்டுபிடிக்க போஸ்ட்எரா முயன்று வருகிறது எனக் கூறுகிறது ஒரு முன்னணி மருந்து தொழில்துறை இதழ்.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய முதல் இரண்டு மாதங்களில், கொரோனா தொற்றை உறுதிப்படுத்த 'ஸ்வாப்' பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டது. தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் உள்ள நீர்த்துளிகளை சேகரித்துச் செய்யப்படும் இந்த ஸ்வாப் பரிசோதனையில், முடிவுகள் வருவதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆனது. இதில் உள்ள காலதாமதத்தால் கொரோனா வேகமாகப் பரவியது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவத்தொடங்கிய முதல் இரண்டு மாதங்களில், கொரோனா தொற்றை உறுதிப்படுத்த 'ஸ்வாப்' பரிசோதனை மட்டுமே செய்யப்பட்டது. தொண்டை மற்றும் மூக்கு பகுதிகளில் உள்ள நீர்த்துளிகளை சேகரித்துச் செய்யப்படும் இந்த ஸ்வாப் பரிசோதனையில், முடிவுகள் வருவதற்கு இரண்டு முதல் ஐந்து நாட்கள் வரை ஆனது. இதில் உள்ள காலதாமதத்தால் கொரோனா வேகமாகப் பரவியது.

கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க மட்டுமல்ல, அதன் பரவலைத் தடுக்கவும் செயற்கை நுண்ணறிவு இப்போது பயன்படுத்தப்படுகிறது.

எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் மூலம் ஐந்து நிமிடங்களில் கொரோனா பரிசோதனை முடிவுகளைப் பெறலாம் என்கிறார் இஎஸ்டிஎஸ் மென்பொருள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பியூஷ் சோமனி.

''நாங்கள் கண்டுபிடித்துள்ள AA+ கோவிட்-19 பரிசோதனையில் முதலில் மார்புப்பகுதியில் எக்ஸ்ரே எடுப்போம். இந்த பரிசோதனையில் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் தொழில்நுட்பங்களை ஒருங்கிணைத்து பயன்படுத்தியுள்ளோம். இதன் மூலம் ஐந்து நிமிடங்களுக்குள் ஒருவருக்கு கொரோனா உள்ளதா இல்லையா என்ற முடிவு கிடைத்துவிடும். இந்த தனித்துவமான, விலை மலிவான பரிசோதனை முறையை அரசு மருத்துவமனைகள் ஏற்றுக்கொண்டுள்ளன. இது 98% துல்லியமான முடிவுகளை வழங்குகிறது. கோவிட்-19 உடன் நுரையீரல் தொடர்பான வேறுபல நோய்த்தொற்றுகளை கொண்டுள்ளவர்களுக்கு எடுக்கப்படும் பரிசோதனையில், இது 87% துல்லிய முடிவுகளை அளிக்கிறது'' என்கிறார் பியூஷ்.

பட மூலாதாரம், Getty Images

எக்ஸ்ரே பரிசோதனை கோவிட்-19 நோயாளிக்குப் பாதுகாப்பு இல்லை என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் ஆரம்பத்தில் தடை விதித்தது. ஸ்வாப் பரிசோதனையை மட்டுமே அரசு நம்பியிருந்ததால்தான் கொரோனா வைரஸ் இந்தியாவில் இந்தளவுக்குப் பரவியுள்ளது என்கிறார் பியூஷ்.

தற்போது எக்ஸ்ரே மற்றும் சிடி ஸ்கேன் பரிசோதனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. அதிகளவிலான பரிசோதனைகள் எடுக்கப்படுவதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

பியூஷின் நிறுவனம் மட்டுமே ஒவ்வொரு நாளும் 10 ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து வருகிறது. ''கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பதற்கு ஏற்படும் தாமதத்தைத் தொழில்நுட்பம் மூலம் குறைத்து மருத்துவர்களுக்கு உதவ வேண்டும் என நாங்கள் விரும்பினோம்'' என்கிறார் பியூஷ்.

செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பம் மருத்துவத்துறையில் ஆழமாகத் தடம் பதித்துள்ளது. சிக்கலான அறுவை சிகிச்சைகளைச் செய்வதற்கு இந்திய மருத்துவத்துறையில் ஏற்கனவே செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

பட மூலாதாரம், Getty Images

இந்தியாவில் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை சாத்தியமாவதற்குச் செயற்கை நுண்ணறிவுதான் முக்கிய காரணம். வழக்கமான அறுவை சிகிச்சைகளுக்கு அதிக நேரம் ஆகும். நோயாளி குணமடைவதற்கும் நீண்ட காலம் ஆகும். இதனால் அவர் அதிக காலம் மருத்துவமனையில் இருக்க வேண்டியிருக்கும். ஆனால், ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சையால் நேரமும் பணமும் மிச்சம்.

இந்தியாவில் 500க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

செயற்கை நுண்ணறிவு காலம்

ரோபோடிக்ஸ் அறுவை சிகிச்சைக்கான கருவிகளும் அதற்காகப் பயன்படுத்தப்படும் மென்பொருளும் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை.

மருத்துவத்துறையில் பல தொழில்நுட்ப புரட்சிகளைச் செய்துவரும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்காவிலும் சீனாவிலும் உள்ளன.

கூகுள், மைக்ரோசாப்ட், அலிபாபா, பைடு போன்ற நிறுவனங்கள் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலில் அதிகளவு முதலீடு செய்துள்ளன.

சீனாவில் 16 மில்லியன் டாலர் மதிப்பிலான இந்த தொழில், ஒவ்வொரு ஆண்டும் 40 சதவீதம் வளர்ச்சியடைந்து வருகிறது.

அமெரிக்க மற்றும் சீன நிறுவனங்கள் இணைந்து செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி வருகின்றன.

பட மூலாதாரம், Getty Images

நாம் எப்படி வாழப்போகிறோம். எப்படி நம் ஆரோக்கியத்தைப் பார்த்துக்கொள்ளப்போகிறோம் என்பதில் இந்த தொழில்நுட்பம் பெரிய மாற்றங்களை ஏற்படுத்த உள்ளது.

செயற்கை நுண்ணறிவு சிரிக்கக்கூடிய மற்றும் அழக்கூடிய ஒரு குழந்தையை உருவாக்கியுள்ளது. குளோன் செய்யப்பட்ட மனிதனையும் உருவாக்கியுள்ளது.

ரோபோக்களை உருவாக்கிய பிறகு, தற்போது அதற்கு மனிதர்களின் உணர்ச்சியையும், பார்வையையும் கொடுக்க விஞ்ஞானிகள் முயன்று வருகின்றனர்.

ஆனால், இது எங்குச் சென்று முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. பிரபல விஞ்ஞானியான ஸ்டீபன் ஹாக்கிங், ''இதுவரை நாம் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மிகவும் பயனுள்ளதாகவும் உதவியாகவும் இருந்தது. ஆனால் ரோபோக்களுக்கு நாம் அதிகம் கற்பித்தால், அவை மனிதர்களை விட புத்திசாலியாகிச் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்'' என கூறியிருக்கிறார்.

இருப்பினும் இந்த துறையில் ஏற்படும் முன்னேற்றங்களுக்குத் தடையே இருப்பதில்லை. மிக விரைவில் திறன்பேசி வைத்திருக்கும் ஒரு நபர் தனக்கான மருத்துவராக மாற முடியும். ஒரு கைத்தேர்ந்த மருந்துவரை விட, ஒரு நபரின் திறன்பேசி அவர் உடல்நிலை பற்றிய தகவல்களைத் துல்லியமாக வழங்கும். 2022இல் 44 கோடி திறன்பேசி பயன்பாட்டாளர்களுடன் செயற்கை நுண்ணறிவு இந்திய மருத்துவத்துறையில் மிகப்பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தக்கூடும். இதனை நெறிமுறைப்படுத்தினால், தற்போது 66 வருடங்களாக உள்ள இந்தியர்களின் ஆயுட்காலம் மேலும் பல ஆண்டுகள் அதிகரிக்கும்.

செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?

ஒரு கணினியை மனிதர்கள் போலச் சிந்திக்கவும், இயங்கவும் வைப்பதுதான் செயற்கை நுண்ணறிவு என நிபுணர்கள் கூறுகின்றனர். இது இயந்திரத்துக்குப் பயிற்றுவிக்கப்பட்டதை அடிப்படையாகக் கொண்டு, கிடைக்கும் தகவல்கள் மூலம் முடிவுகளை எடுக்கும்.

பட மூலாதாரம், Getty Images

இதற்கு நிறையத் துல்லியமான தரவுத் தொகுப்பு தேவை. தவறுகளை இயந்திர கற்றல் மற்றும் அல்காரிதம்கள் மூலம் சரி செய்யலாம். இந்த காலத்தில் தரவு எவ்வளவு முக்கியம் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது.

அரசு நாடாளுமன்றத்தில் அளித்த தகவலின்படி, இந்தியாவில் 1000 மக்களுக்கு ஒன்றுக்கும் குறைவான மருத்துவர்கள் உள்ளநிலையில், செயற்கை நுண்ணறிவு இந்தியாவின் மருத்துவத்துறையை மாற்றக்கூடும்.

இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு

நிடி ஆயோக் அமைப்பு செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் குறித்த கலந்துரையாடலுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அழைப்பு விடுத்தது. ''செயற்கை நுண்ணறிவு அனைவருக்குமானது'' என்பது அதன் தலைப்பாக இருந்தது.

மருத்துவம், விவசாயம், கல்வி போன்ற துறையில் இந்த தொழில்நுட்பத்தால் இந்தியாவிற்குப் பலன் கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்தியாவால் சீனாவுடன் போட்டிப்போட முடியாது என நிடி ஆயோக் அறிக்கை ஒப்புக்கொள்கிறது. ஆனால், மேற்குலக மற்றும் சீன நிறுவனங்கள் இல்லாத சந்தையில் தடம் பதிக்க இந்தியாவுக்கு வாய்ப்பு உள்ளது எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை இந்தியாவில் பிரபலப்படுத்த எடுக்கப்பட்ட முதல் அடி இது. ஆனால், அதன் பிறகு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

''இந்தியாவில் வெகு சில நிறுவனங்களே மருத்துவத்துறையில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றன. ஆனால், இந்தியாவுடன் ஒப்பிடும்போது உலகளவில் செயற்கை நுண்ணறிவை ஏற்றுக்கொள்ளும் விகிதம் அதிகமாக உள்ளது'' என்கிறார் பியூஷ்.

தற்போது புதியதொரு பெருந்தொற்றை உலகம் சமாளிக்க முடியாமல் திணறிவரும் நிலையில், இதைக் கட்டுப்படுத்த செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர். குறிப்பாக இந்தியாவில் பருவகால மருத்துவ அரசத்தின்போது ஏராளமான மக்களுக்கு ஒரே நேரத்தில் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கவேண்டியுள்ளது. இந்தநிலையில் மனிதர்களை விட வேலையை மேகமாகச் செய்யத் தயாராக இருப்பதைச் செயற்கை நுண்ணறிவு நமக்கு நிரூபித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: