IIT-Madras: இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்த சென்னை ஐஐடி

சென்னை ஐஐடி

பட மூலாதாரம், FACEBOOK

இந்த ஆண்டின் (2020) இந்தியாவின் சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. பல பிரிவுகளில் தமிழகத்தைச் சேர்ந்த கல்லூரிகளும் பல்கலைக்கழகங்களும் சிறந்த தரவரிசையைப் பெற்றுள்ளன.

இந்தியாவில் உள்ள சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியல் நேற்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலால் வெளியிடப்பட்டது.

அதில், ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலில் சென்னையில் உள்ள ஐஐடி முதலிடத்தைப் பிடித்துள்ளது. சென்னை அண்ணா பல்கலைக்கழகம் 20வது இடத்தைப் பிடித்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகம் 41வது இடத்தையும் மதுரை காமராசர் பல்கலைக்கழகம் 84வது இடத்தையும் பிடித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக சிறந்த கல்வி நிலையங்களின் பட்டியலில் முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்வி நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளன. புதுடெல்லியிலிருந்து 6 கல்வி நிலையங்களும் மகாராஷ்டிராவிலிருந்து 12 கல்வி நிலையங்களும் இடம்பெற்றுள்ளன.

பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை கர்நாடகத்தில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் சயின்ஸ் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகம் 12வது இடத்தைப் பிடித்துள்ளது. முதல் நூறு இடங்களுக்குள் தமிழகத்தைச் சேர்ந்த 18 பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இதற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவைச் சேர்ந்த 13 பல்கலைக்கழகங்கள் இடம்பிடித்துள்ளன.

பொறியியல் கல்வி நிறுவனங்களைப் பொறுத்தவரை சென்னை ஐஐடி நாட்டிலேயே முதலிடத்தைப் பிடித்துள்ளது. திருச்சிராப்பள்ளியில் உள்ள என்ஐடி 9வது இடத்தையும் அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தையும் பிடித்துள்ளன. இந்தியாவின் முதல் நூறு இடங்களுக்குள் தமிழ்நாட்டைச் சேர்ந்த 18 கல்லூரிகளும் முதல் 200 இடங்களுக்குள் 35 கல்வி நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன.

நிர்வாகப் படிப்பைப் பொறுத்தவரை அகமதாபாதில் உள்ள ஐஐஎம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதில் சென்னை ஐஐடி 14வது இடத்தையும் திருச்சி ஐஐஎம் 15வது இடத்தையும் பிடித்துள்ளன. இதில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ள 75 கல்லூரிகளில் தமிழ்நாட்டிலிருந்து 8 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.

மருந்தியல் படிப்பைப் பொறுத்தவரை டெல்லியில் உள்ள ஜாமிய ஹம்தார்த் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த தனியார் கல்லூரிகள் இந்தப் பிரிவில் அதிக இடங்களைப் பிடித்துள்ளன. மொத்தம் தரவரிசைப்படுத்தப்பட்ட 75 கல்லூரிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 கல்லூரிகள் இடம்பிடித்துள்ளன.

மருத்துவக் கல்லூரிகளில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்விக் கழகமே இந்தியாவில் முதலிடத்தை வகிக்கிறது. மூன்றாவது இடத்தில் வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி இருக்கிறது. சென்னை மருத்துவக் கல்லூரி 12வது இடத்தைப் பிடித்துள்ளது. தரவரிசைப் படுத்தப்பட்டுள்ள 40 கல்லூரிகளில் 8 கல்லூரிகள் தமிழ்நாட்டில் உள்ளன. 2 கல்வி நிலையங்கள் புதுச்சேரியில் உள்ளன.

கல்லூரிகளைப் பொறுத்தவரை டெல்லியில் உள்ள மிரிண்டா ஹவுஸ் கல்லூரியே முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. சென்னை மாகாணக் கல்லூரி ஐந்தாவது இடத்தையும் லயோலா கல்லூரி 6வது இடத்தையும் பிடித்துள்ளது.

முதல் நூறு இடங்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 32 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. புதுச்சேரியில் உள்ள 2 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. கேரளாவில் இருந்து 20 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன. டெல்லியிலிருந்து 29 கல்லூரிகள் இடம்பெற்றுள்ளன . முதல் நூறு இடங்களில் தில்லி, தமிழ்நாடு, கேரள மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரிகள் 81 இடங்களைக் கைப்பற்றியுள்ளன.

சட்டப்பல்கலைக்கழகங்களைப் பொறுத்தவரை, தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த பல்கலைக்கழகமும் இதில் இடம்பெறவில்லை. பெங்களூரில் உள்ள நேஷனல் லா ஸ்கூல் ஆஃப் இந்தியா யுனிவர்சிடி முதலிடத்தைப் பிடித்துள்ளது.

கற்பித்தல், கற்றுக்கொள்ளுதல், வளம், ஆய்வு, புரொஃபஷனல் நடைமுறைகள், எல்லோரையும் சென்றடைதல், கல்வி நிலையம் குறித்த பார்வை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த தரவரிசைப் பட்டியல் ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது.

இந்தப் பட்டியலை வெளியிட்ட மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சரிடம், இந்தியக் கல்வி நிறுவனங்கள் ஏன் சர்வதேச தரப்பட்டியலில் இடம்பெறுவதில்லையெனக் கேட்டபோது, அந்தத் தரவரிசைகளில், 'கல்விநிலையம் குறித்த கருத்திற்கு' (perspective) கூடுதல் முக்கியத்துவம் தரப்படுவதாகத் தெரிவித்தார். நாம் மிகக் கடுமையான தரக்கட்டுப்பாடுகளுடன், தரவரிசைப் பட்டியலை வெளியிடுவதால், நம்முடைய பட்டியலில் இடம்பெற வெளிநாட்டு நிறுவனங்களும் விண்ணப்பிக்கும் காலம் வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் இடம்பெற கல்வி நிலையங்கள்தான் விண்ணப்பிக்க வேண்டும். கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் கூடுதலாக 20 சதவீத கல்விநிலையங்கள் விண்ணப்பித்துள்ளன. முதல் முறையாக இந்த ஆண்டு பல் மருத்துவக் கல்லூரிகளும் தரவரிசைப்படுத்தப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: