தமிழகத்தில் மேலும் 1927 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு: இன்றைய உலக எண்ணிக்கை என்ன?

coronavirus tamil nadu update today

பட மூலாதாரம், Getty Images

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 19 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநில சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள தகவல்களின்படி, கடந்த 24 மணி நேரத்தில் 1,927 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதில் 1,897 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். நான்கு பேர் வெளிநாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள். மீதமிருப்போர் வெளி மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்தவர்கள்.

ஆகவே இதுவரை தமிழ்நாட்டில் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,841ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,008 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 19,333 பேர் குணமடைந்துள்ளனர்.

தற்போது 17,179 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக மருத்துவமனைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

தமிழ்நாட்டில் தொற்று ஏற்பட்டுள்ள 1927 பேரில் 1,390 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். ஆகவே சென்னையில் மட்டும் இந்நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 25,937ஆக உள்ளது.

செங்கல்பட்டில் 182 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 33 பேருக்கும் ராணிப்பேட்டையில் 24 பேருக்கும் திருவள்ளூரில் 105 பேருக்கும் திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்டங்களில் தலா 23 பேருக்கும் திருச்சியில் 12 பேருக்கும் வேலூரில் 11 பேருக்கும் இந்நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 7 பேர் தனியார் மருத்துவமனையிலும் 12 பேர் அரசு மருத்துவமனைகளிலும் உயிரிழந்துள்ளனர். இதில் 4 பேர் கொரொனா தவிர வேறு எந்த உடல் நலப் பிரச்சனைகளும் இல்லாதவர்கள்.

உயிரிழந்தவர்களில் 16 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். 3 பேர் செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

தமிழ்நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 17,675 கொரோனா சோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டன. இதுவரை தமிழ்நாட்டில் 6,38,846 சோதனைகள் செய்யப்பட்டுள்ளன. தற்போது தமிழ்நாட்டில் 77 கொரோனா பரிசோதனை நிலையங்கள் செயல்பட்டுவருகின்றன.

கொரோனா வைரஸ் - உலக எண்ணிக்கை

புதன்கிழமை மாலை நிலவரப்படி கொரோனா வைரஸ் தொற்றால் உலக அளவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72.6 லட்சத்தைக் கடந்துள்ளதாக அமெரிக்காவில் உள்ள ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக தரவுகள் தெரிவிக்கின்றன.

கோவிட்-19 நோய்த்தொற்றால் உலக அளவில் இதுவரை 4 லட்சத்து 11 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்த நிலையில், சுமார் 34 லட்சம் பேர் இந்த தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, பிரிட்டன், இந்தியா ஆகிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்ட முதல் ஐந்து நாடுகளாக உள்ளன.

'ஹைட்ராக்சி குளோரோகுயின் மருந்தால் மலேசியாவில் உயிரிழப்பு குறைந்தது'

மலேசியாவில் இன்று புதிதாக இருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவிட்-19 நோயாளிகளின் எண்ணிக்கை 8,338ஆக அதிகரித்துள்ள நிலையில், சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 118ஆக அதிகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

மலேசியாவில் வைரஸ் தொற்றியவர்களில் சுமார் 84 விழுக்காட்டினர் குணமடைந்துள்ள நிலையில், பள்ளிகளை மீண்டும் திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

முதற்கட்டமாக, ஐந்து மற்றும் ஆறாம் படிவ பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வரும் 24ஆம் தேதி முதல் வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. மொத்தம் 2,440 பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 5 லட்சம் மாணவர்கள் பள்ளிக்குத் திரும்ப உள்ளனர்.

வைரஸ் தொற்றுப் பரவல் முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு மலேசியா தனது எல்லைகளைத் திறப்பது குறித்து பரிசீலிக்கலாம் என்றும், முதற்கட்டமாக சிங்கப்பூர், புரூனே, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுடன் பயணக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோயாளிகளுக்கு ஹைட்ராக்சி குளோரோகுயின் மாத்திரைகளை தொடர்ந்து அளித்து வருவதாக டாக்டர் நூர் ஹிஷாம் தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்கள் அந்நோயின் நான்கு மற்றும் ஐந்தாம் கட்டங்களுக்குச் செல்லாமல் இம்மருந்து தடுப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணொளிக் குறிப்பு,

ஒரே குடும்பத்தில் 18 பேருக்கு கொரோனா - அனைவரும் மீண்ட அதிசயம்

இதன் காரணமாகவே மலேசியாவில் கோவிட்-19 பலி எண்ணிக்கை குறைவாக உள்ளது என்றும் நூர் ஹிஷாம் சுட்டிக்காட்டினார்.

சிங்கப்பூரில் சமூகப் பரவல்

இன்று புதிதாக 451 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது உறுதியானதை அடுத்து சிங்கப்பூரில் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 38,965ஆக அதிகரித்துள்ளது.

இன்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகளில் 7 பேருக்கு சமூகப் பரவல் மூலம் வைரஸ் தொற்றியிருப்பதாகவும், 7 பேருக்குமே வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும் அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2ஆம் தேதி சிங்கப்பூரில் முடக்க நிலை கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதன் காரணமாக அங்கு வைரஸ் தொற்று பாதிப்பு சற்றே அதிகரித்திருப்பதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு இதுவரை 25,868 பேர் குணமடைந்துள்ளனர். பலி எண்ணிக்கை 25ஆக நீடிக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: