பார்லே-ஜி பிஸ்கட் விற்பனை கொரோனா வைரஸ் ஊரடங்கு சமயத்தில் அதிகரிப்பு

Parle-G

பட மூலாதாரம், http://www.parleproducts.com

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த விதிக்கப்பட்ட ஊரடங்கு பல தொழில்களை முடக்கியிருந்தாலும், சில தொழில்கள் செழிப்படைய கைகொடுத்துள்ளது. அதில் ஒன்று பிஸ்கட், நூடுல்ஸ் உள்ளிட்ட பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் விற்பனை.

கோவிட்-19 ஊரடங்கு சமயத்தில் சாக்லேட்டுகள், பிஸ்கட்டுகள் உள்ளிட்டவற்றை தயாரிக்கும் பார்லே நிறுவனத்தில் 15-20% ஊழியர்கள் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் மார்கெட்டிங் மேலாளர் கிருஷ்ணராவ் புத்தா கூறுகிறார். ஆனால், அதன் விற்பனை அதிகரித்துள்ளது என்கிறார் அவர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தேவை அதிகரித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். பிபிசியின் நிதி ராய்க்கு கிருஷ்ணராவ் புத்தா அளித்த பேட்டியின் தொகுப்பு.

கேள்வி: கொரோனா ஊரடங்கு சமயத்தில் பார்லே - ஜி பிஸ்கட்டுகளின் விற்பனை இருந்தது?

இந்த ஊரடங்கு சமயத்தில் எங்கள் விற்பனை வழக்கமான அளவில் 80 % - 90 % இருந்தது. சந்தையில் பார்லே - ஜி பிஸ்கட்டுகளின் பங்கு 5% அதிகரித் திருக்கும் என்று நம்புகிறோம். தொண்டு நிறுவனங்கள் மற்றும் அரசுகள் மொத்தமாக வாங்கியதால் இது நிகழ்ந்துள்ளது.

விற்பனை குறித்த முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கவில்லை. இப்போது எங்களுக்கு இருக்கும் பெரிய சவால் மீண்டும் பழைய நிலையிலேயே உற்பத்தியைத் தொடங்குவதுதான்.

கேள்வி: கோவிட்-19 தொற்று உங்கள் தொழிலை எந்தளவிற்கு பாதித்துள்ளது? குறிப்பாக ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதா?

ஆம். கொரோனா வைரஸ் தொற்றால் 15 - 20% வரை ஊழியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பெரிதும் சவால் மிகுந்த தருணமே.

கேள்வி: தற்போது பலரும் வீட்டிலேயே முடங்கி இருக்கிறார்கள். பலரும் வேலை இழந்துள்ளனர். இதனால், பொருட்களை வாங்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்படுமா?

ஊரடங்கு காரணமாக வீட்டில் சமைத்த உணவையே மக்கள் சாப்பிட வேண்டியிருக்கிறது. வீட்டின் சாதாரண உணவை விடுத்து, சிறுவர்களும், பெரியவர்களும் கூட வெளியே விதவிதமான உணவை சாப்பிட ஆர்வமாக உள்ளனர்.

இதனால், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் தேவை அதிகரித்திருக்கிறது. வீட்டில் சாப்பிடுவதில் இருந்து வித்தியாசமாக பிஸ்கட்கள், உப்பு நிறைந்த தின்பண்டங்கள், நூடுல்ஸ் அல்லது உளர்ந்த பழங்கள் போன்ற உணவுகள் அவர்களை உற்சாகப்படுத்துகின்றன.

கேள்வி: அடுத்த 3 மாதங்களுக்கான தேவை எந்த மாதிரி இருக்கும்?

ஊரடங்கு விதிகள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாக சந்தையின் அதிக தேவைக்கு ஏற்ப எங்களால் ஈடுசெய்ய முடியவில்லை. மக்கள் பதற்றத்தில் பொருட்களை வாங்கி குவிப்பதால், சூப்பர் மார்கெட்டுகள் பொருட்கள் இல்லாமல் காலியாக இருக்கின்றன.

கேள்வி: கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள தாக்கத்தை எப்படி பார்க்கிறீர்கள்? மீண்டும் தொழில்கள் இயல்பு நிலைக்கு திரும்ப எவ்வளவு காலம் ஆகும்?

இதன் தாக்கம் தீவிரமாக இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். உலகம் முழுக்க இதன் பாதிப்பு உள்ளது. உணவு, கிருமிநாசினிகள், ஹேண்ட் வாஷ் போன்ற அத்தியாவசிய பொருட்கள் போன்ற விற்பனை அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், http://www.parleproducts.com

அதே சமயம், வீட்டு மனை வாங்குதல் மற்றும் விற்றல், சுற்றுலாத்துறை, ஆடை நிறுவனங்கள் இந்த கொரோனா பாதிப்பால் மோசமான தாக்கத்தை சந்தித்திருக்கின்றன. அவர்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தில் இருந்து மீண்டு வர குறைந்தது ஆறு மாதங்கள் ஆகும் என்று நினைக்கிறேன்.

கேள்வி: பொருட்களின் விலை எப்படி இருக்கிறது?

தற்போது வரை எந்த விலை உயர்வும் இல்லை. எண்ணெய், எரிபொருள், சர்க்கரை, கோதுமை மாவு போன்ற பொருட்களின் விலை உயர்வையும் நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், எங்களின் தயாரிப்புகளின் விலையை உயர்த்தும் யோசனையும் எங்களுக்கு இல்லை.

கேள்வி: அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் எந்த அளவிற்கு உதவியாக இருந்தது?

அரசாங்கம் ஓரளவிற்கு எங்களுக்கு உதவி செய்துள்ளது. 50 சதவீத ஊழியர்களுடன் தொழிற்சாலைகளை நடத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதனால், பொருட்களை தயாரிக்க முடிந்தது. ஆனால், ஒட்டுமொத்த உற்பத்தியில் இது பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேள்வி: மக்கள் நுகர்வதை அதிகப்படுத்த அரசு எந்த மாதிரியான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்?

எரிபொருள், எண்ணெய், மாவு, சர்க்கரை போன்றவற்றின் விலை உயராமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். அதேபோல வேலைவாயப்புகள் குறித்தும் அரசு கவனம் செலுத்த வேண்டும். வருமானம் இருந்தால்தான் நுகர்வோர் செலவழிக்க முடியும். பொருளாதாரத்தை மீண்டும் கட்டமைக்க இது உதவும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: