கொரோனா வைரஸ்: தமிழகத்தில் ஒரே நாளில் 1,515 பேருக்கு தொற்று பாதிப்பு

பட மூலாதாரம், ARUN SANKAR
தமிழகத்தில் இன்று (ஜூன் 7) புதிதாக 1,515 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதால், கோவிட்-19 நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 31,667-ஆக உயர்ந்துள்ளது.
இதில் சென்னையில் மட்டும் ஒரே நாளில் 1,155 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவால் இன்று 18 நபர்கள் இறந்துள்ள நிலையில், இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 269-ஆக உயர்ந்துள்ளது என மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இன்று இறந்த 18 நபர்களில், 13 நபர்கள் அரசு மருத்துவமனைகளிலும், ஐந்து நபர்கள் தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்று வந்தவர்கள் ஆவர். இறந்தவர்களில் ஒருவரை தவிர மற்றவர்கள் 50 வயதிற்கு மேற்பட்டவர்கள். ஒருவர் மட்டும் 20 வயது நபர். இவர் வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துவந்த கர்ப்பினி பெண் ஆவார்.
இறந்தவர்கள் பெரும்பாலானவர்களுக்கு நாள்பட்ட வியாதிகளான உயர் ரத்தஅழுத்தம், சிறுநீரக கோளாறு, பல உறுப்புகள் செயலற்ற நிலை, மூச்சுதிணறல் மற்றும் சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- கொரோனா சந்தேகங்கள்: முக்கிய கேள்விகளும் அதற்கான பதில்களும்
- கொரோனா வைரஸ்: உடலில் பரவுவது எப்படி? - விரிவான அறிவியல் விளக்கம்
- கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?
- கொரோனா பரவல் தீவிரமானால் இந்தியாவால் சமாளிக்க முடியுமா?
- முறையாக கை கழுவுதல் எப்படி?
- கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் 5 எளிய வழிகள்
- கொரோனா வைரஸ் அச்சங்களுக்கு நடுவில் உங்கள் மனநலத்தை பாதுகாப்பது எப்படி?
- கொரோனா வைரஸ் தடுப்பூசி எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இன்று பாதிப்புக்கு உள்ளான 1,515 நபர்களில் 18 நபர்கள் வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து திரும்பியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள், சௌதி அரேபியா, குவைத், மஹாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், டெல்லி மற்றும் ஆந்திரா பிரதேசம் உள்ளிட்ட இடங்களிலிருந்து தமிழகம் வந்தவர்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அதிக பாதிப்புகளை கொண்டுள்ள சென்னை நகரத்தில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22,149ஆக உயர்ந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், இன்று ஒரே நாளில் 1,155 நபர்களுக்கு பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. சென்னை மாவட்டத்தை அடுத்து, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் செயல்படும் 76 கொரோனா சோதனை மையங்களில், இதுவரை 5, 92,970 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன என்றும் இன்று ஒரே நாளில் 16,275 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று ஒரே நாளில் தமிழகம் முழுவதும் 604 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியதால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 16,999 ஆக உயர்ந்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: