இந்தியா - சீனா எல்லை பதற்றம்: 'இந்தியாவின் ராணுவ பலம் சீனாவுக்கு புரிந்திருக்கிறது' - ஜெனரல் பிக்ரம் சிங்

கோப்புப்படம்

பட மூலாதாரம், Getty Images

சில வாரங்களுக்கு முன்பு இந்திய - சீன எல்லையில் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே தொடங்கிய பதற்றம் இரு நாட்டு ராணுவங்களையும் தங்கள் நிலைகளில் இருந்து சில கிலோ மீட்டர் தூரம் முன்னேற வைத்தது.

இரு தரப்பும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டினர். ஆனால், சில நாட்களுக்கு முன்பு தொடங்கிய எல்லைப் பேச்சுவார்த்தையால் சுமூக நிலை திரும்புவது போல தெரிகிறது.

இதற்கு மத்தியில் பிபிசி செய்தியாளர் ஜுஹல் புரோஹித்துக்கு பேட்டியளித்தார் இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனெரல் பிக்ரம் சிங், இந்திய சீன எல்லையில் இருக்கும் பல பகுதிகளை இந்திய ராணுவம் நன்றாக அறிந்து வைத்திருக்கிறது என்றும் சீன ராணுவம் இந்திய எல்லைக்குள் நுழைந்தால் அதற்கு பதிலடி தரும் வகையிலான ராணுவ நடவடிக்கைகளை எடுக்க இந்திய ராணுவத்துக்கும் தெரியும் என்கிறார். அவருடனான பேட்டியில் இருந்து.

பட மூலாதாரம், DESHAKALYAN CHOWDHURY

கேள்வி: இந்தியாவில் பல முறை இந்திய சீன ராணுவத்திடையே பதற்றமான சூழல்கள் நடந்ததை நாங்கள் பார்த்துள்ளோம். அதுவும், நீங்கள் இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்த காலத்தில் டெப்சாங், ச்சுமர் போன்ற இடங்களில் எல்லை பதற்றத்தை பார்த்தோம். ஒவ்வொரு முறை பேச்சுவார்த்தை நடத்தியதும் சீன தரப்பு பின்வாங்குகிறது. இந்த விவகாரத்தில் வெறும் தெளிவுரை மட்டும் வழங்கி விட்டு இந்தியா விலகி நிற்பதாக மக்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. அதை விட வித்தியாசமான நடவடிக்கையை நாடு செய்ய வேண்டும் என அவர்கள் எதிர்பார்க்கிறார்களே?

பதில்: இந்த எல்லை பதற்றம் குறித்து தவறான அபிப்ராயத்தை மக்கள் கொண்டிருப்பதாக கருதுகிறேன். இது போல ஏராளமான எல்லை பதற்றங்கள் ஊடக வெளிச்சத்துக்கு தெரியாமல் போகின்றன. அதுவும் சீன பிராந்தியமாக அழைக்கப்படும் பிராந்தியங்களில் அவை நடந்துள்ளன. சில நேரங்களில் நமது படையினரும் அவர்கள் வசம் இருப்பதாக நம்பப்படும் பகுதிகளுக்கு செல்கிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

உதாரணமாக, பாங்கோங் த்சோ பகுதியில் ஃபிங்கர் ஃபோர் முதல் ஃபிங்கர் எய்ட் வரை உள்ள பகுதிகளில் நமது படையினர் முன்னேறி சென்றிருக்கிறார்கள். அதுபோலவே, மிகவும் பரந்து விரிந்த அசல் எல்லை கோடு பகுதியில் அவர்களும் தங்கள் பகுதி என நினைத்து வரலாம். சீனாவில் அத்தகைய செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு கட்டுப்பாடு இருப்பதால் அவை அங்கு வெளிவருவதில்லை.

இப்போது சீன படையினர் முன்னேறி வந்திருக்கலாம். நமது நாட்டில் ஜனநாயக மரபுப்படி, ஊடகங்கள் எல்லை பகுதிவரை செல்லலாம். அதனால் அங்கு நடப்பவை வெளி உலகுக்கு தெரிகிறது. இந்திய தரப்பில் மறைப்பதற்கு ஏதுமில்லை. ஆனால், தனிப்பட்ட முறையில் என்னை கேட்டால், வித்தியாசமான நடவடிக்கையை நாம் கையாளத் தேவையில்லை.

ஆனால், நமது தேசிய பாதுகாப்பு படை பலத்தை பெருக்கி, எல்லை தாண்டிய அந்நியப் படைகளின் முன்னேற்றங்களை தடுக்க வேண்டும். அந்த பலம் நம்மிடம் இருக்கிறது. இந்த பதற்றம் ஏன் பேச்சுவார்த்தைக்குப் பிறகு தீர்க்கப்படுகின்றன, ஒரு மோதலாக ஏன் அது விரிவடைவதில்லை என்பதை பார்க்க வேண்டும். அதற்கு காரணம்க பரஸ்பரம் புரிந்துணர்வு. இந்தியாவும் பலம் பொருந்திய படையைக் கொண்டுள்ளது என்பதை சீனா புரிந்திருக்கிறது.

1993 முதல் 2013-ஆம் ஆண்டுவரை செய்து கொண்ட உடன்பாட்டின்படி, களத்தில் கடுமையான நிலைப்பாடும், பலப்பிரயோகத்தை தவிர்க்க வகை செய்யும் வழிகாட்டுதல் முறைகளும் அமலில் உள்ளன. எனவே, இதுபோன்ற எல்லை பதற்றங்கள், ஏற்படும்போதெல்லாம், அவை ஒரு தோட்டா கூட துப்பாக்கியில் இருந்து வெளியேறாமல் தீர்க்கப்படும். அதில் எனக்கு சந்தேகமே இல்லை.

கேள்வி:- முன்னாள் வெளியுறவு செயலாளர் ஷ்யாம் சரண், சீன படைகளின் முன்னேறும் செயல்பாட்டை ராணுவ நடவடிக்கைக்கு மூலம் தடுக்க, இந்தியா விரும்பவில்லை அல்லது அதனால் முடியவில்லை என எழுதியிருக்கிறார். மேலும், தெளிவில்லாத எல்லை பகுதியில் நமக்குள்ள கேந்திரிய இருப்பை வாய்ப்பாக வைத்து நமது பகுதிகளை கோரலாம் என்றும் அவர் கூறியிருக்கிறார். இதற்கு உங்கள் கருத்து என்ன?

பதில்:- அவரது கருத்தை பதிவு செய்ய அவருக்கு உரிமை உண்டு. அவரது அறிவார்ந்த ஞானத்தை மதிக்கிறேன். ராணுவ பணி என்பது அந்தந்த நாடுகளின் அரசியல் பார்வையை பொருத்து நடக்கிறது. அந்த அரசியல் கட்டமைப்புக்குள்தான் ராணுவம் இயங்குகிறது.

கடுமையான நடவடிக்கை எடுத்தால் ஏதாவது விபரீதமாகுமோ போன்ற தாக்கத்தை ஆராய வேண்டும். வெவ்வேறு பகுதிகளில், இதை செய்தால் இதை தருகிறேன் என்பது போல நடக்கவேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் சீன வெளியுறவு அமைச்சகம், இந்த பிரச்சனையை சுமூகமாக தீர்க்க விரும்புகிறோம் என தகவல் தருகிறது.

டெல்லியில் உள்ள சீன தூதர் அதை அறிவிக்கிறார். இத்தகைய அறிவிப்பு வரும்போது, ஏற்கெனவே பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டபடி எல்லை பகுதியில் தனது படைகளை முன்னேறாமல் சீனா பார்த்துக் கொள்ள வேண்டியதை வலியுறுத்த வேண்டியது நமது பொறுப்பு. அந்த வாய்ப்பை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என கருதுகிறேன்.

கேள்வி:- எல்லை பதற்ற விவகாரத்தில் சீன ஒருவேளை பேச்சுவார்த்தைக்கு உடன்படாவிட்டாலோ, ஒத்துழைக்க மறுத்தாலா, அப்போது பதிலடி தரும் பலப்பிரயோகத்தை இந்தியா பயன்படுத்தலாம் என நாங்கள் கருதலாமா?

பதில்:- நிச்சயமாக. அதுவும் ஒரு வாய்ப்புதான். ஏனென்றால், எல்லை பதற்றம் தொடர்பான அறிவிப்பு ராஜீய முறையில், இந்தியாவில் உள்ள சீன தூதரகம் மூலம் நாம் எதிர்வினையாற்றும் முன்பே வந்து விட்டது. அந்த வாய்ப்புக்கும் நாம் தயாராக இரு்கக வேண்டும்.

ஆனால், இந்தியாவுடன் எந்த வகையிலும் மோதல் போக்கை சீனா கடைப்பிடிக்கும் என நான் கருதவில்லை. ஏனென்றால் அத்தகைய ஒரு செயல்பாடு, இரண்டாயிரத்து நாற்பத்து ஒன்பதாம் ஆண்டில் உலக முன்னோடி வல்லராகும் தனது ஆசையை, பயணத்தை, நோக்கத்தை நீர்த்துப்போகச்செய்து விடும் என சீனா அறிந்திருக்கிறது என நான் கருதுகிறேன்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: