உணவில் வெடிமருந்து: சிதைந்தது சினைப் பசுவின் வாய்

உணவில் வெடிமருந்து

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

(கோப்புப்படம்)

வெடிமருந்து மறைத்து வைக்கப்பட்டிருந்த பழத்தை சாப்பிட்ட யானை ஒன்று கேரளாவில் உயிரிழந்த சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள், இமாச்சலப் பிரதேசத்தில் மற்றொரு கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இமாசலப் பிரதேசத்தில் உணவுப்பொருளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிமருந்து வெடித்ததில் அதை சாப்பிட முற்பட்ட சினைப் பசு ஒன்றின் வாய் முற்றிலும் சிதைந்துவிட்டது என்று செய்திகள் தெரிவிக்கின்றன.

கடந்த மே மாதம் 25ஆம் தேதி இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படும் நிலையில், நேற்று (சனிக்கிழமை) அந்த மாட்டின் உரிமையாளர் காணொளி ஒன்றை சமூக ஊடகத்தில் வெளியிட்ட பிறகே இதுகுறித்த தகவல் பொதுவெளிக்கு வந்துள்ளது.

இமாச்சலப் பிரதேச மாநிலம் பிலாஸ்பூர் பகுதியை சேர்ந்த குர்தியால் சிங் என்பவருக்கு சொந்தமான பசு மாடு, கடந்த மே மாதம் 25ஆம் தேதி அவரது வீட்டிற்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கோதுமை உருண்டையை சாப்பிட முற்பட்டபோது அதிலிருந்த வெடிமருந்து வெடித்ததாக உள்ளூர் காவல்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக, கர்ப்பிணி பசுவின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

"இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் மற்றும் விலங்குகள் கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், கைது செய்யப்பட்டுள்ள நபர் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்" என்று ஜன்துட்டா காவல்நிலைய ஆய்வாளர் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

சினைப் பசுவின் தற்போதைய நிலை என்ன?

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் பொதுவாக காட்டு பன்றிகளை பிடிப்பதற்காக வைக்கப்படும் பொறியை சினைப் பசு தவறுதலாக சாப்பிட்டதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பிலாஸ்பூர் பகுதியைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர் ஒருவர் கூறியுள்ளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த சம்பவம் நடைபெற்ற மறு நாள், அதாவது மே 26ஆம் தேதி அந்த மாடு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. பிறகு, மாட்டின் உடல்நிலையை கருத்திற்கொண்டு, பிரசவத்தை தூண்ட செய்ததில், காளைக் கன்று ஒன்று பிறந்தது. எனினும், வெடிபொருள் வெடித்ததில் பசுவின் மேல் மற்றும் கீழ்த்தாடைகள் முற்றிலும் சிதைந்துவிட்டதால் அதனால் உணவு உட்கொள்ள முடியாத சூழ்நிலை நிலவுகிறது" என்று அவர் மேலும் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சமூக ஊடகங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ள இந்த விவகாரத்தில் பலரும் #JusticeforNandini என்ற ஹேஷ்டேகில் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

கேரளாவில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், MOHAN KRISHNAN / FACEBOOK

படக்குறிப்பு,

மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாறு நதியை விட்டு வெளியே வரவில்லை

கேரளாவில் அன்னாசி பழத்துக்குள் வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை உட்கொண்டதில் கருவுற்ற யானை ஒன்று கடந்த வாரம் பரிதாபமாக உயிரிழந்தது.

உயிரிழந்த யானைக்கு சுமார் 14-15 வயது இருக்கும் என கேரள வனத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.

மிகுந்த வலியில் இருந்த அந்த யானை, அது உயிருடன் இருந்த கடைசி மூன்று நாட்களில், வெள்ளையாற்றை விட்டு வெளியே வரவில்லை என்றும் பிறகு மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த யானையின் வாய் மற்றும் தும்பிக்கை பகுதி மூன்று நாட்களாக நீருக்குள்ளேயே இருந்துள்ளது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தவே, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகளை அமைத்த மாநில அரசு இதுவரை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: